வவுனியாவிற்கு நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தர இருந்த போதும் திடீர் என அவரது பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா, கொக்குவெளி பிரதேசத்தில் இராணுவத்திற்கு என அமைக்கப்பட்ட வீடுகளை கையளித்தல் மற்றும் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கு அமைத்த வீட்டினை கையளித்தல் ஆகியவற்றுக்காக நாளை 3 ஆம் திகதி ஜனாதிபதி வருகை தருவார் என அறிவுறுத்தப்பட்டு அதற்கான வேலைகள் மற்றும் பாதுக்காப்பு ஏற்பாடுகள் வவுனியாவில் தீவிரமாக இடம்பெற்றது.

இன்று பிற்பகல் வவுனியாவில் பரவலாக பொலிஸ் பாதுகாப்புக்கள் போடப்பட்ட போதும் ஒரு மணித்தியாலத்திற்குள் அப்பாதுகாப்புக்கள் அகற்றப்பட்டன. ஜனாதிபதியின் வருகை ரத்துச் செய்யப்பட்டதையடுத்தே பொலிஸ் சோதனைகள், பாதுகாப்புக்கள் அகற்றப்பட்டதாக அறியமுடிகிறது.

இதேவேளை, நாளை திட்டமிடப்பட்ட குறித்த நிகழ்வுக்கு பாதுகாப்புச் செயலாளர் கலந்து கொண்டு அந்த வீடுகளை கையளிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

முன்னதாக யாழில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கியைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினை காரணமாக வடபகுதி விஜயத்தை ஜனாதிபதி ரத்துச் செய்யக் கூடும் என முன்னரே சில செய்திகள் வெளியாகி இருந்தன.

இருப்பினும் வவுனியாவில் முன்னாள் ஜனாதிபதி காலத்தில் குடியேற்றம் செய்யப்பட்ட கலாபேபஸ்வேவ, நாமல்புர போன்ற பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஜனாதிபதிக்கு முன் நடத்த திட்டமிட்டமையால் தான் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக மேலும் சில தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *