சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில், பாகிஸ்தான் படைப்பிரிவுகள் இரண்டு இந்திய சிப்பாய்களை கொன்றுள்ளதாகவும், அவர்களின் உடல்களை சிதைத்துள்ளதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
காஷ்மீர் எல்லைப்பகுதியில் இருந்த ரோந்துத் தொகுதிகள் மீது பாகிஸ்தான் படைப்பிரிவுகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது.
கொல்லப்பட்ட சிப்பாய்களின் உடலை சிதைத்திருப்பது, ஒரு ராணுவத்தன்மையற்ற செயல் என்றும் அது தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டுப் படை உயர் தர தொழில்முறை ராணுவம் என்றும், ஒரு சிப்பாயை அவமதிக்காது என்றும் கூறி, பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
“இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. மனிதநேயத்திற்கு எதிரானது” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளர். இது மாதிரியான சம்பவங்கள் “போரில் கூட நடைபெறுவதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இது போன்ற செயல்பாடுகள் போரின் போது கூட கேள்விப்படுவதில்லை. நிச்சயமாக அமைதிக் காலத்தில் நடைபெறுவதில்லை என்று இந்திய தொலைக்காட்சிக்கு அளித்த அறிவிப்பில் அவர் கூறினார்.
இந்திய மக்கள் எமது ராணுவத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு பொருத்தமான பதிலடி வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
60 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் தங்களுக்குரியது என்று இந்தியாவும், பாகிஸ்தானும் உரிமைகோரி வருகின்றன
இந்நிலையில், இந்த மாநிலத்தில் நிகழ்ந்துள்ள வன்முறையை தொடர்ந்து திட்டமிடப்பட்டிருந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலை இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரின் பகுதியின் அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
இந்தியாவின் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களும், பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற மோதல்களும் நடைபெற்ற ஒரு நாளுக்கு பின்னர் இந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை இரவு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட 10 பக்க ஆணையில், “தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை நிலவவில்லை” என்று தெரிவித்துள்ளது.
காலியாக இருக்கும் ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 9 ஆம் நாள் நடைபெற்ற இன்னொரு இடைத்தேர்தலின்போது போராட்டக்காரர்களுக்கும், இந்திய பாதுகாப்பு படைப்பிரிவுகளும் இடையே ஏற்பட்ட மோதல்களுக்கு பிறகு இந்த பிராந்தியத்தில் நிலைமை பதட்டமாகவே உள்ளது.
இந்த மோதல்களில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்தனர்.
தலைகர் ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள வாக்குச்சாவடிகளை முற்றுகையிட்டு இந்திய ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடிய நிலையில், துணை ராணுவப்படை (பாரா மிலிட்டரி) துப்பாக்கி குண்டுகளாலும், கைத்துப்பாக்கி பெலட்டுகளாலும் அவர்களை சுட்டனர்.
பிரிவினைவாத தலைவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.