(அஸ்லம் எஸ்.மௌலானா)
சாய்ந்தமருதில் இயங்கி வந்த இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாண காரியாலயம் இடமாற்றப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை மீண்டும் இங்கு கொண்டு வருவதற்காக இளைஞர்களை ஒன்றுதிரட்டி சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்போம் என கல்முனை தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் எப்.எம்.தில்ஷாத் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் பிரதித் தலைவர் இஸ்மாயில் இக்தார் தலைமையில் சாய்ந்தமருது எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
“எவ்வித அறிவித்தலுமின்றி இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாண காரியாலயம் கடந்த சில நாட்களாக மூடப்பட்டிக்கிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இதனை அம்பாறைக்கு இடமாற்றுவதற்கு இங்குள்ள முஸ்லிம் அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளார்கள். தமது தனிப்பட்ட பதவியுயர்வுகளுக்காகவே அவர்கள் இப்பிராந்திய இளைஞர் சமூகத்திற்கு இவ்வாறு துரோகமிழைத்துள்ளார்கள்.
இந்த காரியாலயத்தை அம்பாறைக்கு இடமாற்றுவதற்கு கடந்த வருடமும் ஒரு முயற்சி எடுக்கப்பட்டிருந்தது. அதனை அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவர் ஏ.எம்.ஜெமீல் ஊடாக அமைச்சர் றிஷாத்தின் பங்களிப்புடன் தடுத்து நிறுத்தினோம்.
எனினும் தற்போது யொவுன்புர இளைஞர் மாநாட்டைப் பயன்படுத்தி மிகவும் சூட்சமமாக இக்காரியாலயம் அகற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை
தடுப்பதற்கு மாவட்ட மற்றும் மாவட்டத்திற்கு வெளியே உள்ள அரசியல் தலைமைகள் ஊடாக நாம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
இருந்தும் மேற்படி மாகாணக் காரியாலயத்தை மீண்டும் இங்கு கொண்டு வருவதற்கு அரசியல் தலைமைகள் ஊடாக நாம் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றோம்.
அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்றவர்கள் இவ்விடயத்தில் கரிசனை எடுத்ததாக தெரியவில்லை. ஊடக அறிக்கைகளை மட்டுமே அவர்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களை தொடர்ந்தும் நம்புவதற்கு நாம் தயாரில்லை. கல்முனைத் தொகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள் எமது விடயங்களில் தொடர்ந்தும் பொடுபோக்குத்தனமாக செயற்படுவார்களானால் அடுத்த தேர்தல்களில் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்.
தற்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் கபீர் ஹாஷிம், ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், முஜிபுர் ரஹ்மான் எம்.பி. போன்றோர் ஊடாக தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். ஜனாதிபதி மைத்திரியுடன் சந்திப்பதற்கான ஒழுங்குகளை செய்து தருவதாக நுஆ தலைவர் ஆசாத் சாலி எம்மிடம் தெரிவித்துள்ளார்.
எம்மால் முடியுமான அத்தனை முயற்சிகளையும் செய்தும் கூட சாதகமான தீர்வு கிடைக்கா விட்டால் இளைஞர்களை ஒன்றுதிரட்டி களத்தில் இறங்கிப் போராடுவோம். தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் குதிப்போம். எனது இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக்கூட ராஜினாமா செய்வேன்” என்றார்.
இச்சந்திப்பில் இளைஞர் நாடாளுமன்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் இசட்.எம்.சாஜித் உட்பட மற்றும் சிலரும் கருத்து தெரிவித்தனர்.