மியான்மரில் ஜனநாயகத்திற்காக நீண்ட காலமாக குரல்கொடுத்துவந்த ஆங் சான் சூ சி, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகவிருக்கிறார்.

அந்நாட்டில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் சூ சீயின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி வெற்றிபெற்றது.

ஆனால், அவர் அதிபராக முடியாதபடி சட்டவிதிகள் இருப்பதால், ஆட்சியை பின்னிருந்து இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய அரசில் வெளியுறவுத் துறை, கல்வி, எரிசக்தி – மின்சாரம், அதிபர் அலுவலகம் ஆகிய துறைகளை அவர் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அதிபராக ஹ்தின் க்யாவ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவர் நாடாளுமன்றத்திற்குச் சமர்பித்த 18 அமைச்சர்களின் பட்டியலில் ஆங் சான் சூ சீயின் பெயர் இடம்பெற்றிருந்தது.

அவரைத் தவிர வேறு பெண்கள் யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.

ஆங் சான் சூ சீயின் மகன்கள் இருவரும் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பதால், அவர் அதிபராக முடியாது என முந்தைய ராணுவ அரசு விதிகளை உருவாக்கியிருக்கிறது.

இந்த விதிகளை நீக்கக் கோரி நடந்த பேச்சுவார்த்தைகள் பயன்தரவில்லை.

இதையடுத்து, யார் அதிபராக இருந்தாலும் ஆட்சியை நடத்தப்போவது தான்தான் என ஆங் சான் சூ சி தெரிவித்திருந்தார்.

18 பேரைக் கொண்ட அமைச்சரவைப் பட்டியலில் 15 பேரை ஆங் சான் சூ சியும் 3 பேரை ராணுவமும் தேர்வுசெய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி பெரும்பான்மையுடன் இருக்கிறது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *