(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை)

ஒரு சமயத்தை தெளிவாக கற்றுணர்ந்த எவரும் தவறான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.பொது பல சேனாவின் நாமம் சில வருடங்களாக பல தவறான விடயங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.நீதி மன்றங்கள் கூட எச்சரிக்கை விடுமளவு இவ் அமைப்பினது செயற்பாடுகள் அமைந்திருந்தன.இவ் அமைப்பினது செயற்பாடுகளே தர்கா டவுனில் முஸ்லிம்களுக்கெதிராக அரங்கேறிய கலவரத்திற்கும் காரணமாகியது.இவ் அமைப்பினது செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் பாரிய விவாதப் பொருளாகவும் மாறி இருந்தன.

பல பௌத்த மதகுருக்களைக் கொண்டுள்ள இவ் அமைப்பினது இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் பாரதூரமான விளைவுகளை எதிர்காலத்திலும் ஏற்படுத்தலாம்.இவ் அமைப்பை கட்டுப்படுத்த வேண்டிய கடமை இலங்கை அரசுக்குள்ள போதும் இலங்கை அரசு வாய் மூடி வேடிக்கை தான் பார்க்கின்றது.

முஸ்லிம்கள் மஹிந்த ராஜ பக்ஸவை விட்டும் முற்றாக தூரமாக இவ் அமைப்பினது செயற்பாடுகளே பிரதான காரணமாகவும் அமைத்திருந்தன.புதிதாக தோற்றம் பெற்ற நல்லாட்சியின் ஆரம்பத்தில் இவ் அமைப்பின் வாய்க்கு பூட்டு போட்டாப் போலிருந்தாலும் நாள் செல்லச் செல்ல மீண்டும் வேதாளம் முருங்கை மரமேறிய கதையாக முஸ்லிம்களுக்கெதிரான தனது ஆட்டத்தை மீண்டும் பழைய உத் வேகத்துடன் ஆரம்பித்துள்ளது.

 

இவ் அமைப்பு ஹலால் சின்னத்தை இலங்கை நாட்டை விட்டொழிக்க மஹிந்த காலத்தில் செய்த முயற்சி வெற்றி பெற்றிருந்ததோடு முஸ்லிம் பெண்கள் முக மூடுதல் உட்பட பல விடயங்களில் தனது பார்வையைச் செலுத்தி வருகிறது.பொது பல சேனா அமைப்பு புதிதாக தோற்றம் பெற்றுள்ள  நல்லாட்சியில் எல்லாவற்றிற்கும் ஒரு படி மேல் சென்று முஸ்லிம்கள் தங்களது உயிர்களுக்கும் மேலாக மதிக்கும் குர்ஆனில் இல்லாத பொல்லாதவற்றை இருப்பதாக கூறி கதை புனைந்தும் வருகிறது.தற்போது ஷரியா வங்கிகளுக்கு இலங்கை  நாட்டில் வழங்கியுள்ள அங்கீகாரத்தை இல்லாமலாக்க முயன்று வருகிறது.

இலங்கையில் உள்ள அநேகமான வங்கிகளில் ஷரியா வங்கிகளுக்கென ஒரு தனிப்பிரிவுள்ளது.ஓரிரு வங்கிகள் முற்றாக இஸ்லாமிய ஷரியா அடிப்படையை மையப்படுத்தியும் இயங்குகின்றன.இது தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதி ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் விளக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரியும் தனது மேலதிக செயலாளர் ஒருவர் மூலம் தேசிய கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பில் இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.பொது பல சேனாவின் கோரிக்கை நியாயமானதா? என்பதை சிந்திப்பதற்கு முன்பு இவ் விடயத்தில் ஆழச் சிந்திக்க வேண்டிய பல விடயங்கள் உள்ளன.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஸ தான் பொது பல சேனா அமைப்பைத் தோற்றுவித்தார் என்ற கருத்து முஸ்லிம் மக்களிடத்தில் நிலவுகின்ற போதும் அது உண்மைத் தன்மை குறைவானதொரு கருத்தாகும்.இவர் பொது பல சேனா அமைப்பின் செயற்பாடுகளுக்கு நெகிழ்வுப் போக்கையே கடைப்பிடித்திருந்தார்.இவர் ஓரிரு தடவைகள் பொது பல சேனா அமைப்புடன் பேச்சு நடாத்திருந்த போதும் பொது பல சேனாவின் விடயத்தில் இத்தனை கரிசனை காட்டியிருக்கவில்லை.

இவ் ஆட்சியில் பொது பல சேனாவின் கோரிக்கைக்கு இரு வார எல்லையினுள் அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி மைத்திரி கோரிருப்பதானது பொது பல சேனாவை உச்சத்தில் தூக்கி நிறுத்துகிறது.இவ் அமைப்பின் சிந்தனைப் போக்கு ஜனாதிபதி மைத்திரியையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது என்பதுவே இச் செயலின் மறு வடிவமாகும்.இலங்கை சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாதலால் இலங்கை நாட்டில் பௌத்த மதத் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு குழுவில் அவ்வளவு இலகுவில் யாராலும் கை வைத்து விட முடியாதென்பது யதார்த்தம்.

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் கைது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அண்மையில் மரணித்த அஸ்கிரிய மகாநாயக்க தேரர் கலகம ஸ்ரீ அத்தஸ்ஸி தேரர் கலகொட அத்தே ஞானசார தேரரை நாடு மட்டும் இனம் தொடர்பில் உயிர்த் தியாகத்துடன் செயற்பட்டவரென வர்ணித்து இவர் தொடர்பான விசாரணையை சரியான முறையில் நடாத்த வேண்டும் என அரசை கோரியிருந்தமை இவ் விடயத்தை இன்னும் தெளிவாக நிறுவுகிறது.

இவ் விடயத்தை இக் கோணத்தில் முஸ்லிம்கள் அணுகுவதாக இருந்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இடத்திலிருந்தும் சிந்திக்க வேண்டும்.இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை புத்தரக்கித,சோமராம ஆகியோரிற்கு ஒப்பிட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றிருந்தார்.இவ் அரசு இப்படி தாங்களே மிகக் கீழ்த்தரமாக விமர்சித்தவர்களுடன் பேச்சுக்கள் நடாத்துவது ஏற்கத்தகுந்ததல்ல.

 

பொதுவாக ஷரியா அடிப்படையிலான வங்கி முறைமையானது முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் வட்டி கலந்துவிடாமல் முஸ்லிம்களை பாதுகாப்பதையே மையப்படுத்திருக்கும்.வட்டி இஸ்லாத்தில் மாத்திரம் தடுக்கப்பட்ட ஒன்றல்ல மாறாக பௌத்த மதத்திலும் தடுக்கப்பட்ட ஒன்றாகும்.பொது பல சேனா அமைப்பானது இவ் விடயம் தங்கள் மதத்திலும் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதால் இவ்வாறான வங்கிகளை தாங்களும் உருவாக்குவதற்கு முயற்சித்திருக்க வேண்டும்.உருவாக்காவிட்டாலும் பரவாயில்லை எதிர்க்காமலாவது இருக்கலாம்.

பொது பல சேனாவானது இவ் விடயத்தில் தங்கள் மதத்தை உரிய முறையில் பின்பற்றினாலே எது வித பிரச்சினைகளும் எழாது.பொதுவாக இவ் வங்கிகள் இஸ்லாமிய ஷரியா அடிப்படையில் இயங்குவதாக பேச்சு வழக்கில் அதிகம் பாவிக்கப்படும்.ஷரியா என்றாலே மாற்று மதத்தவர்கள் பலரும் அதில் பொதிந்துள்ள விடயங்களை ஆராயாது ஒரு கண் கொண்டு பார்ப்பது வழமை.பொது பல சேனா அமைப்பும் ஷரியா என்றாலே தங்களுக்கு ஆகாத வார்த்தையாக நினைத்துக்கொண்டிருகின்றது.

இவைகளை வைத்து நன்கு ஆராயும் போது பொது பல சேனாவானது இவ் விடயத்தை உள்ச்சென்று ஆராயாது வார்த்தையை மாத்திரம் வைத்துக் கொண்டு முஸ்லிம்களுடன் வம்புக்கு வந்துள்ளது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

 

இவ் அமைப்பு ஷரியா வங்கி முறைமை பிரிவினைக்கு வித்திடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.இலங்கை நாட்டில் மத ரீதியான புரிந்துணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளமையை மறுக்க முடியாது.இக் கருத்தை பேரின மக்களிடையே இனவாதத்தை விதைத்துவரும் பொது பல சேனா கூறுவதே நகைப்பிற்குரியது.மத ரீதியான சில பிரிவினைகள் தவிர்க்க முடியாதவைகள்.பௌத்தர்கள் புத்தரையும் முஸ்லிம்கள் அல்லாஹ்வையுமே வழிபட வேண்டும்.மத ரீதியான ஒற்றுமை வேண்டும் என்பதற்காக பௌத்தர்கள் முஸ்லிம்களை புத்தரை வழிபடுங்களெனக் கூறுவதில் எதுவித சிறு நியாயமுமில்லை.இது போன்றே இவ் விடயத்தை மத ரீதியான புரிந்துணர்வைக் காட்டி இல்லாதொழிக்க முயல்வதாகும்.இச் ஷரியா முறையை இல்லாதொழிக்க வேண்டிய அவசியம் தான் என்ன?

இது பேரின மக்களை எந்த வகையில் பாதிக்கின்றது? இம் முறைமையைப் பின் பற்ற முஸ்லிம்கள் ஒரு போதும் பௌத்தர்களை நிர்ப்பந்திப்பதுமில்லை.இம் முறைமையை பேரின மக்களும் பின்பற்றினால் வட்டியினால் வலுவிழந்து போகும் ஏழை மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்ள முடியுமே தவிர இம் முறைமை பேரின மக்களை சிறிதும் பாதிக்க வாய்ப்பில்லை.தங்களைப் பாதிக்காத போது அதனை பேரின மக்கள் எதிர்க்க வேண்டிய அவசியமுமில்லை.

இன்று வட்டியை பிரதான இலாபமாக கொண்டு இயங்கும் வங்கிகளிலும் இஸ்லாமிய ஷரியா அடிப்படையிலான தனி அலகுகள் இயங்குகின்றன.இது தொடர்பில் முஸ்லிம்களிடையே பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன.ஓரிரு வங்கிகள் தான் இஸ்லாமிய ஷரியாவை பின்பற்றி இயங்குகின்றன.இவைகள் தொடர்பிலும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பூரண உடன்பாடு இருப்பதாக குறிப்பிட முடியாது.இவ் வங்கிகள் மூலம் கிடைக்கும் இலாபங்கள் சில தீவிரவாத அமைப்புக்களுக்கு செல்லுவதாகவும் பொது பல சேனா குற்றம் சாட்டியுள்ளது.இலங்கையில் சில தீவிரவாத அமைப்புக்கள் இயங்குவதாக குட்டையைக் குழப்பி பேரின மக்களிடையே மீன் பிடிக்க முயல்வது பொது பல சேனாவிற்கு கை தேர்ந்த கலையாகிவிட்டது.இவ் வங்கிகள் மூலம் தீவிரவாத அமைப்புக்களுக்கு பணம் அனுப்பப்படுமாக இருந்தால் அது நிச்சயம் தடுக்கப்பட வேண்டிய ஒன்று தான் என்பதை மறுப்பதற்கில்லை.

இலங்கையின் புலனாய்வுத் துறை மிகவும் திறமை வாய்ந்தது.இவ் வங்கிகள் தீர்விரவாத அமைப்புக்களின் வளர்ச்சிக்கு உதவுமாக இருந்தால் அதனை பொது பல சேனா சுட்டிக் காட்டி இலங்கையரசு அறியும் நிலையிருக்காது.இவ் வங்கிகள் மூலம் தீவிரவாதிகள் பலம் பெறுவதை இலங்கை நாடு அறியுமாக இருந்தால் அதனைத் தடுக்கும் முதல் நாடாக இலங்கை இருக்குமென்பதிலும் ஐயமுமில்லை.யுத்தம் எந்தளவு ஆபத்தானதென்பதன் அனுபவங்கள் இலங்கையிடம் நிறையவே உள்ளன.

தனது இக் குற்றச்சாட்டு தொடர்பில் பொது பல செனாவிடம் ஏதேனும் ஆதாரம் இருப்பின் அதனை இலங்கை அரசாங்கத்திடம் கூறுவதை விட அமெரிக்காவிடம் கூறினால் அமெரிக்க விழுந்தடித்து வந்து இவ் விடயத்தில் கை வைக்கும்.இந்தக் குற்றச்சாட்டை பொது பல சேனா அணுகும் முறைமையைப் பார்க்கும் போது பொது பல செனாவிடம் இது தொடர்பில் ஆதாரங்கள் எதுவுமில்லை என்பது புலனாகிறது.

இப்படி சிறிதும் சிந்திக்க தேவையற்ற இவ் விடயத்தை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறி சேனா பெரியதொரு விடயமாக தூக்கிப் பிடித்துள்ளதை அவதானிக்கும் போது இவர் இனவாதிகளுடன் ஒத்திசைந்து செல்லும் போக்கை கடைப்பிடிக்க முயல்வது தெளிவாகிறது.அண்மையில் சிங்கள நாளிதழ்களில் ஒன்றான ராவய பத்திரிகையின் விசேட கட்டுரையொன்றில் மஹிந்தவின் வழியில் மைத்திரியும் இனவாதிகளை திருப்திபடுத்த முயல்வதாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்களே! பொது பல சேனாவின் செயலாளர் ஞான சார தேரரை இவ் அரசு கைது செய்துள்ளதுதானே? எனக் கேட்கலாம்.

ஞானசார தேரர் இலங்கையின் நீதித் துறையை சவாலுக்குட்படுத்தும் வகையில் நீதி மன்றத்தில் செயற்பட்டதாலேயே கைது செய்யப்பட்டிருந்தார்.இது குறித்த நீதிபதியின் அதிரடித் தீர்மானங்களில் ஒன்றாகவே பார்க்கத் தோன்றுகிறது.இதன் பிறகு குறித்த நீதிபதிக்கு வழங்கப்பட்ட அழுத்தங்களால் அவர் குறித்த வழக்கிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருந்தார்.ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொடவின் வழக்கை நடாத்திய அரச சட்டவாளர் திலிப் பீரிஸ் இச் சம்பவத்தின் பின்னர் நீக்கப்பட்டுமிருந்தார்.

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதி மன்றம் உத்தரவிட்டதன் பின்னர் ஒரு பதட்டமான சூழ் நிலை தோற்றுவிக்கப்பட்டிருந்தது.பிறகு ஞானசார தேரரே தாமாக வந்து நீதி மன்றில் சரணடைந்திருந்தார்.இதன் பிறகு இவரை தடுப்புக் காவலில் வைக்க நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து நெத் எப் எம் சிங்கள வானொலிக்கு கருத்துத் தெரிவித்த ஜினானந்த தேரர் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நம்பியே அவர் நீதி மன்றத்திற்கு சென்றதாக கூறி இருந்தார்.மேலுள்ள இச் சுட்டிக் காட்டல்கள் பொது பல சேனா அமைப்பானது இலங்கையின் நீதித்துறைக்கே சவால் விடும் வகையில் இவ் அரசில் மிகப் பலம் வாய்ந்ததாக உள்ளதைத் தான் எடுத்துக்காட்டுகிறது.

 

இவர் இவ்வாறு நடந்து கொண்ட காலப்பகுதி இலங்கை நீதித்துறையின் சீரிய கட்டமைப்பை சர்வதேசற்கு வெளிக்காட்ட வேண்டிய ஒரு காலப்பகுதியாகும்.ஏற்கனவே சர்வதேச அரங்கில் இலங்கையின் நீதித் துறையின் மீது அவ்வளவு நம்பிக்கையில்லை.இக் காலப்பகுதியில் பொது பல சேனா செயலாளரின் இச் செயற்பாட்டை இலங்கை நீதி மன்றம் உரிய விதத்தில் கண்டிக்கத் தவறும் போது  அது இலங்கை அரசிற்கு சர்வதேச அரங்கில் மிகவும் ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் ஐ.நா சபைக்கான மனித உரிமை ஆணையாளரும் இலங்கைக்கு வருகை தர இருந்தார்.ஏற்கனவே பொது பல சேனா அமைப்பு  சிறு பான்மை இனத்தவர்களின் எதிரியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.இவ் வேளையில் இவரை கைது செய்து சிறையில் தள்ளுவது இலங்கையில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சர்வதேச அரங்கில் ஏற்படுத்துவதற்கான ஒரு சமிஞ்சையாக சர்வதேசம் நோக்கவும் ஏதுவாக அமையும்.அதாவது ஞானசார தேரர் கைது செய்யப்பட்ட காலப்பகுதியும் அவரது கைதில் பாரிய தாக்கத்தை செலுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

இது சில வேளை சர்வதேசத்திற்கு தங்களை நல்ல பிள்ளைகளாக வெளிக்காட்ட இவ் அரசினால் அரங்கேற்றப்பட்ட மிகத் திட்டமிடப்பட்ட ஒரு நாடகமாகவும் இருக்கலாம்.தற்போது சர்வதேச அரங்கில் இலங்கை நீதித் துறையின் மீது நம்பிக்கை துளிர் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவரைக் கைது செய்த போது இலங்கை அரசுக்கும் பொது பல செனாவிற்குமிடையே ஒரு போர் மூண்டது போன்றே காணப்பட்டது.தற்போது ஷரியா வங்கி விடயத்தை வைத்து நோக்கும் போது இவ் அரசுடன் பொது பல சேனா தேனிலவு கொண்டாடுவது போன்றுள்ளது.இவைகளே இவ்வாறான சந்தேகங்களை கிளறியும் விடுகிறது.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்படாமல் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டமை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொடவின் மனைவியை அச்சுறுத்திய விவகாரத்தினாலாகும்.பிரகீத் எக்னெலியகொடவின் விவகாரம் சர்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள விவகாரங்களில் ஒன்றாகும்.2012.05.03ம் திகதி பிரான்ஸ் மற்றும் கிரேக் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற ஊடக தின நிகழ்வில் பிரகீத் எக்னலிகொட தொடர்பில் இன்ன சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது.அந்தக் கேள்விக்கு அந் நேரத்தில் யாரும் பதில் அளிக்கவில்லை.

இதன் போது அந் நிகழ்வில் பங்கேற்றவர்கள் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங்கி மூன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்திருந்தனர்.தற்போது பிரகீத் எக்னெலியகொடவின் மனைவியைக் கொண்டு பாரிய அரசியல் நகர்வுகளும் மேற்கொள்ளப்படுகிறது.இச் சந்தர்ப்பத்தில் இவரது மனைவியை அச்சுறுத்துவது இலங்கை அரசுக்கு அவ்வளவு உசிதமானதுமல்ல.பொது பல சேனாவின் செயலாளரா? ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொடவின் மனைவியா? என்ற வினா எழும்பும் போது தற்போதைய நிலையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொடவின் மனைவிக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்குவதே பொருத்தமானது.

 

பொது பல சேனா முஸ்லிம்களுக்கெதிராக அரங்கேற்றிய நிகழ்வுகளில் ஒன்றைக் காரணம் காட்டி அதனைக் கைது செய்யும் போதே முஸ்லிம்களின் உள்ளம் பூரண சாந்தியுறும்.முஸ்லிம்களின் விடயத்தில் கை வைத்த ஒன்றைக் காரணம் காட்டி ஞானசார தேரரை கைது செய்யும் போது அது இவ் அரசுக்கு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.இதன் காரணமாக இவ் விடயத்தை அரசு இவரிற்கு எச்சரிக்கை விடும் ஒன்றாகவும் பயன்படுத்திருக்கலாம்.எனினும்,இவர் எச்சரிக்கை விடுமளவான காரியங்களைச் செய்தவரல்ல.இதனையும் இன்னும் சிலவற்றை கிளறியும் சூட்டோடு சூட்டாக அரசு இவரை முற்றாக அடக்கிருக்க வேண்டும்.ஞானசார தேரர் சிறையிலிருந்த காலத்தில் கூட அவரை அரசால் முற்றாக அடக்க முடியவில்லை.அங்கிருந்து கொண்டும் தனது ஆட்டத்தை தொடர்ந்திருந்தார்.சிறையை விட்டு வெளியேறிய ஞானசார தேரர் சிங்கள ராவய,ராவண பலய போன்ற அமைப்புக்களை இணைத்து ஒரு கூட்டையும் தோற்றுவித்துள்ளார்.இதுவெல்லாம் முஸ்லிம்களுக்கு ஆரோக்கியமான சமிஞ்சைகளல்ல.

 

என்னிடம் அனுமதி பெறாமல் பௌத்த பிக்குகளை கைது செய்ய வேண்டாமெனக் கூறி மைத்திரி தனது ஆட்சியில் பௌத்த மதகுருக்களுக்கு உயரிய ஸ்தானத்தை வழங்கியுள்ளார்.இவ் விடயம் சாதாரண ஒரு மகனுக்கும் பௌத்த பிக்குவிற்குமிடையில் கடைப்பிடிக்கும் நீதிக்கிடையிலுள்ள வேறுபாட்டைக் காட்டுகிறது.நீதி அனைவருக்குமிடையில் சமனாகவே நிலை நிறுத்தப்படல் வேண்டும்.சாதாரண மக்களுக்கு சரியான பாதையை காட்டக்கூடிய சமயத்தை கற்றுணர்ந்தவர்கள் விடயத்தில் சற்று கடுமையாக இருந்தாலும் சிறப்பானதே.

இவ்வாறான சொல்லாடல்களை மஹிந்த அரசில் அறியக்கிடைக்கவில்லை.இவ் அரசு இனவாதச் செயற்பாடுகளில் மஹிந்தவை விஞ்சுகிறதா என்ற வினா எழுகின்ற போதும் அக் காலத்தில் இவ்வாறான சொல்லாடல்களின் தேவை பெரிதும் எழுந்திருக்கவுமில்லை என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.ஜனாதிபதி மைத்திரியின் இக் கூற்றை ஒரு கோணத்தில் நோக்கும் போது பிழை போன்று தோன்றினாலும் இன்னுமொரு கோணத்தில் இவ் விடயம் மிகக் கவனமாக கையாள வேண்டிய ஒரு விடயம் என்பதால் சரியெனவும் நினைக்கத் தோன்றுகிறது.

தற்போது இவ் அரசு பேரின அமைப்புக்களுடன் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க ஒரு சிறு நியாயமுமுள்ளது.இவ் ஆட்சியில் பல பௌத்த மத குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்னும் இன்னும் பௌத்த பிக்குகள் கைது செய்யப்படும் போது அது பேரின மக்களிடையே இவ் அரசின் மீது அதிருப்தியடையத் தோற்றுவித்து பாரிய போராட்டங்களுக்கு காரணமாகலாம்.

எது எவ்வாறு இருப்பினும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களித்து இலங்கை முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு கூறிய முதற் செய்தி இந்த பொது பல சேனா அமைப்பை கட்டுப்படுத்துங்கள் என்பதாகும்.வருடங்கள் பல கடந்தும் இவ் அரசால் பொது பல சேனாவின் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை சிறிதும் கட்டுப்படுத்த முடியாமை மிகவும் வேதனையளிக்கிறது.இவ் அரசு அதன் கோரிக்கைகளை ஆராயும் நிலைக்குச் செல்வது முஸ்லிம்களிடையே அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

 

குறிப்பு: இக் கட்டுரை 2016-03-24ம் திகதி வியாழக்கிழமை நவமணி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *