(சுஐப் எம்.காசிம்)    

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கென புதிய அரசாங்கம் பல்வேறு தொழிற்துறை வலயங்களை அமைக்க உத்தேசித்து இருப்பதால், ஈரானிய முதலீட்டாளர்களும் முதலீட்டுத் துறையில் நாட்டம் காட்ட வேண்டும் என்றும், அதற்கான அழைப்பை தாம் விடுப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று காலை (25/02/2016) தெரிவித்தார்.கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் இலங்கை – ஈரான் 11 வது பொருளாதார கூட்டு ஆணைக்குழுவின் ஒரு நாள் மாநாடு நேற்று (24/02/2015) நடந்து முடிந்தது. அதன் பின்னர் இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்தம் இன்று காலை கொழும்பு, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக் குழுவின் சார்பில் இலங்கை – ஈரான் பொருளாதார கூட்டு ஆணைக்குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனும், ஈரான் குழுவின் சார்பில் அமைச்சர் சிட்சியான் ஹமிட் அவர்களும்  இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அவற்றைப் பரிமாறிக்கொண்டனர்.6820ae92-1a9a-4b2e-97ec-e0b5553bd57c

இரண்டு நாடுகளின் அமைச்சர்களும் இந்த மாநாடு குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் திருப்தியான தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் மாநாடு நிறைவையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு உரையாற்றினார். இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க, ஏ.எச்.எம். பௌசி, பிரதியமைச்சர் திருமதி. அனோமா கமகே ஆகியோர் உட்பட இரண்டு நாடுகளின் உயர் அதிகாரிகளும். முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் றிசாத் இங்கு கூறியதாவது.  இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். நான்கு குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை அக்குழுக்கள் ஆக்கபூர்வமான வகையிலும், கூட்டுணர்வு அடிப்படையிலும் நிறைவேற்றியுள்ளன.

1987 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஈரான் – இலங்கை ஆணைக்குழுவானது தனது இலக்கை உரிய முறையில் அடைவதற்காக, மிக விரிவான முறையில் கலந்தாலோசித்து தனது பணிகளை திருப்திகரமாக மேற்கொண்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவு வளர்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் தடயம் ஒன்றை பதித்துள்ளது. இதற்கான பொறிமுறைகளை முறையாக பின்பற்றினால் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட இலக்குகளை விரைவாக அடைய முடியும் என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. இந்த அமர்வு இரண்டு நாடுகளுக்கும் புதிய அனுபவங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், மீண்டும் ஒரு புதிய சரித்திரத்தை படைப்பதற்கு வழி வகுக்குமென உறுதியாக நம்புகின்றேன். வர்த்தகம், சக்தி வளம், உட்கட்டமைப்பு, கைத்தொழில், உயர் தொழில்நுட்பம், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத் துறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு பரஸ்பர நாடுகளின் புரிந்துணர்வு உதவும். நாடுகளுக்கிடையிலான உறவை விரிவாக்கி, அதனை மேலும் பலப்படுத்த இந்த மாநாடு வழிகோலியுள்ளதாக நான் பெரிதும் கருதுகின்றேன்.

ஈரானுக்கான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டதையடுத்து எமது இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோலிய இறக்குமதியில் இலங்கை மீண்டும் ஆர்வம் காட்டும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

11 வது மாநாட்டின் மூலம் ஏற்பட்டுள்ள திருப்புமுனை முக்கியமான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.  இதனை கட்டியெழுப்புவதன் மூலம், எதிர்காலத்தில் இன்னும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நாங்கள் மேற்கொள்ள முடியுமென்ற நம்பிக்கை எமக்குண்டு.

ஈரான் எமது நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இன்னோரன்ன உதவிகளை வழங்கி வருகின்றது. தேயிலை வர்த்தகம் தொடர்பில் சாதகமான சமிக்ஞ்சையை உங்கள் தரப்பு வழங்கியுள்ளது. தேயிலைத் தொழிலை இலங்கை விருத்தி செய்வதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவுமென நம்புகின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.

ஈரானியா சக்தி வள அமைச்சர் இங்கு கருத்துத்  தெரிவிக்கையில், இந்த மாநாடும், புரிந்துணர்வு ஒப்பந்தமும் இரண்டு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர வர்த்தக மேம்பாட்டுக்கு உதவியுள்ளது. இலங்கைக்கான தமது விஜயத்தில் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க  ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்த அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம். நாம் இலங்கையில் தங்கியிருந்த நாட்களில் எமக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர் நல்கினார். தேயிலை இறக்குமதியில் ஈரான் நாட்டின் உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதிக்காத வகையிலும், இலங்கைக்கு நன்மை ஏற்படக் கூடிய வகையிலும் நாம் நடவடிக்கை எடுப்போம். ஈரானியர்களால் இலங்கை அரிசி விரும்பி உண்ணப்படுகின்றது. எனினும், நீண்ட அரிசியிலேயே ஈரானியர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவதால், இலங்கை நெல் உற்பத்தியாளர்களும் அதில் கவனம் செலுத்தக் கூடிய வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கரிசனை எடுக்க வேண்டுமென ஈரானிய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர்கள் பரஸ்பரம், அன்பளிப்புக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

 

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *