மீதொட்டமுல்ல குப்பை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக தெரிவித்து அதன்மூலம் பாராளுமன்றம் சென்ற மரிக்கார் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பதவி விலகவேண்டும் என ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவால் பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கான வீடுகள் அழிவடைந்துள்ளன.
இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆட்சியாளர்களால் முடியாமல் போனமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அத்துடன் மீதொட்டமுல்ல குப்பை கொட்டும் பிரதேசத்தில் குடியிருப்பவர்களை அந்த இடத்தில் இருக்காமல் வேறு பிரதேசங்களுக்கு செல்லுமாறு தெரிவித்தும் இந்த மக்கள் கேட்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்தப் பிரதேசத்தில் இருக்கும் அனைவரும் உரித்துரிமை உடையவர்கள். நாங்கள் குடியிருக்கும் பிரதேசத்தில் குப்பைகளை ஏன் கொட்டவேண்டும் என அவர்கள் கேட்கின்றனர்.
அத்துடன் இந்த அரசாங்கம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்தது. இதனை அரசியலாக பயன்படுத்திக்கொண்டு பிரசாரம் செய்த மரிக்கார் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பாராளுமன்றம் சென்றனர். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காதபோது அந்த மக்கள் இவர்களிடம் வந்தபோது அவர்கள் அனைவரையும் அலரி மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பிரதமர் தீர்வை பெற்றுத்தருவதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்தார். ஆனால் பிரதமர் சொன்ன பிரகாரம் எதுவும் நடைபெறாததால் அவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை பொலிஸாரைக்கொண்டு பிரதமர் அடக்கினார். கடந்த அரசாங்க காலத்திலும் இவ்வாறே இடம்பெற்றது.
எனவே இந்த குப்பையை வைத்து அரசியல் பிரசாரம் மேற்கொண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான மரிக்கார் மற்றும் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் இந்த மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியாமல் போனமைக்கு அவர்கள் பதவி விலகியிருக்கவேண்டும் என்றார்.