(இப்றாஹீம்)
ஜனாதிபதி மைத்திரி – ரணில் இணைந்து ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பங்காளிகள் முஸ்லிம்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர். தாங்கள் ஆட்சியிலிருப்பதற்கு காரண கர்த்தாக்கள் முஸ்லிம்கள் தான் என்பது ரணிலுக்கும் மைத்திரிக்கும் நன்கு தெரிந்த விடயம் . மகிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்கள் பட்ட துன்பங்கள் எண்ணிலடங்காதவை.
தம்புள்ளை தொடக்கம் பேருவளை வரை அவர்கள் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் அநேகம். இந்த அக்கிரமத்தை பொருத்துக்கொள்ள முடியாமலேயே முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை நல்லாட்சி அரசு உருவாக வழங்கினர். அந்த வாக்குகள் மைத்திரிக்கோ, ரணிலிற்கோ வழங்கப்பட்ட வாக்குகள் அல்ல. மகிந்தவை ஆட்சிக்கதிரையிலிருந்து தூக்கியெறிவதற்கா வழங்கப்பட்ட வாக்குகளே அவை.
அதே போல பிரபாகரனை அழித்ததற்காகவும் வடக்கு – கிழக்குப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முட்டுக்கட்டைப் போட்டதற்காவுமே மகிந்தயை தூக்கியெறிய வாக்களித்தனர்.
மைத்திரியையும் ரணிலையும் தமிழ் பேசும் சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் ஆதரித்தமைக்குக் காரணம் தங்கள் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்பதே.
மைத்திரியினுடைய ஆட்சி தமக்கு விடிவை பெற்றுத்தருமென தமிழர்கள் நம்புகின்றனர். நல்லாட்சியரசின் தலைவர்களும் அப்படியே காட்டி வருகின்றனர்.
பொங்கல் போன்ற தமிழர் விழாக்களிலும் தமிழர்களின் வைபவங்களிலும் பங்கேற்கும் ரணிலும் மைத்திரியும் தமிழர் பிரச்சினை பற்றியே பெரிதாகப் பேசுகின்றனர். காணிகளை விடுவிப்போம், அரசியல் கைதிகளை விடுவிப்பொம், ஆறு மாதங்களில் மீள்குடியேற்றுவோம், காணாமல் போனவர்களுள் தொடர்பில் நீதியை பெற்றுத்தருவோம் என்றெல்லாம் உரையாற்றுகின்றனர். நல்லாட்சித்தலைவர்கள் தாம் கூறுவது போன்று அதற்கான தீர்வையும் சுடச்சுடப் பெற்றுக்கொடுக்கின்றனர்.
தமிழர் மேடைகளில் இதுவரை பேசிய அரசியல் தொடர்பில் தொட்டும் பார்க்காத ரணிலும் மைத்திரியும் பாலமுனையில் முஸ்லிம் சமூக மேடையில் பேசிய அரசியலை மட்டுமே பேசிவிட்டு சென்றுள்ளனர்.
இனப்பிரச்சினைத்தீர்வில் முஸ்லிம்கள் பங்காளர்கள் இல்லையா? அவர்களுக்கு எந்தப்பிரச்சினையுமில்லையா? வடக்குக் கிழக்கில் அவர்கள் வாழவில்லையா? அகதி வாழ்வை அவர்கள் அனுபவிக்கவில்லையா? யுத்தத்தால் அவர்கள் பாதிக்கப்படவில்லையா? கானாமற்போகவில்லையா? கடத்தப்படவில்லையா? பாலமுனை மாநாட்டில் முஸ்லிம்கள் பற்றி அவர்களின் பிரச்சினை தொடர்பில் எந்த்வொரு வார்த்தையேனும் ரணிலும் மைத்திரியும் கூறம் மறுத்ததேன்? இது தான் முஸ்லிம்களின் இன்றைய கேள்வி?
சரி, முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பிரச்சினை பற்றி அவர்கள் பேசவில்லை. ஆனால் கிழக்கு மண்ணில் நின்று கொண்டு கிழக்கு முஸ்லிம்களுக்கு கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநியாயங்கள் குறித்து ஒரு வரி கூட பேச மறந்ததேன்? ஒலுவில் துறைமுக நிர்மாணப்பணிகளுக்கென முஸ்லிம்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகளுக்கு இன்னும் நஷ்ட ஈடு இல்லை. சவுதியின் நிதியுதவியுடன் நுரைச்சோலையில் கட்டப்பட்ட வீடுகளில் முஸ்லிம்கள் வாழ பேரினவாதிகள் இன்னும் தடை. கல்முனை நகர நிர்மாணம் ஆகியவை தொடர்பில் கூட ரணிலும் மைத்திரியும் வாய் திறக்காதது ஏன்?
முஸ்லிம் காங்கிரஸ் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து பாலமுனையில் மேடையமைத்து மைத்திரியையும் ரணிலையும் வரவழைத்தது மகிந்தவுக்கு சவால் விடவா? தங்கள் ஆட்சியின் வீரப்பிரதாபங்களை இந்த மேடையில் கொட்டவா? முஸ்லிம்களை நாடெங்குமிலிருந்து கொண்டுவந்தமை இவர்களின் இந்த சண்டித்தன பேச்சை கேட்கவா? முஸ்லிம் சமூகம் இன்று இவ்வாறு வினா எழுப்புகின்றது. முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் அந்த மக்களின் விமோசனத்துக்காகவும் நன்மைக்காவும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தங்கள் தான் என்ன? முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்த பலாபலன்கள் தான் என்ன? காத்தான்குடிப் பள்ளிவாயல் படுகொலை, அழிஞ்சிப் பொத்தானை மக்கள் இரவோடிரவாக வெட்டிக்கொள்ளப்பட்டமை, ஏறாவூர் படுகொலைகள் தொடர்பில் இந்த நல்லாட்சியில் ஏதாவது அழுத்தங்களைக்கொடுத்து நிவாரணம் பெற்றுக்கொடுத்திருக்கின்றதா?
1999 ஆம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்கள் இன்னும் அகதிகளாக வாழ்க்கை நடத்துகின்றனரே, இந்த சந்தர்ப்பத்தை ஹக்கீம் பயன்படுத்தினாரா? சம்பந்தன் இருந்த மேடை என்பதற்காவா அவர் புலிகள் பற்றி வாய் திறக்கப் பயந்தார்?
கிழக்கிலே பாலமுனையிலே ஒரு திருவிழா போன்று மாநாடொன்றை நடாத்தி முடித்திருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் என்ன? அபிலாஷைகள் என்ன? என்று நாட்டுத்தலைவர்களுக்கு உணர்த்தப்படவில்லை. நாட்டுத்தலைவர்களும் (சம்பந்தன் ஐயா உட்பட) முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை, என்ற பாணியிலேயே கதையளந்து சென்றிருக்கின்றனர். ஏற்பாட்டளர்களும் வீர வசனங்களைப் பேசி கண்டபடி உளறியுள்ளனர்.
இனியாவது முஸ்லிம் சமூகம் தமக்கு எவரால் பயன் கிடைக்கும் என்பதை தெளிவாக அடையாளம் கண்டு சரியான பதையில் பயணிப்பதே மேலானது.