சகோதரர் வை.எல். மன்ஸூர் கட்சிக் கூட்டம் ஒன்றில் முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஷிப்லி பாருக் முன்னிலையில் சகோதரர் ரியாழை வெங்காயம் என்று அழைத்தது பற்றிய விமர்சனங்களைத் தொடர்ந்து சகோதரர் மன்ஸூரைக் காட்டமாகத் தாக்கி முகமறியாப் போராளி(?) எழுதிய விமர்சனம் கல்குடா நேசன் இணையத்தில் பதிவாகியிருந்தது.
அதில் சகோதரர் மன்ஸூரை அவமானப்படுத்தும் விதத்தில் ஒரு குடிகாரனாகச் சித்தரிக்க முயன்றிருப்பதைக் காண நேர்ந்தது. பதிலாக அதை எழுதியவரைத் தெரியப்படுத்துமாறும் இல்லாவிடில் வழக்குத் தொடரப் போவதாகவும் சகோதரர் மன்ஸூர் குறிப்பிட்டிருக்கிறார்.
உணர்ச்சியை முதன்மைப் படுத்தியும் சிந்தனையை (மூளையை) இரண்டாம் பட்சமாகவும் எடுத்துக் கொண்டு அரசியல் செய்வதால், அவசரப்படுவதால்தான் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுகின்றன.
சரி பிழைக்கு அப்பால் சகோதரர் மன்ஸூர் நேரடியாகவேதான் ரியாழ் பற்றிய விமர்சனத்தை முன்வைத்தார். அதே தைரியம் அவருக்குக் கல்குடா நேசனில் பதில் எழுதிய போராளியிடம் இல்லை. இதேபோல சகோதரர் மன்ஸூரும் நினைத்தால் வேறு ஒரு பெயரில் இந்த விமர்சனத்துக்குப் பதிலாக இட்டுக்கட்டப்பட்ட ஒரு விமர்சனத்தை எழுதுவது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை. அப்படியே எழுதினாலும் அதைப் பதிலாக ஏற்றுக் கொண்டு பிரசுரிக்கும் நிலையில் கல்குடா நேசன் இருக்கிறதா என்பது அடுத்த கேள்வி.
செய்தித் தளம் நடத்துபவர்கள் எதை வேண்டுமானும் பிரசுரிப்போம் நினைப்பது ஊடக தர்மம் அல்ல. அந்த விமர்சனத்தின் கடுமையைக் குறைக்கும் அதிகாரம் அதன் பிரதான ஆசிரியருக்கு உண்டு.
அரசியல் எதிராளியை, தமக்குப் பிடிக்காதவரை, தமது கருத்துக்கு இசைவாகாதவரை விமர்சிப்பது என்றால் முகமூடி போட்டுக் கொண்டுதான் பலர் களத்தில் இறங்கி விடுகிறார்கள். மன்ஸூரை விமர்சிக்க முகமூடி அணிந்து கொண்டவர் – மன்ஸூர் விமர்சிக்கப்பட்டதை விட மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகக் கூட இருக்கலாம், அதை மன்ஸூர் அறிந்திருக்கலாம், அவரை அவர் வெளிப்படுத்தி விடுவாரோ என்ற அச்சத்திலும் கூட முகமூடியை அணிந்திருக்கலாம் என்ற எண்ணம் யாருக்கும் வரலாம் அல்லவா?
இங்கே சகோரர் மன்ஸூருக்கு இங்கே நான் வக்காலத்து வாங்க வரவில்லை. அவர் விமர்சிக்கப்பட்ட விதம் பிழை என்பதைச் சுட்டிக்காட்டவே விரும்புகிறேன். ஏனெனில் ஒரு தவறை இன்னொரு தவறு கொண்டு நியாயப்படுத்த முடியாது.
நீங்கள் பிரிந்திருந்து அரசியல் நடத்துவது வேறு விசயம். ஆனால் நடந்துபோன சம்பவங்களுக்கு இருசாராரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இதை முடித்துக் கொள்ளுங்கள்.
இல்லையென்னால் வெங்காயம் இன்னும் அவியும். நாற்றமெடுக்கும்!
(பதிவோடு சம்பந்தப்படாதவையும் – பொதுவெளிக்குப் பொருந்தாதவையுமான பின்னூட்டங்கள் நீக்கப்படும்.)