(பழுலுல்லாஹ் பர்ஹான்)
சிறுவர் துஷ்பிரயோகம்,பெண்கள் பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனைகள் முறையாக வழங்கப்படல் வேண்டும்,அவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்படல் வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார தெரிவித்தார்.

பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத் திறப்பு விழா அண்மையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகம்,பெண்கள் பாலியல் பலாத்காரம் தொடர்பில் பல்வேறு செய்திகளை கேள்விப்படுகிறோம்.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்தது மட்டுமல்லாமல் சிறுவர்களும் பல கோணங்களில் பாதிக்கப்படுகின்றனர்.
இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக மாவட்ட செயலகங்கள்,பொலிஸ் திணைக்களங்கள் ஊடாக நாடு பூராகவும் பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகங்களை திறந்து வருகின்றோம்.
இதுவரையில் 28 சிறுவர் மற்றும் பெண்கள் பணியகங்கள் திறந்து கை;கப்பட்டுள்ளன.
இதனூடாக பெண்களும் சிறுவர்களும் தத்தமது பிரச்சினைகளை முறையிட முடியும்.
பொதுவாக பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தெடர்பில் பலர் பொலிஸ் நிலையங்களுக்கு நேரில் சென்று முறையிட தயங்குகின்றனர்.
இவ்வாறான அச்சம் மற்றும் தயக்கம் காரணமாக குறித்த விடயங்கள் வெளிவராமல் போகின்றன.
அவ்வாறு பயப்படவோ தயங்கவோ தேவையில்லை.
உங்களது பிரச்சினைகளை தயங்காமல் இவ்வாறான பணியகங்களுக்குச் சென்று முறையிட முடியும்.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வரும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மனம் தளராதவாறு பொலிஸ் அதிகாரிகளும் சிறப்பாக செயற்பட வேண்டும்.
உண்மையில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகங்களை இவ்வாறான பணியகங்கள்,மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு,மாவட்ட செயலங்கள்,பாடசாலைகள் என்பற்றினால் மாத்திரம் இல்லாதொழிக்க முடியாது.
இவற்றை இல்லாதொழிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு பிரதானமானதாகும்.பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு,பாசம்,புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளல்,நல்ல சூழல் என்பவற்றை வழங்க வேண்டும்.அவர்களுடன் நண்பர்களைப் போன்று பழக வேண்டும்.அப்போதுதான் சிறந்த சிறுவர் மற்றும் பெண்களை உருவாக்க முடியும்.
இன்று தந்தையினால் பாதிக்கப்படும் பெண்கள்,சகோதரனினால் துன்புறுத்தப்படும் சிறுவர்கள்,மாமாவினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி என்று பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
நான் பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் கண்ட ஒரு செய்தி ‘அயல் வீட்டு பிள்ளை பல முறைகள் துன்புறுத்தப்பட்டுள்ளது.ஆனால் யாரும் கவனிக்கவில்லை.ஒரு நாள் அப்பிள்ளையின் உடம்பில் கீறுகள்,அடித்த தடங்கள் அடையாளம் காணப்பட்டு பின்னர் அதற்குக் காரணம் அச்சிறுவனின் தந்தை என கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது’என தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
யாழில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கேள்விப்பட்டோம்.
நாளாந்தம் பல சம்பவங்கள் நடைபெறுகின்றன.
அவற்றை செய்பவர்களுக்கு சட்டங்கள் இருக்கின்றன.
அச்சட்டங்கள் ஊடாக முறையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு தண்டனைகள் வழங்கப்படுவதினூடாக நல்ல பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.
அப்படிப்பட்டவர்களுக்கு மண்ணிப்பு வழங்கப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும்; மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அவர்கள் கிராமங்கள்,பாடசாலைகள் என்பவற்றிற்கு விஜயம் செய்து சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான நிலைமைகளை கேட்டறிந்து கொள்வார்கள்.
இதனூடாக பெண்களும் சிறுவர்களும் சுதந்திரமான நல்ல சூழலில் வாழ முடியும்.
உண்மையில் ஒரு பெண் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை பல்வேறு கஷ்டங்களை சுமக்கிறாள்.பிள்ளை வளர்ப்பு,கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,வேலைக்குச் செல்பவளாக இருந்தால் வேலைத்தளம் தொடர்பான காரியங்கள் என பல்வேறு சுமைகளை சுமக்கிறாள்.அப்படிப்பட்ட அவளுக்கு சமூகத்தில் கட்டாயம் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தை எந்த தீய சக்திகளாலும் முடக்க முடியாது.
சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் சிறந்த பாதுகாப்பையும் அரவணைப்பையும் இந்த அரசாங்கம் வழங்கி வருகின்றது.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தினூடாக பெண்கள்,சிறுவர்கள் எல்லோரும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *