Breaking
Tue. Nov 26th, 2024

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு குறித்த மிகவும் ரகசிய தகவல் ஒன்றை, ரஷ்ய வெளியுறவு அமைச்சரிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிர்ந்துள்ளதாக அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

உளவு மற்றும் வெளியுறவு ரீதியான அம்சங்களில் அமெரிக்காவின் பங்குதாரராக உள்ள ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்ற இந்த தகவலை ரஷ்யாவிடம் பகிர்வதற்கு அப்பங்குதாரர் அனுமதியளிக்கவில்லை என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரத்தில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃபை டிரம்ப் சந்தித்த போது, இத்தகவல் பரிமாற்றம் நடந்துள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆனால், இத்தகவல் உண்மையல்ல என ஒரு மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மெக்மாஸ்டர், இது குறித்து கருத்து கூறுகையில், ´´ரகசிய தகவல் பரிமாற்றம் நடந்ததாக இன்றிரவு வெளிவந்த தகவல் தவறானது.

உள்நாட்டு விமான போக்குவரத்து உள்ளிட்ட ஆபத்துக்களையும் சேர்த்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் சந்திக்கும் பொதுவான ஆபத்துக்கள் குறித்து அமெரிக்க அதிபரும், ரஷ்ய வெளியுறவு அமைச்சரும் பரிசீலித்தனர்´´ என்று தெரிவித்தார்.

´´இப்பேச்சுவார்த்தையின் போது எத்தருணத்திலும் உளவுத்துறை ஆதாரங்கள் அல்லது முறைகள் விவாதிக்கப்படவில்லை.

மேலும், ஏற்கனவே பொது வெளியில் அறிவிக்கப்படாத எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் அமெரிக்க அதிபர் வெளிப்டுத்தவில்லை´´ என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மெக்மாஸ்டர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், டிரம்பின் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தொடர்பு உள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு அவரை தொடர்ந்து பின்தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுக்களை ´´பொய்யான செய்திகள்´´ என அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.

பாதுகாப்புத்துறை தொடர்புடைய முக்கியமான விஷயங்களை ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் எவ்வாறு கையாண்டார் என்று தனது அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் மீண்டும் மீண்டும் விமர்சித்திருந்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *