முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காரியாலயத்தில் கடமையாற்றிய விமானப் பணிப் பெண் ஒருவருக்கு, விமானத்தில் பயணிப்பதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவையில் கடமையாற்றிய, விமானப் பணிப் பெண் ஒருவர் ஜனாதிபதி காரியாலத்தில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

இந்தப் விமானப் பணிப் பெண்ணுக்கு, விமானப் பயணங்களின் போது அதற்காக வழங்கப்படும் 15 லட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் இந்தக் கொடுப்பனவை வழங்கியுள்ளதாக பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமானப் பயணங்களை மேற்கொள்ளாத காரணத்தினால் இந்த விமானப் பணிப் பெண்ணுக்கு குறித்த தொகை பணம் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை. எனினும், மூன்றாண்டு காலமாக இவ்வாறு அரசாங்கப் பணம் குறித்த விமானப் பணிப்பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் விரதுங்கவின் எழுத்துமூல உத்தரவிற்கு அமைய கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விமானப் பணிப் பெண்ணுக்கு நூற்றுக்கு நூறு வீத கொடுப்பனவு வழங்காது 50வீத கொடுப்பனவு வழங்க அப்போது நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய மனோஜ் குணவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதி முக்கிய பிரபு குடும்பமொன்றின் உறுப்பினர் ஒருவரது வற்புறுத்தல் காரணமாக இந்த விமானப் பணிப் பெண் ஜனாதிபதி செயலகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இந்த நபருடன் குறித்த விமானப் பணிப் பெண் மிக நெருங்கிய உறவினைப் பேணியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர், இந்த விமானப் பணிப் பெண் ஜனாதிபதி காரியாலயத்திலிருந்து நீக்கப்பட்டு, விமானப் பணிப் பெண் மேற்பார்வையாளராக கடமையாற்றி வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *