(ஊடகப்பிரிவு)
பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மீண்டும் பரப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லையென்றும், சந்தையில் பொருட்கள் தாராளமாகவும் நியாயமாகவும் இருக்கின்றதென்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இன்று (07) காலை புறக்கோட்டை சந்தைக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்குள்ள வர்த்தக நிலையங்களில் கள நிலவரங்களை அறிந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் சிந்தக லொக்குஹெட்டி, லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் டிம் கே பி தென்னகோன், மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ்ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சர் குழாம் வர்த்தகர்களுடன் உரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
புத்தாண்டையொட்டி பொருட்களின் விலைகள் உச்சத்தில் இருப்பதாக மீண்டும் புரளிகளை கிளப்பியுள்ளனர். இதனாலேயே ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையில் நாம் இங்கு விஜயம் செய்தோம். உண்மையில் இது ஓர் அப்பட்டமான பொய் என்பதை பொறுப்புடன் அறிவிக்கின்றேன்.
சில ஊடகங்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளுவதற்கு முயற்சிக்கின்றன. புறக்கோட்டையிலுள்ள மொத்த வியாபார நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சில்லறை வியாபாரிகள் இலாபமீட்டக்கூடிய வகையிலேயே இருக்கின்றன. அத்துடன் போதிய அளவு பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய வகையிலான நிலையே இருக்கின்றன.
சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு பொருட்களை பதுக்கி கொள்ளை இலாபம் ஈட்டும் மொத்த, சில்லறை வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்வோம். நுகர்வோர் பாதுகப்பு அதிகாரசபைக்கு நான் பணிப்புரை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இங்கு கருத்து தெரிவித்தார்.
இந்த கள விஜயத்தின் போது அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் இறக்குமதியாளர் சங்கமும் புறக்கோட்டை வர்த்தகர் சங்கமும் ஒத்தாசையாக இருந்தது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 95% ஆன அத்தியாவசியப் பொருட்களை இவ்விரண்டு சங்கமே இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.