(ஆர்.யசி)

மஹிந்த ராஜபக்ஷவிற்காக அன்று பந்தம் பிடித்தவர்கள் இன்றும் அவருக்கு பந்தம் பிடித்துகொண்டு நாட்டை குழப்புகின்றனர். அவற்றிற்கு அஞ்சி நாட்டை குழப்ப நாம் இடமளிக்க மாட்டோம்.

மஹிந்தவுக்காக மேலமடிக்கும் நபர்களுக்கு நாம் பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை.பிரிவினையுடன்  நாட்டில் ஆட்சிசெய்ய நாம் தயாராகவும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் வடிக்கும் நபர் நான் இல்லை. எதிர்காலத்தை எண்ணியே எனது வேலைத்திட்டம் அனைத்தும் அமைந்திருக்கும். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டை சீரழிக்க நான் இடமளிக்க மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று  நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் மீள் நிர்மான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் கட்சி ஆராய்ந்து வருகின்றது. கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த விடயங்கள் தொடர்பில் நாம் கருத்துகளை வெளிப்படுத்துவோம். புதிய இலங்கைக்கு ஏற்ற வகையில் கட்சியை மாற்றியமைக்கும் வகையில் தான் இந்த வேலைத்திட்டங்களை நாம்  மேற்கொண்டு வருகின்றோம். எமது கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளனர் அவர்களின் வழிகாட்டல் உள்ளது. அதேபோல் கட்சியில் இரண்டாம் நிலையில் உள்ள தலைமைகளுக்கு பொறுப்புகளை கையளித்து நாட்டை முன்னெடுத்து செல்லும் தலைமைத்துவத்தை உருவாக்கி கொடுத்துள்ளோம். அதேபோல் மூன்றாம் நிலையில் உள்ள இளம் தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டல் மற்றும் பொறுப்புகளை பாரமளிப்போம். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

நாட்டில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் கடந்த 2014ஆம் ஆண்டு நாம் தீர்மானம் எடுத்தோம். அதற்கமைய கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு முழுமையான ஆதரவை வழங்கினோம். அதேபோல் கடந்த பொதுத் தேர்தலின் போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கினோம். அந்த முயற்சிகள் சரியாக முன்னெடுத்து செல்லப்படுகின்றது. அவ்வாறான நிலையில் இப்போது நாம் மேலும் பலமான வகையில் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *