ஜனாதிபதியின் மாவில்லு பேணற்காடு வர்த்தமானி பிரகடனம் தொடர்பாக அவரது பணிப்புரையின் பேரில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளருடன் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வொன்று கிடைக்காவிட்டால் அதற்கெதிராக நாம் போராட்டங்களை நடத்துவோம் என ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அப்துர் ராஸிக் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் பூர்வீக காணி வனபிரதேசத்துக்கு அவசியமென்றால் அதற்குப் பதிலாக அரசாங்கம் மாற்றுக் காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார். நேற்றுக்காலை கொழும்பு ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
வில்பத்து பிரதேசத்தில் முசலி பிரதேச சபை பிரிவில் முஸ்லிம்கள் தங்களது பூர்வீக காணிகளிலே குடியேறினார்கள்.
அவர்கள் வில்பத்து வனபிரதேசத்தை அழிக்கவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்பு மீள தங்களது பூர்வீக காணிகளுக்கு வந்த மக்கள் காடுகளாகியிருந்த தமது காணிகளையே சுத்தம் செய்தார்கள்.
2012 ஆம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டின் ஜனாதிபதியின் மாவில்லு பேணற்காடு வர்த்தமானி பிரகடனம் என்பவற்றினால் முஸ்லிம்களின் பூர்வீக காணிகள் அவர்களது விவசாய நிலங்கள் வன பிரதேசத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இராணுவம் மற்றும் கடற்படை தமது தேவைகளுக்காக முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளை சுவீகரித்துள்ளன. நடுக்காட்டில் இராணுவமே காடழித்து பாதையொன்றினை அமைத்துள்ளது. இந்த பாதையோரமாக தங்களது காணிகளிலே முஸ்லிம்கள் குடியேறியுள்ளார்கள். இப்பகுதிகளில் 40 வருடங்களுக்கு முன்பிருந்தே முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
வில்பத்து வன பிரதேச எல்லையில் பூங்குளம் என்று ஒரு மீனவ கிராமம் இருக்கிறது. இங்கு கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். இங்கு அரசாங்க பாடசாலையுள்ளது. கிராம சேவகரும் கடமையாற்றுகிறார். தற்போது இங்கு அரசாங்கத்தினால் 11 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இக்கிராம மக்கள் காடழித்தார்கள்.
என்று குற்றம் சுமத்தப்படவில்லை. மறிச்சுக்கட்டி, சிலாவத்துறை எனும் பிரதேசங்கள் முசலி பிரேதேச சபையின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன. இப்பகுதிகள் மாவில்லு பேணற்காடு வர்த்தமானி பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பூங்குளம் கிராமம் புத்தளம் பிரதேச சபையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம்கள் வேண்டுமென்றே பாதிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஏன் இந்த ஓரக்கண் பார்வை. பூங்குளம் மக்கள் காடழித்தார்கள் என்று குற்றம் சுமத்தப்படவில்லை.
இராணுவம் மற்றும் கடற்படை பாதுகாப்பு கருதி முஸ்லிம்களின் காணிகளை சுவீகரித்தாலும் அவர்களுக்கு மாற்றுக்காணி வழங்க எந்தவித ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இதனால் முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பகுதிக் கருகில் உள்ள காணிகளிலே குடியேறும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். அக்காணிகளும் அவர்களுக்குரியதே.
ஜனாதிபதி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்களை அவர்களது பூர்வீக காணிகளில் மீள் குடியேற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடற்படை மற்றும் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்கப்பட வேண்டும்.
முசலி பிரதேச சபை பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளஜாசிம்நகர், ஹுனைஸ் நகர் ஆகிய குடியேற்றங்கள் அரச அனுமதியுடனே நிர்மாணிக்கப்பட்டன. அக் குடியேற்றங்கள் அரபுக்கொலனிகள் என்று குற்றம் சுமத்தப்படுவது தவறாகும்.
மது தொழிற்சாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மக்களை மதுவிலிருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று கூறும் அரசு மட்டக்களப்பு – கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மது உற்பத்தித் தொழிற்சாலையை உடன் நிறுத்த வேண்டும். இல்லையேல் விரைவில் மட்டக்களப்பில் இதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம் என ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் எம்.எப். ரஸ்மின் தெரிவித்தார்.
‘சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாவில் மதுபான தொழிற்சாலை அமைவதால் மக்களின் சகவாழ்வு, கலை, கலாசாரம், கல்வி உட்பட அனைத்து துறைகளும் அழிவுக்குள்ளாகும். இங்கு முஸ்லிம் பள்ளிவாசல்கள், கோயில்கள், ஆலயங்கள், பன்சலைகள் இருக்கின்றன. மதஸ்தலங்களுக்கும் சவால்கள் ஏற்படும். மட்டக்களப்பு பிரதேசத்தில் மதுபான விலையிலும் வீழச்சியேற்படும். இதனால் மக்கள் மதுவின் பால் ஈர்க்கப்படுவார்கள்.
கல்குடாவில் மது உற்பத்தி தொழிற்சாலை நிறுவுவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் மாகாண சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை. மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் அங்கு மதுபான தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவே நிர்மாணிக்கப்படுகிறது என்று நியாயம் கூறப்படுகிறது.
அனைத்து சமயங்களும் மதுபான பாவனையை எதிர்க்கின்றன. இஸ்லாம் மதுபாவனையை கடுமையாகக் கண்டிக்கிறது. மதுபானசாலை நிர்மாணம் ஆரம்பிக்கப்படுவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்பே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைப்பொருளுக்கு எதிரான மாநாட்டை கிழக்கில் நடத்தினார். அடுத்த மாதம் கிழக்கில் மதுபானசாலை நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டது. இது வேடிக்கையானதாகும்.
சிறுபான்மை மக்களின் பங்களிப்புடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களை அழிவின்பால் இட்டுச்செல்லும் மதுபான தொழிற்சாலையை கிழக்கில் நிர்மாணிக்க அனுமதி வழங்கியுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும். அரசாங்கத்துக்கு பெரும் வரி செலுத்தப்படுகிறது என்பதற்காக அர்ஜுன மகேந்திரனின் உறவினருக்கு இதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் சக்திகளே செயற்பட்டுள்ளன என்றார்.