Breaking
Sun. Nov 24th, 2024

நேர்மையும் செயற்திறனும்வாய்ந்த தூய்மையான அரசியல் இயக்கமே இன்று இந்த நாட்டின் இளைஞர் தலைமுறை உள்ளிட்ட அனைத்து மக்களினதும் அரசியல் தாகமாக உள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஊழல், மோசடிகளை மேற்கொண்டு அரச வளங்களையும் பொதுமக்களின் சொத்துக்களையும் முறையற்றவகையில் பயன்படுத்தி தமது சட்டைப் பைகளை நிரப்பிக்கொள்ள எந்தவொரு அரசியல்வாதியும் எத்தனிப்பார்களாயின் அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாயினும் சரி அவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தான் ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

நேற்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

‘தீர்வுக்குப் பலம்’ என்ற கருப்பொருளின் கீழ் நாடெங்கிலும் இருந்து சுமார் 12 ஆயிரம் இளைஞர், யுவதிகள் பங்குபற்றிய இந்த மாநாடு கோலாகலமாக நடைபெற்றது. 13 வருடங்களுக்குப் பின்னர் இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் தமது பிரச்சினைகளை முன்வைத்த இளைஞர் சமூகம் இம்முறை பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையும் முன்மொழிவுகளையும் முன்வைத்திருந்தமை மாநாட்டின் விசேட அம்சமாகும்.

நேர்மையானதும் தூய்மையானதுமான அரசியல் இயக்கத்திற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் முன்;வந்திருப்பதை இளைஞர் பலத்துடனான இந்த மாநாடு சிறப்பாக எடுத்துக்காட்டுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றது தனது குடும்பத்தில் எவருக்கும் கிரீடம் அணிவிப்பதற்காகவல்ல. நாட்டின் இளைஞர் தலைமுறைக்கும் பொதுமக்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக கட்சியைப் பலப்படுத்துவதற்காகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புனரமைத்து புதிய செயற்திட்டங்களுடன் முன்கொண்டு செல்லவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

என்றாலும் கட்சியின் பயணத்தில் பல்வேறு தடைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கட்சிக்குத் தலைமைத்துவத்தை வழங்குமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் கட்சியை முன்கொண்டு செல்லவும் இடமளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கிராமங்கள், நகரங்களிலுள்ள அனைவருக்காவும் திறந்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உள்ளுராட்சித் தேர்தலை இந்த வருடம் நடத்தக்கூடியதாக இருக்குமென்றும் அத்தேர்தலில் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதன்றி இளைஞர்கள் வேட்பாளர்களாக இருந்து கட்சியை வெற்றிப்பாதையில் கொண்டுசெல்ல முன்வருமாறு தான் இளைஞர் தலைமுறைக்கு அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மறந்திருந்த இளைஞர்களை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் மீண்டும் நாட்டின் எதிர்காலத்திற்காக தயார்படுத்தியமைக்காக இளைஞர், யுவதிகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர இளைஞர் முன்னணியின் திருத்தப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

‘தீர்வு’ என்ற நூலும் ‘சுதந்திரம்’ என்ற பத்திரிகையின் முதற்பிரதியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் முன்னணியின் தேசிய மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு மலரும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் இதன்போது ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சங்கைக்குரிய மகாசங்கத்தினர் உள்ளிட்ட சமயத்தலைவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்ன உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார, செயலாளர் எரிக் வீரவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *