இஸ்லாமியர்கள் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்து மதம் மாற்றுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கூறிய கருத்தை இரு வாரங்களுக்குள் வாபஸ் பெறாவிட்டால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, காத்தான்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

அவர் மேலும் கூறுகையில்,

நல்லாட்சியில் இன உறவினை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு தரப்பினரும் செயற்பட்டு வரும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் சிலர் இவ்வாறான இனவாத கருத்துகளை தெரிவித்துவருவது இன ஐக்கியத்தினை பாதிக்கும் செயற்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் துவேசங்களை கதைத்து வாக்குகளைப்பெறும் நடவடிக்கையினை மகிந்த தரப்பினர் மேற்கொண்டுவரும் நிலையில் மறுபக்கத்தில் தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பிலான துவேசங்களை கதைத்து வாக்கினை பெறும் நடவடிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் போன்றவர்கள் மேற்கொண்டுவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இவ்வாறான இனவாத போக்குடன் செயற்பட்ட இருவரை தமிழ் மக்கள் நிராகரித்தனர்.அதேபோன்று எதிர்வரும் காலங்களில் வரும் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் போன்றவர்கள் நிராகரிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 30வருடகால யுத்த சூழ்நிலையினால் சீர்குலைந்துள்ள தமிழ்-முஸ்லிம் மக்களின் இன உறவினை கட்டியெழுப்பும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் இனநல்லுறவினை பாதிக்கும் செயற்பாடுகள் எனவும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாமியர்கள் ஒருபோதும் உதவிகளை வழங்கும்போது பிரதி உபகாரத்தினை எதிர்பார்ப்பதில்லையெனவும் அவ்வாறான நிலையில் இவ்வாறான கருத்துகளை ஒரு மதகுரு நிலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளதானது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

துமிழ் மக்களை விட முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து வாழவேண்டும் என்று செயற்பட்டுவரும் நிலையில் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *