(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)
ஜனாதிபதி மைத்திரியினால் முசலி பிரதேசத்தின் சில பகுதிகள் வனமாக வர்த்தமானிப்படுத்தப்பட்டிருந்தது.இதனை தொடர்ந்து முசலி பிரதேசத்து மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
அண்மையில் இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து பேசிய போது இது தொடர்பில் சாதகாமான முடிவு எட்டப்பட்டிருந்தது.அதனை தொடர்ந்து இவர்களின் வேண்டுகோளின் பெயரில் அப் போராட்டம் கை விடப்பட்டிருந்தது.
இது மோடியின் வருகையை முன்னிட்டும் தனது அமைச்சுக்கான பேரம் பேசலை அடிப்படையாக கொண்டும் கை விடப்பட்டதாக மு.கவை சேர்ந்த சில கதைகளை பரப்பி வருகின்றனர்.
மோடி அந்த மக்கள் போராட்டம் செய்து கொண்டிருக்கும் பிரதேசத்தின் பக்கம் தலை வைத்து தூங்கவும் மாட்டார்.அந்த மக்கள் காட்டுக்குள் போராட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்.இதனை சிந்தித்தால் இது பொய் என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
தற்போது அமைச்சு மாற்றம் எதுவும் இடம்பெறாது என அமைச்சரை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.அமைச்ச ராஜிதவின் வாக்குறுதியை வேத வாக்காக கொள்ளாது போனாலும் அமைச்சரை மாற்றம் இடம்பெறும் என்ற உறுதியான முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.இப்படி இருக்க அமைச்சர் றிஷாதின் அமைச்சு மாற்றத்துக்கான ஒப்பந்தம் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை.
அது போன்று ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் என்.எம் அமீன் உட்பட பல சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.அந்த போராட்டத்தை இவர்களும் சேர்ந்தே நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.இவர்களுக்கு அமைச்சர் றிஷாதுக்கு கூஜா தூக்க வேண்டிய அவசியமில்லை.
இவற்றினை எல்லாம் வைத்து சிந்தித்தால் அமைச்சர் றிஷாத் மீது முன் வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்கள் போலியானவை என்பதை சாதாரணமாகவே அறிந்து கொள்ளலாம்.
இப் போராட்டம் தற்காலிகமாகவே இடை நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கு சாதகமான தீர்வு எட்டப்படாத போது மீண்டும் அமைச்சர் றிஷாத் இப் போராட்டத்தை தொடர வேண்டும்.அல்லாது போனால் தற்போதைய விமர்சனங்களை உண்மை படுத்தி விடுவார்.அமைச்சர் றிஷாதின் இச் செயற்பாடு சுயநலத்தை அடிப்படையாக கொண்டதா என்பதை உறுதி செய்ய இன்னும் காலம் உள்ளது என்பதே உண்மை.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள சந்திப்புக்களின் போது இவ் விடயத்திற்கு தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அவர் இது தொடர்பில் ஏன்ன சுயநல ஒப்பந்தங்களை செய்திருந்தாலும் அவற்றை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.
அமைச்சர் றிஷாதுக்கு எதிரானவர்கள் முன் வைக்கும் விமர்சனங்களின் ஊடாக அமைச்சர் றிஷாதே இப் போராட்ட காரர்களின் பின்னால் இருப்பதை அவ் விமர்சனவாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அமைச்சர் றிஷாத் அரசில் இருந்து கொண்டு அரசின் செயற்பாட்டிற்கு எதிராக இப்படியானதொரு தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தை செய்து அழுத்தம் வழங்க அலாதித் துணிவு வேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அமைச்சர் றிஷாத் அதனை தீர்க்காது அதனை காட்டியே அரசியல் செய்வதாகவும் மேலுள்ள விமர்சனங்களை முன் வைப்பவர்களே குற்றம் சுமத்துகின்றனர்.அப்படியானால் அவர் எதற்கு இப்படியானதொரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டும்?