Breaking
Mon. Nov 25th, 2024
(சுஜப் எம் காசிம்)
நூறு நாள் அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சை தமது கையில் வைத்துகொண்டிருந்தே தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையையும் கிராண்ட்பாஸ் பள்ளி பிரச்சினையையும் தீர்க்க முடியாதவர்களால் எவ்வாறு மறிச்சிக்கட்டி பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பினார்.

அம்பாறை நற்பிட்டிமுனையில் லங்கா சதொச நிறுவனத்தின் கிளையை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,

மர்ஹூம் அஸ்ரபின் மறைவின்பின்னர் முஸ்லிம் காங்கிரசின் தலைமையை வலிந்து பெற்றுக்கொண்ட  ரவூப் ஹக்கீம் இந்த 16வருடகாலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்துக்கு குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு எந்த உருப்படியான பணிகளையும் இற்றை வரை ஆற்றவில்லை .இந்த இலட்சணத்தில் வில்பத்து பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு ஹக்கீமிடம் ஜம்மியதுல் உலமா கோரவேண்டும் என நான் ஜம்இய்யாவிடம் மன்றாடியதாக பிரதியமைச்சர் ஹரீஸ் கல்முனைக்கூட்டத்தில் கதையளந்து இருக்கின்றார்.

கடந்த காலங்களில் பொறுப்பான பல்வேறு அமைச்சுக்களை வைத்திருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், புரையோடிப்போன பல் வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறினார்.

நுரைச்சோலையில் மூடப்பட்டு கிடக்கும் வீட்டுப் பிரச்சினை, பொத்துவில் காணிப் பிரச்சினை,புல்மோட்டை மக்களின் பிரச்சினை ,மூதூர், கிண்ணியா மக்களின் காணிப் பிரச்சினை,ஒலுவில் மீனவர் பிரச்சினை. இவ்வாறு நமக்கிருந்த எண்ணற்ற பிரச்சினைகளை தீர்க்க தவறினார். இந்தப் பிரச்சினைகளை கண்டும் காணாதது போல எதையுமே கணக்கெடுக்காது இருந்த அந்த தலைமையிடம் வில்பத்து பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு நாங்கள் கோரியிருப்போமா?
இத்தனைக்கும் மேலாக கிராண்ட்பாஸ் பள்ளிப் பிரச்சினையில் இரண்டு சமூகங்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் அரசியல் வாதிகள் சாட்சிகளாக கையொப்பம் இட்டிருந்தும் கூட அதனைக்கூட நகர அபிவிருத்தி அதிகாரத்தை தம்வசம் வைத்திருந்தும் இழுத்தடிப்பு செய்திருக்கிறார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை அரசியலில் கால் பதித்ததற்கு  சமூக கட்சியென நம்பியிருந்தவர்கள் இந்த மக்களை கைவிட்டமையே காரணம்.

கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசும். பேரியல் தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணியும் அதிகாரம் உள்ள அமைச்சு பதவிகளை வைத்திருந்து மூன்று கட்சிகளும் முன்று துருவங்களில் அரசியல் செய்தனர்.இந்த நிலையில் நான்காவது கட்சியாக இந்த மாவட்டத்தில் நாமும் மூக்கை நுழைத்து அப்பாவி மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களை சீர்குலைக்க விரும்பவில்லை. தற்போது என்னை விமர்சிக்கும் அம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவர் மக்கள் காங்கிரசில் இணைவதற்காக ஆறு தடைவைகள் என்னை வந்து சந்தித்த போதும் மக்களின் நன்மை கருதி நான் துணைபோக வில்லை.

கிழக்கு மாகாண ஆட்சியை, எமது கட்சியின் உறுப்பினரையும், தேசிய காங்கிரசின் உறுப்பினரையும் பிரித்தெடுத்து ஆட்சி அமைத்தவர்கள் இற்றை வரையில் சமூகத்துக்கு மேற்கொண்ட நன்மைகள்தான் என்ன? மத்தியிலும் மாகாணத்திலும் சுகாதார அமைச்சு,முதலமைச்சர் மத்தியிலே இன்னுமோர் அதிகாரம் மிக்க பொறுப்பான ஓர் அமைச்சை இந்தக் கட்சி கொண்டிருந்த போதும் உங்கள் பிரதேசத்தின் வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டிருக்கின்றனவா? வறுமைகோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு விமோசனம் கிடைத்துள்ளதா? பாடசாலைகளின் தளபாடபற்றாக்குறை தீர்ந்துள்ளதா?

தனிப்பட்ட ஒரு தலைமையை பாதுகாப்பதற்காக மூத்த போராளிகளை தூக்கியெறிவதும் தட்டிக்கேட்பவர்களை வெட்டி வீழ்த்துவதுமே இவர்களின் அரசியல் சித்தாந்தமாக மாறி இருக்கின்றது. இந்த கட்சியில் இருந்து நாம் வெளியேற்றப்பட்ட பின்னர்  இறைவனை முன்னிறுத்தி, இஸ்லாமிய வழியில், தூய்மையான நோக்கத்தில், மக்கள் மீது கொண்ட அன்பினால், நாம் உருவாக்கிய யமக்கள் காங்கிரஸ் இன்று தழைத்தோங்கியிருப்பதை அவர்களின் செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.

மக்கள் காங்கிரஸ் தலைமையை தொடர்ந்தும் தூற்றுவதையும் இல்லாத பொல்லாத அபாண்டங்களை பரப்புவதிலுமே அவர்கள் காலத்தை கடத்துகின்றனர்.எமது கட்சியால் தங்களது இருப்புக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கூட்டங்களில் ஏதேதோ பிதற்றுகின்றனர். கடந்த 31ம் திகதி கல்முனையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் தலைமை தொடக்கம் அவருடன் இருக்கும் ஆறு பேர் என்னையே தூசித்தனர்.இந்த உரைகளை இனவாத சிந்தனையுள்ள, என்மீது காழ்ப்புணர்வுள்ள தனியார் ஊடகம் ஒன்று தொகுத்து தனது பிரதான தலைப்பு செய்தியில் அதனை ஒளிபரப்பும் கைங்கரியத்தை மேற்கொண்டதை நீங்களும் பார்த்து இருப்பீர்கள்.

இறைவனை தவிர நாம் எவருக்கும் அஞ்சப்போவதும் இல்லை. எமது பணிகளை கைவிடப்போவதும் இல்லை.  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *