அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்றைய நாளில் அமைச்சரவையில் மாற்றம் செய்ய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாடற்ற நிலை நீடித்து வந்த காரணத்தினால் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை.
எனினும் தற்போது அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து நேற்றிரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மிக நீண்ட நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட சந்திப்பு ஒன்றை நேற்றிரவு நடத்தியுள்ளனர்.
பெரும்பாலும் இன்றைய தினம் அமைச்சரவை மாற்றமொன்றை எதிர்பார்க்க முடியும் என குறித்த ஊடகம் ஊகம் வெளியிட்டுள்ளது.