(எம்.ஆர்.எம்.வஸீம்)

கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் தொடர்புபட்டவர்கள் என அறிந்தும் அவர்களுக்கெதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதானது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் நாட்டில் இடம்பெறுகின்ற தொடர் போராட்டம் காரணமாக நாட்டுக்குவரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

மஹிந்த ராஜபக்ஷ் காலத்தில் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதில்லை, மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதாக தெரிவித்து மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

ஆனால் தற்போது நாட்டில் ஜனநாயகம் அதிகரித்துள்ளது. இதனால் அரசாங்கமும்  தங்களது பலத்தை காட்டுவதற்கு பாதையில் இறங்க ஆரம்பித்துள்ளது. நாளாந்தம் தொடர் போராட்டம் மற்றும் பணிப்பகிஷ்கரிப்புகள் காரணமாக நாட்டுக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக நாட்டுக்கு வரும் அன்னிய செலாவணி குறைவடைகின்றது

மேலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அரசாங்கம் சட்ட திட்டமொன்றை ஏற்படுத்த வேண்டும். ஜனநாயக நாடொன்றில் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் மேற்கொள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. அது அவர்களின் ஜனநாயக உரிமை. அதே நேரம் இந்த ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் காரணமாக சாதாரண பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் இது தொடர்பாக முன்கூட்டியே பொலிஸாரிடம் அனுமதி பெறும் சட்ட முறையொன்றை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *