பிரித்தானியா நாட்டில் குடியேறிய இலங்கை தமிழர் ஒருவர் அளவுக்கு அதிகமாக பலவகை போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பிறந்த பிரசாந்த் பேரின்பராஜா(20) என்ற வாலிபர் பிரித்தானியாவில் குடியேறி Worcester என்ற நகரில் தனது பெற்றோர் மற்றும் சகோதரி, சகோதரருடன் வசித்து வந்துள்ளார்.

Birmingham நகரில் கல்லூரி படிப்பதை தொடர்ந்து வந்த இவருக்கு நண்பர்கள் ஏராளம். இந்நிலையில், 2016ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை கோலாகலமாக கொண்டாட நண்பர்களுடன் லிவர்பூல் நகருக்கு சென்றுள்ளனர்.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிய நண்பர்கள் விதவிதமான போதை பொருட்களை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், பிரசாந்த் கஞ்சா, கொக்கைன் மற்றும் ஆழ்ந்த பரவசத்தில் ஆழ்த்தும் ‘எக்ஸ்டஸி’ என்ற மருந்தை எடுத்துக்கொண்டது மட்டுமில்லாமல் அளவுக்கு அதிகமாக மதுவும் அருந்தியுள்ளார்.

இரவு முழுவதும் கொண்டாட்டத்தில் இருந்தபோது பிரசாந்தின் உடல்நிலை மோசமாகி ஒருவித மயக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பிரசாந்தை பார்த்த நண்பர்கள் ‘அவருக்கு போதை தான் அதிகமாகிவிட்டது. சிறிது நேரம் குளியலறையில் குளித்தால் சரியாகிவிடும்’ என நினைத்து பிரசாந்தை குளியலறையில் நிறுத்தி சிறிது நேரம் குளிக்க வைத்துள்ளனர்.

பின்னர், சரியாக காலை ஒன்பது மணி நேரத்தில் அனைவரும் தூங்குவதற்காக படுக்கைக்கு சென்றுள்ளனர்.

நண்பர்கள் அனைவருக்கும் ஒரே அறை தான். பிரசாந்த் படுக்கையில் படுத்ததும் உறங்கிவிட்டதாக நண்பர்கள் எண்ணி அவர்களும் உறங்கியுள்ளனர்.

மாலை 5.30 மணியளவில் எழுந்த நண்பர்கள் பிரசாந்தை எழுப்ப சென்றுள்ளனர். அப்போது பிரசாந்த் படுக்கையை விட்டு கீழே விழுந்து தரையில் படுத்திருந்துள்ளார். இதனை கண்ட நண்பர்கள் பிரசாந்தை தட்டி எழுப்பியுள்ளனர். ஆனால், அவரிடம் எந்த அசைவும் இல்லாததால் நண்பர்கள் பிரசாந்தின் உடலை திருப்பியுள்ளனர். அப்போதும் அசைவு எதுவும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக அவசர மருத்துவ வாகனத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

சரியாக 6 மணியளவில் அறைக்கு வந்து பிரசாந்தை சோதனை செய்த பிறகு ‘அவர் ஏற்கனவே இறந்து விட்டார்’ என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை லிவர்பூல் கோரோனர் நீதிமன்றத்திற்கு அண்மையில் வந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு பிரசாந்தின் தந்தையான பேரின்பராஜா ராஜரத்தினம், அவருடைய மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளிட்டவர்கள் வந்துள்ளனர்.

உறவினர்களுக்கு விசாரணை அறிக்கை புரியவேண்டும் என்பதால், உயிரிழந்த பிரசாந்தின் சகோதரர் தமிழில் மொழிபெயர்த்து வாசித்துள்ளார்.

அப்போது, ‘உயிரிழந்த பிரசாந்தின் மரணத்திற்கு எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது’ என வாசிக்கும்போது பிரசாந்தின் தாயார் கதறி அழுதுள்ளார்.

பிரசாந்தின் சகோதரர் மற்றும் சகோதரி பேசியபோது,

‘இதற்கு முன்னர் பிரசாந்திற்கு நிச்சயமாக குடிப்பழக்கமோ, போதை மருந்தை எடுத்துக்கொள்ளும் பழக்கமோ இல்லை. நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அவர் இப்படி போதை மருந்தையும் மதுவையும் அருந்தியுள்ளதாக’ வாக்குமூலம் அளித்தனர்.

ஆனால், இந்த மரணத்தை விசாரணை செய்து வரும் அனிதா பரத்வாஜ் அந்த வாக்குமூலத்தை ஏற்க மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக அனிதா பரத்வாஜ் பேசியபோது, பிரசாந்த் இதற்கு முன்னர் போதை பொருட்களை எடுத்தாரா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது.

அதேசமயம், பிரசாந்தின் நண்பர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கான எந்த ஆதாரங்களும் பொலிசாருக்கு கிடைக்கவில்லை.

எனவே, பிரசாந்தின் மரணம் ஒரு விபத்து தானே தவிர கொலை அல்ல’ என அனிதா பரத்வாஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தற்போது நீதிமன்றத்திலும் பிரசாந்த் அதிக போதை மருந்துக்களை எடுத்துக்கொண்டதால் தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *