(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை)

கடந்த 19-03-2016ம் திகதி சனிக்கிழமை மு.காவின் தேசிய மாநாடு பாலமுனையில் மிகவும் அதிகமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிக அதிகமான சனத் திரளோடு நடை பெற்று முடிந்திருந்தது.இத் தேசிய மாநாட்டிற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் முக்கிய புள்ளிகள் பலர் கலந்து கொண்டிருந்தமை இத் தேசிய மாநாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

இவ்வாறு நாட்டின் முக்கிய புள்ளிகள் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களிலேயே ஒன்றிணைவார்கள்.மு.கா இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் ஒரு சிறந்த உறவைப் பேணி வருவதை இம் மாநாட்டு தெளிவாக கூறி நிற்பதோடு மு.கா இந்த நாட்டிலுள்ள கட்சிகளில் மிகவும் முக்கியமான கட்சியாகும் என்பதையும் இவ் விடயம் புலனாக்குகின்றது.

மிகச் சிறப்பான திட்டங்களோடும் அதிகமான செலவுகளுடனும் மு.கா இம் மாநாட்டை நடாத்திருந்தது.மு.காவின் சிறகை உடைத்து கூட்டில் அடைக்க எங்கே காலம் கனியுமென எதிர்பார்த்திருந்த மு.காவின் அத்தனை எதிரிகளும் சொல்லி வைத்தாப் போல் தங்களது எதிர்ப்பு ஏவுகணைகளை அள்ளி வீசினர்.மாநாட்டுக்கு சமூகம் தந்திருந்த மக்கள் வெள்ளத்தைக் கண்ணுற்ற போது  இவர்கள் வீசிய ஏவுகணைகள் அனைத்தும் புஸ்வனமாகிருந்தமையை அறியக் கூடியதாக இருந்தது.

 

எனது கணிப்பின் அடிப்படையில் குறித்த தேசிய மாநாட்டுக்கு 20000 – 25000 மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.ஒரு சிறுபான்மை இனக் கட்சி அதிலும் குறிப்பாக ஒரு முஸ்லிம் கட்சி இத்தனை பாரிய சனத்திரளை ஒன்று கூட்டுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல.இதன் காரணமாக இம் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த பிரதம அதிதிகளான ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முகத்தில் ஒரு விதமான ஆச்சரியத்தையும் அறியக் கூடியதாக இருந்தது.இத்தனை சனத்திரளுக்கு அப்படி என்ன தான் காரணம்? அஷ்ரப்பின் இரத்தத்தில் முளைத்த மரத்தின் மோகம் அவ்வளவு இலகுவில் இலங்கை முஸ்லிம்களின் மனங்களை விட்டகலாது.இம் மாநாட்டை செவியுற்ற வெளிநாடுகளில் தொழில் நிமிர்த்தமுள்ள மு.கா ஆதரவாளர்கள் சிலர் இம் மாநாட்டிற்கு வெளி நாடுகளிருந்தும் வருகை தந்திருந்திருந்தனர்.நானறிந்த ஒருவர் கொரியாவிலிருந்தும் இன்னுமொருவர் கட்டாரிலிருந்தும் வருகை தந்திருந்தார்.இவ்வாறான மு.காவின் ஆதரவாளர்கள் இருக்கும் வரை மு.காவின் மக்கள் செல்வாக்கை அழிப்பதென்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாகவே அமையும்.பொதுவாக ஒரு குறித்த நபரின் வளர்ச்சியில் அவரின் எதிரிகளின் வகிபாகம் மிக முக்கியமானதாக இருக்கும்.மு.கா தனது பக்கத்திலிருந்து செய்த விளம்பரங்களை விட பல மடங்கு இலவச விளம்பரங்களை இம் மாநாட்டிற்கு மு.காவின் எதிரிகள் செய்திருந்தனர்.இதன் காரணமாகவும் மக்களிடத்தில் இம் மாநாட்டிற்கான எதிபார்ப்புகள் மிக அதிகமாக இருந்தன.

 

இம் மாநாட்டிற்கு எதிராக மு.காவின் முக்கிய புள்ளிகள் சிலர் சதி செய்து கொண்டிருப்பதான கதைகள் அசுர வேகத்தில் பரவி இருந்தன.இச் சதியை முன்னெடுப்பவர்களாக நம்பப்படும் பிரதான இருவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் இம் மாநாட்டில் குழப்பங்கள் ஏதும் இடம்பெறலாமென அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.இதன் காரணமாகவும் இம் மாநாட்டிற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பிருந்தது.எதிர்பார்ப்புகள் நேராக இருந்தாலும் மறையாக இருந்தாலும் அங்கே மக்களை எதிர்பார்க்கலாம்.எதிர்ப்பலைகள்  மிக வேகமாக வீசியதன் காரணமாக எங்கே தங்களது மாநாடு தோல்வியைத் தழுவி விடுமோ என்ற அச்சத்தில் மு.காவினரும் மிகவும் உத் வேகத்துடன் செயற்பட்டிருந்தனர்.இன்னும் மு.கா ஒரு தேசியப்பட்டியலை உரிய நபரிற்கு வழங்காது எத்தம் காட்டி வருகிறது.

இந்தத் தேசியப் பட்டியலை கொத்திச் செல்ல நினைப்பவர்கள் தங்களுக்குள்ள மக்கள் செல்வாக்கை இச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக வெளிக்காட்டுவது தேசியப்பட்டியலை தனதாக்குவதில் தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.இதன் காரணமாக தேசிய பட்டியலைக் குறி வைத்துள்ளவர்கள் தங்களது மக்கள் செல்வாக்கை நிரூபிக்குமுகமாக இம் மாநாட்டிற்கு பஸ் பஸ்ஸாக தங்களது ஆதரவாளர்களை அள்ளி இறைத்தனர்.குறிப்பாக குருநாகல்,கம்பகா,வன்னி,கல்குடா ஆகியவற்றிலிருந்து வந்த பலரினது வாய்களிலிருந்து தேசியப்பட்டியலை நோக்கிய சொல்லாடல்களை அவதானிக்க முடிந்தது.

இம் மாநாட்டிற்கு வட மேல் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா தலைமையில் குருநாகலில் இருந்து 38 பஸ்களிலும் 8 தனிப்பட்ட வாகனங்களிலும் மு.காவின் ஆதரவாளர்கள்  வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதில் சுமார் 6 பஸ்களில் பெண்களும் வருகை தந்திருந்தமை இவ் வருகையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

கடந்த 17-01-2016ம் திகதி சனிக்கிழமை அ.இ.ம.காவின் பேராளர் மாநாடு குருநாகலில் நடைபெற்றது.இதில் தேசிய ரீதியில் அ.இ.ம.காவின் சுமார் ஆயிரமளவிலான ஆதரவாளர்கள் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.இவ் மு.காவின்  மாநாட்டிற்கு குருநாகலிலிருந்து மாத்திரம் 1200 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதை கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுடன் முடிச்சுப் போட்டுப் பார்க்கும் போது கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குருநாகலில் வட மேல் மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்சாவிற்கு ஆசனம் வழங்கப்பட்டிருந்தால் டொக்டர் ஷாபியை விட றிஸ்வி ஜவஹர்சாவிற்கு வெற்றி பெறுவதற்கான சாதகத் தன்மை அதிகம் என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

 

இத் தேசிய மாநாட்டின் வெற்றியைத் தடுப்பதற்கு ஓரிரண்டு சதிகள் அல்ல ஓராயிரம் சதிகள் மு.காவிற்கு உள்ளும் புறமும் மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் அரங்கேறிருந்தன.நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை கையளிக்க நடவடிக்கை எடுத்தல்,ஒலுவில் துறைமுகத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய தீர்வு கேட்டல்,சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுத்தரக் கோரல் போன்ற பல்வேறு விடயங்களைக் கிளறி மக்களை மு.காவிற்கு எதிராக திசை திருப்ப முயற்சித்தனர்.ஒலுவில் துறைமுகத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய தீர்வு வழங்கக் கோரி ஒலுவில் பூராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக் கொடுக்காததை காரணம் காட்டி சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் முயன்றனர்.இவைகள் அனைத்தும் மக்களிடையே சிறிதும் தாக்கம் செலுத்திருந்ததாக அறிய முடியவில்லை.

 

இம் மாநாடு ஏற்பாடாகிருந்த சமகாலப்பகுதியில் அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயத்தை கல்முனைக்கு இடமாற்றிருந்தனர்.இது அக்கரைப்பற்று மக்களை மு.காவிற்கு எதிராக அணி திரளச் செய்ய மு.காவின் எதிரிகளுக்கு மிகவும் சாதகமாய் அமைந்திருந்தது.குறித்த மாநாடு நடைபெற்றதற்கு முதல் நாள் வெள்ளிக் கிழமை அக்கரைப்பற்றில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மிகவும் வெற்றிகரமாக பலத்த சவால்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து இவ் ஆர்ப்பாட்டங்களை துணிந்து நடாத்திய முன்னாள் அக்கரைப்பற்று பிரதி மேயர் சபீசின் வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.குறித்த மாநாடு ஏற்பாடாகிருந்த இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றும் அக்கரைப்பற்று மக்களை குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதை விட்டும் தடுத்திருந்தது.இம் மாநாட்டிற்கு மு.காவின் மாகாண சபை உறுப்பினர் தவம் கலந்து கொள்ளாததிலிருந்து இவ் அக்கரைப்பற்று நிகழ்வுகள் எந்தளவு தாக்கம் செலுத்தியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

இம் மாநாடு விடயத்தில் மு.காவிற்கு எத்தனையோ சவால்கள் வந்த போதும் அத்தனையையும் தகர்த்தெறிந்த மு.காவால் அக்கரைப்பற்று எதிர்ப்புக்கு முன் நின்று பிடிக்க முடியாமல் போனதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.இதற்கு பல காரணங்கள் இருப்பினும் அக்கரைப்பற்றில் அதாவுல்லாஹ்வின் செல்வாக்கும் பிரதான காரணமாகும்.அக் குறித்த தினம் மு.கா அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தை ஜனாதிபதி,பிரதமர் கொண்டு திறப்பு விழாச் செய்ய ஏற்பாடு செய்திருந்தது.தகுந்த பாதுகாப்பின்மையை காரணம் காட்டி இந் நிகழ்விற்கு ஜனாதிபதி,பிரதமர் கலந்துகொள்ளமாட்டர்கள் எனக் கூறப்பட்டது.ஜனாதிபதி,பிரதமர் கலந்து கொள்ளாது போனாலும் மு.கா அதனைத் திறந்திருக்கலாம்.அன்று மு.கா அக்கரைப்பற்று பக்கம் தங்களது முகத்தை சிறிதும் திருப்பாமை அவர்களது இயலாமையையும் தோல்வியையும் எடுத்துக்காட்டுகிறது.

 

மேலுள்ளவைகள் மு.காவிற்கு வெளியிலிருந்து வந்த எதிர்ப்பலைகள்.மு.காவிற்கு உள்ளிருந்தும் பல எதிர்ப்புகள் கிளம்பிருந்தன.எம்மோடு நேரடியாக களத்தில் நின்று மோதும் எதிரியை விட எம்மோடு நண்பனாக சுற்றி புற முதுகில் குத்த வரும் எதிரியுடன் மோதுவது தான் மிகவும் கடினமானது.தேசிய மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தட புடல் என்று நடந்து கொண்டிருந்த போது மு.காவின் செயலாளர் நாயகம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அவ் அறிக்கையில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை மு.கா சாக்குப் போக்குச் சொல்லி அலக்களிப்பதாக வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.மேலும்,இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதி என்பதால் அவரும் இது தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டுமென மிகவும் கடுமையான தொனியில் குறிப்பிட்டிருந்தார்.

 

இச் சந்தர்ப்பத்தில் மு.காவின் செயலாளர் நாயகத்தினுடைய இவ் அறிக்கை தேசிய மாநாட்டிற்க்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தவல்லது.இவ் அறிக்கை சாய்ந்தமருது மக்களை உணர்ச்சி வசப்படுத்தி கிளர்ந்தெழச் செய்யவும் வழிகோலும்.அம்பாறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருந்தால் பாதுகாப்பு காரணங்களால் பிரதமர்,ஜனாதிபதி வருகைகளும் தடைப்பட்டிருக்கலாம்.இவ் அறிக்கையை பிரதமரிடம் கொண்டு செல்லும் போது தனது வாக்குறுதியை நிறைவேற்றாமையினால் பிரதமர் குறித்த நிகழ்வில் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு தயக்கம் காட்டவும் ஏதுவாக அமையும்.

குறித்த அறிக்கை மு.காவின் செயலாளர் நாயகத்திடமிருந்து வந்தமையால் இதன் மீது கொண்ட சிந்தனை ஒரு படி மேல் காணப்படும்.தங்களது ஒரு நிகழ்விற்கு அழைத்துவிட்டு இவ்வாறு அவமானப்படுத்துவதை யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு மு.காவின் செயலாளர் மு.காவில் தனக்குள்ள பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு அறிக்கை விட்டிருந்தால் தனது கனவான் அரசியலை மக்களிடையே தொடர்ந்தும் நிலை நாட்டிருப்பார்.மு.காவின் செயலாளராக இருந்து கொண்டு மு.காவிற்கு அறிக்கை விடுவது நகைப்பிகுரிய அரசியல் முறைமையாகும்.இது தொடர்பில் சாய்ந்தமருது மறுமலர்ச்சி இயக்கம் கூட பிரதமர் இங்கு வருவதற்கு முன் தனது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ் அறிக்கை பிரதமரை மேலும் மேலும் சிந்திக்கத் தூண்டும்.

 

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை தசாப்தங்கள் கடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையாகும்.இதற்கு முன்னர் வாய் மூடி மௌனியாக இருந்த மு.காவின் செயலாளர் செயலிழந்த செயலாளராக மாறியதன் பின்பு இது விடயத்தில் கண் விடுத்துள்ளமை தான் மேலும் பல வினாக்களை தோற்றுவிக்கிறது.அண்மையில் முன்னாள் அமைச்சர் அதாவுள்ளஹ்வும் செயலாளர் ஹசன் அலியும் மூடிய அறைக்குள் சந்தித்ததாகவும் அதன் போது முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் மு.காவிற்குள்ளிருந்து மு.காவை அழிக்குமாறு யோசனை சொன்னதாகவும் ஊடகங்களில் கதைகள் பரவி இருந்தன.இதனை அதாவுல்லாஹ் சொன்னாரா? இல்லையா? என்பதற்கு அப்பால் மு.காவிற்குள்ளிருந்து மு.காவை வீழ்த்த ஹசனலி முயல்வது இதன் மூலம் தெளிவாகிறது.சற்று தாமதமாக இம் மாநாட்டிற்கு வருகை தந்த மு.காவின் தவிசாளர் அதிதிகள் செல்லும் வழியால் மேடைக்குச் செல்லாது அங்கு இங்கு புகுந்து மேடைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இம் மாநாட்டில் தேசியக்கீதம் ஒலிக்கப்பட்ட போது  அங்கு குழுமி இருந்த மக்கள் தேசியக் கீதத்தை சிறிதும் மதிக்காமல் ஆடு மாடுகள் போன்று அங்கும் இங்கும் சுற்றி திருந்ததை அவதானிக்க முடிந்தது.இச் செயற்பாடு சிறிதும் ஏற்கத்தகுந்த ஒன்றல்ல.இவ்வாறான செயற்பாடுகள் பேரின மக்களிடம் கொண்டு செல்லப்படும் போது முஸ்லிம்களுக்கு நாட்டுப் பற்றில்லை என்பதை வெளிக்காட்ட ஒரு ஆதாரமாக அமையும்.இச் செயற்பாட்டின் மறு பொருளும் அது தான் என்பதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.

கட்சிக் கீதம் ஒலிக்கச் செய்யப்பட்ட போது மு.கா ஆதரவாளர்கள் மிகவும் சுறு சுறுப்புடன் அதற்கு செவி சாய்த்திருந்தார்கள்.தேசியக் கீதத்தை விட கட்சிக் கீதத்திற்கு மதிப்பளிப்பது மிகவும் தவறானது.இவைகள் தொடர்பில் எமது தலைமைகள் கவனம் செலுத்தி முஸ்லிம் சமூகத்திடையே விழிப்புணர்வைக் கொண்டு வர வேண்டும்.குறித்த மாநாடு ஏற்பாடாகிருந்த மைதானம் மக்கள் நிழல் தேடி ஒதுங்க சிறிதும் பொருத்தமில்லாததொரு இடமாகும்.இது வெப்பம் மிகைத்துக் காணப்படும் ஒரு காலம் என்பதால் நிழல் தொடர்பான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.ஒன்பதாயிரம் பேர் நிழல் பெறுமளவே அங்கு கூடார (husts) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எஞ்சியவர்கள் மிகவும் கஸ்டப்பட்டு அங்கும் இங்கும் வெயிலில் அலைந்து திருந்ததை அவதானிக்க முடிந்தது.அவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் அங்கு குழுமி இருந்த மக்கள் சிறிதும் சளைக்காமல் குறித்த மாநாட்டில் இறுதிவரை இருந்தமை அந்த மக்கள் கட்சி மீது கொண்ட பற்றை புடை போட்டுக் காட்டுகிறது.இந்த வெயிலில் காய்ந்து கருவாடாகியிருந்தவர்களில் அதிகமானவர்கள் வெளியூர் மக்கள் என்பதுவே மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

 

குறித்த கூடாரங்களுக்கு (husts) வெளியில் இருந்தவர்களால் குறித்த மாநாட்டின் பிரதான மேடையை சிறிதேனும் பார்க்க முடியவில்லை.குறைந்தது வெளியில் இருந்தவர்கள் திரை மூலம் பார்க்கும் படியான ஏற்பாடுகளையாவது செய்திருக்கலாம்.அவைகளும் செய்யப்படவில்லை.மறைந்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.பல ஊடகவியலாளர்கள் ஊடகவியலாளர் என்ற நாமத்தை தனக்கு சூட்டிக்கொள்ள இந் நாமமே பிரதான காரணகர்த்தாவாக இருந்ததாக இன்றும் பலர் பெருமையாக கூறிக்கொண்டிருக்கின்றனர்.மர்ஹூம் அஷ்ரபின் பின் மு.காவிற்கு தலைமை தாங்கும் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவில் ஊடகவியலாளர்களுக்கு உரிய ஸ்தானம் வழங்கப்படாததான குற்றச் சாட்டுகள் .ஊடகவியலாலர்களிடமிருந்து தொடர்ந்தும் வந்த வண்ணமிருந்தன.

குறித்த மாநாட்டில் அமைச்சர் ஹக்கீம் ஊடகவியலாளர்களை சற்று விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் சில விடயங்களில் குறித்த ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டுக்கொண்டமை இங்கு சுட்டிக்காட்டத் தக்க ஒரு விடயமாகும்.இம் மாநாடு ஆரம்பிக்கப்பட்டு முதன் முதலாக கலை இலக்கிய நிகழ்வுகளில் வேடுவர்களின் நடனமே அரங்கேறியது.இவர்களது நடனத்தை பற்றி சிலர் விமர்சித்தாலும் அதில் பிழை இருப்பதாக நான் உணரவில்லை.

இருப்பினும் மு.கா ஒரு முஸ்லிம் கட்சி என்பதால் முஸ்லிகளின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இலக்கிய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை வழங்கிருக்க வேண்டும்.முஸ்லிம்களின் காலச்சாரத்தை வெளிக்காட்டும் வகையிலான எது விதமான இலக்கிய நிகழ்வுகளும் இடம்பெறமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.அந் நிகழ்வில் இளம் பெண்களைக் கொண்ட பெண்களின் நடனமும் அரங்கேறிருந்தது.இது குர்ஆன் ஹதீஸை அடிப்படையாக கொண்டியங்குவதாக கூறும் ஒரு கட்சிக்கு அழகல்ல.மிக அதிகமான கோடிகளால் இம் மாநாடு அலங்கரிக்கப்பட்ட போதும் கொள்கைகள் ஏதுமின்றி நிறைவுற்றமை மிகவும் கவலையான விடயமாகும்.இப்படியான சில குறைபாடுகள் இம் மாநாட்டில் மலிந்து கிடந்தன.

 

அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவின் மூன்றாவது தேசிய மாநாட்டை பாலமுனையில் நடாத்திருந்தமை பாலமுனை மண்ணுக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம்.கிழக்கு மாகாணம் தவிர்ந்து வேறு மாகாணங்களில் பாலமுனை எனும் ஊரின் பெயர் சற்று பரீட்சையம் இல்லாத ஒன்றாகவே காணப்படுகிறது.இம் மாநாட்டின் மூலம் பல்லாயிரம் மக்கள் இவ்வூரின் நாமத்தை மொழிந்திருந்தனர்.இம் மாநாட்டை முன்னிட்டு பாலமுனையின் சில வீதிகளும் செப்பனிடப்பட்டிருந்தன.மு.காவிற்கும் மு.காவின் மக்கள் பிரதிநிதிகளுக்கிமிடையிலான தொடர்புகள் சற்று குறைவாகவே இருப்பது பலரினதும் குற்றச் சாட்டாகும்.குறித்த தேசிய மாநாடு நடைபெறுவதற்கு சுமார் ஒரு வாரம் முன்பு தேசிய மாநாடு நடைபெற்ற மைத்தானத்தில் கிரிக்கட் சமர் ஒன்றை நடாத்திருந்தனர்.இதில் மு.காவின் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.பிரதி அமைச்சர் பைசால் ஹாசிம் தலைமையிலான அணியே வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இவ்வாறான செயற்பாடுகள் மு.காவின் போராளிகளுக்கும் ,மு.காவின் மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு : இக் கட்டுரை இன்று 29-03-2016ம் திகதி செவ்வாய்க்கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *