Breaking
Tue. Nov 26th, 2024

(வாஸ் கூஞ்ஞ)

வட மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தை பிரதிநிதித்துவ படுத்துகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள் ‘முஸ்லிம்களுக்கான தனியான தென்கிழக்கு அலகு இருக்ககூடாது’ என்பதில் தமிழ்த்தலைமைகள் உறுதியாக இருக்க வேண்டும் என கூறிய கருத்தை தான் மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான தீர்மானம் மேற்கொள்கின்ற பொறுப்பினை இலங்கை முஸ்லிம்கள் தமது தாய்க் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிடம் ஒப்படைத்திருக்கின்ற உண்மை நிலையினை விளங்கிக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

குறிப்பாக வடகிழக்கு வாழ் முஸ்லிம்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக காணப்படுகின்ற அரசியல் தீர்வு சம்பந்தமாக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்ற இக்கால கட்டத்தில் இவ்வாறான விசமத்தனமான கருத்துக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசிற்கும் நிலவி வருகின்ற நல்லுறவை சீர்குலைப்பதற்கான முயற்சியாகவே தன்னால் பார்கப்படுவதாக வட மாகாண சபை உறுப்பினர் எச்.எம்.றயீஸ் ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கின்ற செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த ஜனவரி மாதம் கனடாவில் இடம்பெற்ற வடகிழக்கு மீள் கட்டுமான மாநாட்டில் வடமாகாண சபை சார்பாக கலந்து கொண்டிருந்த அஸ்மீன் அவர்கள் முஸ்லிம் மக்கள் தொடர்பாக முன்வைத்த கருத்துக்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அஸ்மீன் அவர்கள் கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர். எனவே முஸ்லீம் மக்கள் சார்பாக குறிப்பாக வட கிழக்கு முஸ்லீம்கள் சார்பாக தீர்மானம் மேற்கொள்ள எவ்வித அங்கீகாரமும் அவருக்கு இல்லை. தனக்கு போனஸ் ஆசனத்தை வழங்கிய தமிழ் கூட்டமைப்புக்கு நன்றி விசுவாசத்தைக் காட்ட தன் சமூகத்தை காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

இன் நிலையில் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி அய்யூப் அஸ்மினை வடமாகாண சபையில் இருந்து மீளழைத்தல் என தமது உயர்சபையில் தீர்மானித்திருக்கின்ற முடிவினை உடனடியாக அமுல்படுத்த முன்வரவேண்டும் என்ற கோரிக்கையினை வடமாகாண முஸ்லிம்கள் சார்பாக தான் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் காங்ரஸ் தமது சமூகத்தினது உரிமைகளையும் அபிலாஷைகளையும் தலைவர் ஹக்கீம் தலைமையில் அடைந்து வருகின்ற நிலையினை சிலாவத்துறை படைமுகாம் அகற்றுதல் விடயத்தில் இறைவன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததையிட்டு மனமகிழ்கின்றேன். அத்துடன் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் தனியான அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்கின்ற ஓர் அலகு மறைந்த தலைவர் மர்ஹும் அஸ்ரப் கொண்டிருந்த இலட்சிய அரசியல் அலகினை நிறுவுகின்ற காலம் விரைவில் கிட்டயிருப்பதாகவும் றயீஸ் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *