இலங்கை பௌத்த நாடு பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட இந்த நாட்டில் மேலும் பத்தாயிரம் விகாரைகள் அமைக்கப்படல் வேண்டும். அதற்கான திட்டங்களும் எம்மிடம் உள்ளன. இதனைத் தடுப்பதற்கு யாரும் முன்வரக்கூடாது என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இறக்காமம் மாயக்கல்லி பிரதேச விகாரைக்கான காணி பெறும் விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் துசித்த வணிகசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
பொத்துவில் பிரதேசத்திலுள்ள முகுது மாவிகாரைக்கு 293 ஏக்கர் காணி உள்ளது. ஆனால் விகாரையின் நிர்மாணப் பணிக்கும் பராமரிப்புக்குமாக 4 ஏக்கர் மட்டுமே உள்ளது. மீதி அனைத்தையும் முஸ்லிம் மக்கள் பிரித்தெடுத்துள்ளனர். இதேபோன்று சம்பூர் பிரதேசத்திலும் நாம் பல விட்டுக் கொடுப்புகளுடன் காணிகளை வழங்கி உள்ளோம். இன்றைய கட்டத்தில் காணியைப் பெற்றுக் கொடுப்பது மாவட்ட செயலாளரின் கடமையாகும்.
மேலும் முஸ்லிம் பள்ளிவாசல், இந்து ஆலயம் என்பன அமைப்பதற்கே உரிய அனுமதி பெறப்படவேண்டும். ஆனால் பௌத்த விகாரைகளுக்கு அவ்வாறான அனுமதிகள், எதுவும் பெறப்படாமலே நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்கலாம்.
எனவே மாயக்கல்லி பிரதேசத்திலுள்ள காணிச் சொந்தக்காரர்களுக்கு மாற்றுக் காணி 2 ஏக்கர் வழங்கிவிட்டு விகாரை அமைப்பதற்கான காணியை பெற்றுத்தருவதற்கு மாவட்ட செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.