1987 இலங்கையில் நடந்த யுத்தத்தை இந்தியா நிறுத்தக் கோரியும் இலங்கை அரசு நிராகரித்தமையினால், இலங்கை வான்பரப்பினை இந்திய விமானங்கள் ஆக்கிரமிக்கவே ஜே.ஆர் இந்தியாவுக்கு அடிபணியும் நிலையும், இரவோடு இரவாக ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தமும் கைச்சாத்தாகியது. கிழக்கில் பெரும்பான்மையாக இருந்த முஸ்லிம்கள் வட,கிழக்கு இணைப்பினால் விகிதாசாரத்தில் குன்றிப்போய் சிறுபான்மையிலும் சிறுபான்மையாக மாற்றப்பட்டார்கள்.
பாராளுமன்றில் அன்றிருந்த முஸ்லிம்களும் வாய்மூடி மெளனிகளாகவே இருந்தார்கள். இக்காலகட்டத்திலேயே கிழக்கு முஸ்லிம்களை விழித்தெழச்செய்யும் பணியினை அஷ்ரப் அவர்கள் கச்சிதமாக ஆரம்பித்தார். 1988 இணைந்த வடகிழக்கு மாகாணசபைத்தேர்கள் நடாத்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல்களை மீறியும் மு.கா களம்கண்டு கன்னி வெற்றியை ஈட்டிக்கொண்டது.
அந்நாட்களில் சிறுவனாகவிருந்து அஷ்ரப் பாசறையில் பயின்ற ஹிஸ்புல்லாவின் பேச்சாற்றல் பலரையும் ஈர்த்திருந்தது. ஆனால் இன்று அவர் அந்தக்கட்சியிலேயே இல்லாது கவலையளிக்கிறது. 1989 பாராளுமன்றத்தேர்தலில் அஷ்ரப் தலைமையில் போட்டியிட்ட மு.கா அவரோடு சேர்த்து ஹிஸ்புல்லாஹ்,சுந்தரமூர்த்தி அபூபக்கர், நெஸனல் லிஸ்ட் ஊடாக புகார்தீன் ஹாஜியாரையும் பாராளுமன்றம் அனுப்பியது.
1990 பிரேமதாஸா ஆட்சியில் முஸ்லிம்கள் யாழில் இருந்து உடுத்த உடையுடன் வெளியேற்றப்படுகிறார்கள். இவைகளுக்கெல்லாம் இடையில் ஹக்கீம் எனும் ஓர் தனிமனிதனின் செல்வாக்கு அக்கட்சியில் இருந்ததில்லை. 1994 ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் புகார்தீன் ஹாஜியாரின் சிபாரிஸின் அடிப்படையிலேயே ஹக்கீம் என்பர் இந்தப்பேரியக்கத்துக்குள் நெசனல் லிஸ்ட் ஊடாக உள்வாங்கப்படுகின்றார்.
2000ஆம் ஆண்டு தலைவர் அகால மரணமடையவே தனது நப்ஸ்ஸுக்கு விருந்தாக மு.கா தலைமையை தலையில் சுமக்கிறார் ஹக்கீம். பின்னர் கிழக்கு முஸ்லிம்களின் நாடித்துடிப்பை உரசிப்பார்த்து உணர்ச்சியூட்டும் அரசியலை மாத்திரம் அவர்களிடம் அரங்கேற்றி இந்த நிமிடம் வரை சுபசோபன வாழ்கையில் திழைத்துக்கொண்டிருக்கின்றார்.
நடைபெற்ற பாராளுமன்ற ஜனாதிபதி தேர்தல்களில் எல்லாம் பள்ளிகளையும் பர்தாக்களையும் கேடையமாகக் கொண்டே அரசியல் செய்தார். போர்க்குணம் மங்கிமறைந்து ,ஆயுத பலமோ , டயஸ்போராக்களின் பலமோ , சர்வதேச பலமோ அற்ற ஒரு சமூகத்தை என்றுமே எதிர்மறையாக வழிப்படுத்திய சாணக்கியம் அவரைச் சார்ந்தது.
ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களை ஒரு சிறு குழுவாக அடையாளப்படுத்திய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சம்மந்தன் ஐயாவுடன் சேர்ந்து முஸ்லிம்களின் பிரச்சினை தீர்க்க பிரயர்த்தனம் எடுப்பது இன்னும் இன்னும் பெரும்பான்மை மக்களை சினமடையச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. சர்வதேசத்தினை நம்பிய முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் அழிக்கப்பட்டதே வரலாறு.
மேலும் இன்னும் முஸ்லிம் தலைமைகள் பிரிந்து நின்று தத்தமது நிகழ்ச்சி நிரல்களை மாத்திரம் அரங்கேற்ற எத்தனிப்பதானது பிளவில் பெரும்பான்மையாக இருக்கும் ஹக்கீம் போன்றவர்களுக்கே சாதகமாக அமையும். இந்நிலை முஸ்லிம்களுக்கு விமோசனம் பெற்றுத்தரப்போவதில்லை. ஆகவே தான் ஒருமித்து ஒலிக்கும் கூட்டொன்றினை அமைத்து நகரவேண்டியதும், விமோசனம் ஒன்று நமதினத்துக்குக் கிடைக்கப்பெறுவதானால் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனே பெற வேண்டும் என்பதும் விதியாகும்.