(அஸ்லம் எஸ்.மௌலானா)
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்கட்சி வரிசையில் அமர்த்திப் பார்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால ஆசைபட்டால் ஜனாதிபதியும் அதே வரிசையில் அமர நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை சீண்டிப்பார்க்க நினைப்பது இந்த நல்லாட்சி அரசின் மடத்தனமான செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முசலி விவகாரத்தினால் எழுந்துள்ள முரண்பாடு தொடர்பில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவற்றைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கடந்த ஜானதிபதி தேர்தலில் சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகள் பல, மைத்திரியை ஆதரிக்க பின்வாங்கி இருந்த காலகட்டத்தில் எமது கட்சின் தலைவரான அமைச்சர் ரிஷாத் மாத்திரம், பல்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தனது ஆதரவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிஸேனவுக்கு வழங்கியிருந்தார்.
இவரது துணிச்சலான தொடக்கமே ஏனைய கட்சிகளையும் மைத்திரியை ஆதரிக்க இழுத்து வந்தது என்பதை எவரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்குமிடையில் மிக நெருக்கமான நட்பு இருந்தது. அதனால் மஹிந்த ஆட்சி காலத்தில் அமைச்சர் ரிசாட், தனது சமூகத்திற்காக தான் நினைத்த விடயங்களை சாதிக்க முடிந்தது. குறிப்பாக வடக்கு முஸ்லிம்களுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றி வந்தார்.
பிற்காலத்தில் முஸ்லிம்கள் மீதான சிங்கள இனவாதிகளின் மோசமான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் தொடர்ச்சியாக கோரி வந்த போதிலும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த அசட்டையாக இருந்ததன் காரணமாகவே ஒரு பலம்வாய்ந்த ஆட்சியாளனை விட்டு அமைச்சர் ரிஷாத் பிரிந்தார்.
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பையும் மத, கலாசார உரிமைகளையும் உத்தரவாதப்படுத்த தவறிய ஆட்சியாளருடன் பங்காளியாக இருப்பது சமூகத்திற்கு இழைக்கும் பெரும் துரோகம் என்ற காரணத்தை முன்னிறுத்தியே அவர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார். அதுவே மஹிந்தவின் ஆட்சிக்கு சாவுமணியாகவும் அமைந்தது. இதன் மூலம் அமைச்சர் றிஷாத்தின் தூய எண்ணத்தை வல்ல இறைவன் பொருந்திக் கொண்டான்.
இப்படியொரு சூழல் காரணமாக மைத்திரியை ஆட்சியில் அமர்த்துவதற்கு நல்லாட்சியை உருவாக்குவதற்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனை சீண்டிப்பார்க்க நினைப்பது இந்த நல்லாட்சி அரசின் மடத்தனமான செயல் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
பாரிய அதிகாரங்களோடும் பலத்தோடும் இருந்த முன்னாள் ஆட்சியாளர்களிடம் எத்தனையோ கொலை அச்சுறுத்தல் வந்தும் அதனை பொருப்படுத்தாது, சமூக சிந்தனையுடன் செயற்பட்ட இந்த ரிசாட் பதியுதீன், அமைச்சர் பதவியை களைவதற்கு தயங்குவாரா? அவ்வாறு எவரும் கணவு காணாதீர்கள். நிச்சயமாக அவர் எந்த சக்திக்கும் அடிமைப்பட்ட ஒரு தலைவரல்ல.
இந்த நல்லாட்சி அரசின் வெற்றி என்பது சிறுபான்மை சமூகம் பெற்றுக்கொடுத்த வெற்றி என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் மறந்து செயற்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்ற அனுபவங்களை கற்றுக்கொள்ள நேரிடும் என்பதை இத்தருணத்தில் எச்சரிக்கையாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்” என்றார்.