வில்பத்து விவகாரம் தொடர்பில்,முசலி பிரதேச செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட போதும் அவர் கலந்து கொள்ளாமையினால் அங்கு சற்று குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழு, வில்பத்து பிரதேசத்துக்கு, இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
வில்பத்து தொடர்பாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், கடந்த 03ஆம் திகதி, ஜனாதிபதி செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், இவ்விஜயம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
காலை 10.30 மணியளவில் முசலி பிரதேச செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், எம்.எச்.எம். சல்மான், மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ், ஏ.எல். தவம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி குனைஸ் பாரூக்,சட்டத்தரணி முத்தலிப் பாபா பாரூக்,
கடற்படை அதிகாரிகள், வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் அதிகாரிகள், பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஹஸ்புல்லா மற்றும் விரிவுரையாளர் நௌபல் மற்றும் முசலி பிரதேச மக்கள், முசலி பிரதேசச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததோடு அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பணிப்புரைக்கு அமைவாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவியும் கலந்து கொண்டிருந்தார்.
முதற்கட்டமாக முசலி பிரதேச செயலகத்தில் வில்பத்து விவகாரம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
எனினும் கலந்துரையாடலுக்கு பதிலாக பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஹஸ்புல்லா மற்றும் விரிவுரையாளர் நௌபல் ஆகியோர் வில்பத்து தொடர்பில் விளக்கமொன்றினை வழங்கியுள்ளனர்.
எனினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளாமை குறித்து குறித்த கலந்தரையாடலில் கலந்து கொண்ட மக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டனர்.
இதே வேளை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி எழுந்து கருத்தை வெளியிட்டார்.
குறித்த கலந்துராயாடலுக்கு ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் வருவதாக கூறியிருந்தார்கள்.
அவர் வருகை தரவில்லை. எனவே நான் குறித்த கலந்துரையாடலில் இருந்து வெளியேறுகின்றேன் எனக் கூறி அங்கிருந்து சென்றார்.
அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலில் சிலர் குறித்த கலந்துரையாடலானது வில்பத்து விவகாரம் தொடர்பில் இடம் பெறுகின்றதா அல்லது அரசியல் ரீதியாக இடம் பெறுகின்றதா என்ற கேள்வியை எழுப்பினர்.
இதனால் கலந்துரையாடல் இடம் பெற்ற மண்டபத்தில் சிறிது நேரம் குழப்ப நிலை ஏற்பட்டது.
உடனடியாக முசலி பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் பொலிஸாரின் உதவியை நாடி நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததோடு, குறித்த கலந்துரையாடல் குறித்து விளக்கமளித்தார்.
குறித்த கலந்துரையாடல் உயர் மட்ட கலந்துரையாடல் என்பதினால் அழைக்கப்பட்டவர்களை தவிர, ஏனைய பொது மக்களை மண்டபத்தை விட்டுச் செல்லுமாறு பிரதேச செயலாளர் உத்தரவிட்டார்.
அதற்கமைவாக அழைக்கப்பட்டவர்களைத் தவிர ஏனையவர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறினர். தொடர்ச்சியாக கலந்துரையாடல் இடம் பெற்று சிறிது நேரத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
முசலி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் புதிதாக பிரகடனப்படுத்தப்பட்ட வில்பத்து தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மேலும் , பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஹஸ்புல்லா மற்றும் விரிவுரையாளர் நௌபல் ஆகியோர் அதிகாரிகள் முன்னிலையில் வில்பத்து தொடர்பாக விரிவான விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளனர்.
மறிச்சுக்கட்டி பகுதியில் கலப்பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம். அதன் பிற்பாடு அதிகாரிகள் தாம் தயாரித்த அறிக்கையை மேலதிகாரிகளுக்கு சமர்ப்பித்த பின்பு நாங்கள், சுற்றாடல் மற்றும் வனப்பரிபாலன அமைச்சின் செயலாளர் முன்னிலையில் இவ்விடையம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கின்ற மேலதிக சந்திப்பொன்றையும் நடத்தவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.