Breaking
Mon. Nov 25th, 2024

வடக்கும் கிழக்கும் இணைந்தாலும் முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு என்ற ஒன்று இருக்கக்கூடாது எனும் விடயத்தில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என த.தே.கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் நடைபெற்ற மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே தமிழ், முஸ்லிம் உறவு என்பது மிகவும் முக்கியத்துவம் உடைய ஒரு விடயமாகவே நான் பார்க்கிறேன்.

அப்படியான நல்ல காலம் அன்று இருந்தது. இன்று கூட இந்த அரங்கிலே முஸ்லிம்களை பார்க்கின்ற போது மிகவும் சந்தோசமடைகின்றேன்.

கிழக்கு மாகாணத்தினுடைய முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் தலைவரென்று நாங்கள் இன்றும் அடையாளப்படுத்துகின்ற அஸ்ரப் தன்னுடைய அரசியல் பயணத்தினை தொடங்கியது தமிழ் மக்களோடு இணைந்து தான்.

அவர் தன்னுடைய அரசியல் பயணத்தினை எப்போதும் தனித்து தொடங்கவில்லை தமிழ் மக்களுடன் இணைந்து தான் தொடங்கினார்.

அந்தளவிற்கு தமிழ் மக்களுடைய அரசியலோடு ஒன்றித்திருந்தவர்.

அவர் ஒரு மேடையில் பேசுகின்ற போது “அண்ணன் அமிர்தலிங்கம் தனிநாட்டை பெற்றுத்தருவதற்கு தவறினார் என்றால் தம்பி அஸ்ரப் அந்த தனிநாட்டை பெற்றுத்தருவான்” என்று சொல்லுகின்ற அளவிற்கு எங்களுடைய அரசியல் உறவு அன்று மிக நெருக்கமாக இருந்தது.

1980 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அந்த அரசியல் உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டது அந்த விரிசல் இயற்கையானதல்ல அது செயற்கையானது.

வெளியில் இருந்து புகுத்தப்பட்ட ஒரு முறைகேடான விடயம் இரண்டு சமூகங்களுக்கிடையேயும் தவறான கருத்துக்களும், எண்ணங்களும் திட்டமிட்டு புகுத்தப்படடன.

அதனால் பல்வேறு கசப்பான சம்பவங்கள் இரண்டு சமூகங்களிடையேயும் நிகழ்தேறியிருக்கின்றது. எங்கேயோ ஒரு தவறு நடந்து விட்டது என்றால் அதனை தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பதனால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.

அதனை ஓரிடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு அதனை சீர் செய்து அந்த தவறுகளை ஒழுங்குபடுத்தி அதில் இருந்து மீண்டு வரும் ஒரு நல்ல யுகம் எங்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. அந்த நல்ல யுகம் தற்போது தோன்றியிருப்பதாகத் தான் நான் கருதுகின்றேன்.

சம்பந்தன் அடிக்கடி கூறுவர் வடக்கு, கிழக்கை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் வடக்கும், கிழக்கும் இணைந்திருக்க வேண்டும்.

அங்குள்ள தமிழர்களும், முஸ்லிங்களும் இணைந்திருக்க வேண்டும் என்ற தூரநோக்குடன் செயற்பட்டு வருகின்றார்.

ஆனால் முஸ்லிம் சமூகத்தின் காதுகளுக்கு அது இன்னும் சரியாகப் போய் சேரவில்லையோ அல்லது அதனுடைய தாட்பரியங்களை இன்னும் உணர்ந்து கொள்ள வில்லையோ என்றுதான் எனக்கு தோன்றுகின்றது.

வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மறிச்சுக்கட்டியிலே காணி தொடர்பான பிரச்சினை ஒன்று வந்திருக்கின்றது.

அதே போன்று அம்பாறை மாவட்டத்திலே இறக்காமம் பிரதேசத்திலே மாயக்கல்லி மலை என்ற இடத்தில் ஒரு காணிப் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் இருக்கின்றார்கள் பல கட்சிகள் இருக்கின்றது அனைவரும் தங்களை தலைவர்கள் என மார்தட்டி கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் இந்தப் பிரச்சினைகளுக்கு தனித்து தீர்வினை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற கேள்வி இருக்கின்றது. இந்த காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தலைவர் சம்பந்தன், ரவூப் ஹக்கீம் இணைந்து ஜனாதிபதியை சந்தித்திருப்பதன் மூலம் நல்லதொரு செய்தி கிடைத்திருக்கின்றது.

இதுதான் தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்தால் நல்ல தீர்வினை பெறமுடியும் என்பதனை மாயக்கல்லி மலை விடயத்தில் பெற்றிருக்கின்றார்கள்.

மேலும், வடக்கும், கிழக்கும் இணைந்தாலும் முஸ்லிங்களுக்கு தென்கிழக்கு அலகு என்ற ஒன்று இருக்கக்கூடாது என்ற விடயத்தில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என த.தே.கூட்டமைப்பின் நல்லாட்சிக்கான அமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *