Breaking
Sun. Nov 24th, 2024

(ஊடகப்பிரிவு) 

நாம் எதைச் செய்தாலும் அதனை வேற்றுக் கண்ணோட்டத்தில் எப்போதும் நோக்கும் நமது சமுதாயத்தில் இருக்கும் ஒரு கூட்டத்தினாலேயே நமக்கு தொடர்ச்சியாக பாதிப்புக்கள் நேரிடுகின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பெண் எழுத்தாளர் ருவைதா மதீன் எழுதிய “குடிபெயறும் கனவுகள்”கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக நேற்று (02) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்கள் வில்பத்து காட்டை அழிக்கின்றார்கள், அரபுக் கொலணி உருவாகின்றது, வெளியார்கள் இங்கு குடியேற்றப்படுகின்றார்கள், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு தோட்டங்கள் செய்யப்படுகின்றன என்று இனவாதிகள் இன்று நமது சமுதாயத்தின் மீது பழிபோடுவதற்கு வழி வகுத்தவர்கள் நம்மவர்களிடையே உள்ள ஒரு சிறிய கூட்டமே.

இன்று இனவாத ஊடகங்கள் நாளுக்கு நாள் வில்பத்து தொடர்பிலும் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பிலும் காட்டூன்களையும் விவரணங்களையும் வெளியிடுவதற்கு இவ்வாறான பொய்யான காட்டிக் கொடுப்புக்களே காரணமாகும்.

சுமார் 25 ஆண்டுகளாக வடமாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேறி இந்த பிரதேசத்தில் வாழ்ந்ததால் அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் பெரும்பாலானவை காடுகளாகவே கிடக்கின்றன. அந்த மக்கள் தாம் மீளக் குடியேறுவதில் பல்வேறு சிக்கல்களை அனுபவிக்கின்றனர். மீளக்குடியேறும் மக்களில் அநேகர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள், பொருளாதார ரீதியில் நலிந்தவர்கள். அவர்களின் பிரச்சினைகளை கேட்பதற்கோ பார்ப்பதற்கோ யாரும் இல்லாத நிலையில் அந்த மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நான் குரல் கொடுக்கின்றேன். அதனால்தான் என்னை இனவாதியாக சித்தரித்து நாளாந்தம் தூற்றுகின்றனர். எனினும் நான் என் பணிகளில் இருந்து ஒரு போதும் ஓயப்போவதில்லை.

முஸ்லிம் பெண்கள் எழுத்துத் துறையிலும் கவிதைத் துறையிலும் இன்று ஆற்றல் படைத்தவர்களாகவும் திறமை கொண்டவர்களாகவூம் விளங்குகின்றனர். அந்த வகையில் பெரிய மடுவைப் பிறப்பிடமாகக் கொண்டு மினுவாங்கொடை கிராமத்தில் வாழும் ருவைதாவின் எழுத்துக்கள் கருத்தாழமானவையாகவும் சிந்திக்கக் தூண்டுபவையாகவும் இருக்கின்றன.

இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு உரிய கௌரவத்தையும் அந்தஸ்தையும் வழங்கியுள்ள போதும் நமது மார்க்கத்தைப் பற்றி சரியாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ளாத முஸ்லிம் பெயர்களைத் தாங்கிய முஸ்லிம்கள் சிலர் பெண்ணுரிமை பற்றி பேசுவதுடன் இஸ்லாமிய விரோத கருத்துக்களை பரப்புகின்றனர். இந்த வகையில்தான் இஸ்லாமிய திருமணச் சட்டம் தொடர்பான பிழையான கூற்றுக்களை பரப்பி வருகின்றனர். ஆனால் இஸ்லாம் சமத்துவமான மார்க்கமாகும் என்பதை இஸ்லாத்தைப் பற்றிய பிழையான கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

லேக் ஹவூஸ் நிறுவனத்தின் தமிழ் பிரசுர ஆலோசகர் எம்.ஏ.எம். நிலாமின் தலைமையில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மதுல்லா, உப்புக் கூட்டுத்தாபன தலைவர் எம்.எம். அமீன், கலைவாதி கலீல், பாடசாலை அதிபர் கே எச் எம் காமில், கிண்ணியா அமீர் அலி, இல்ஹாம் மரைக்கார் உட்பட அனேகர் கலந்து கொண்டனர். 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *