வை.எல்.எஸ்.ஹமீட்
வடபுல முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்த காலமது. விடுதலைப் போராட்டம் வடக்கில் வெடித்தபோது அன்று போராடிய சொந்த சமூகத்திற்குள்ளே இருந்து எத்தனையோ காட்டிக் கொடுப்புகளும் கழுத்தறுப்புகளும் இடம்பெற்றன. ஆனாலும் இதில் எதிலும் வடபுல முஸ்லிம்கள் ஈடுபடவில்லை. இஸ்லாம் சொன்ன அமைதி வாழ்க்கைக்கு அணிகலனாக அவர்கள் திகழ்ந்தார்கள். ஆனாலும் அவர்கள் கலிமாச் சொன்ன ஒரே காரணத்திற்காக அவர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்த பூமியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
சொத்துக்களை இழந்தார்கள், சுகத்தை இழந்தார்கள், அனைத்தையும் இழந்தார்கள். அவர்கள் இழப்பதற்கு பாக்கி இருந்தது ‘ இழப்பு ‘ மட்டும்தான். 25 வருடங்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை கல் நெஞ்சயும் கரையவைக்கும். என்றோ ஒரு நாள் தமக்கும் விடிவு வரும். தாம் பிறந்த மண்ணில், தாம் குவளைகளாக துள்ளி விளையாடிய மண்ணில், ஏர்ப்பிடித்து நீரிறைத்து களணியைக் கதிராக்கிய மண்ணில் மீண்டும் கால் பதித்து நிம்மதிக்காற்றைச் சுவாசித்து அம்மண்ணில் மீண்டும் வாழும் நாள் மலராதா? என்று ஏங்கிய நாட்கள் எத்தனை.
ஒரு நாள் செய்தி வந்தது. இது ஆண்டு 2009. ‘ யுத்தம் நிறைவு பெற்றுவிட்டது, உங்கள் கனவுகள் நிஜமாகப் போகின்றன’, என்பதுதான் அந்த செய்தி. அந்த செய்தி அம்மக்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய அந்த இன்ப சுகம். அடுத்த நாளே, அம்மண்ணில் கால் பதித்துவிட முடியாதா? உள் மனதில் ஏக்கம். ‘ இல்லையாம், துன்பம் அனுபவித்துப் பழகியவர்கள்தானே, சற்று பொறுத்திருங்கள். உடனடியாக அகதியானவர்களுக்கே முன்னுரிமை’ என்றது அதிகாரத் துறை. ஏந்திய கனவுகளுக்கு தற்காலிக கலைவு.
ஆண்டுகள் இரண்டு, மூன்று உருண்டோடின. நத்தை வேகத்தில் ஏதோ நகர்வது தெரிந்தது. அது முஸ்லிம் களின் மீள்குடியேற்றம் என்றார்கள். மறுபுறம் வடக்கின் வசந்தம் வேகமாய் வீறுநடை போட்டது. அதன் வீரியம் வடக்கில் யுத்தம் ஒன்று நடைபெற்றதா? அது எப்போது? என்று மூக்கில் விரல் வைக்குமளவு இருந்தது? நமது இரத்தங்களுக்கும் ஆசை அந்த வடக்கின் வசந்த மழையில் நனைந்துவிடவேண்டும்; தம்மண்ணில் நிம்மதியாக வாழவேண்டுமென்று.
அந்தக் கனவும் கானலாகவே மாறிப்போனது. கலிமாச் சொன்ன ஒரே காரணத்திற்காக. வடக்கின் வசந்தம் நம் இரத்தங்களைக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் வாழ்ந்த நிலங்கள் சில காடுகளாக மாறியிருந்தன. இன்னும் சிலவற்றில் புலிகளின் ஆதரவாளர்கள் அடாத்தாக குடியேறி இருந்தார்கள்.
சிலருக்கு மாற்றுக் காணிகள் கிடைத்தன, சிலருக்கு அதுவுமில்லை. சிலருக்கு வீடுகள் கிடைத்தன, பலருக்கு அதுவுமில்லை. கிடைத்த வீடுகளும் முஸ்லிம் நாடுகளின் பரோபகாராத்தால்தான் கிடைத்தன; என்றார்கள். அப்படியானால் நம்மவர்கள் இந்த நாட்டுப் பிரஜைகள் இல்லையா? நமது அரசு நம்மை ஏன் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடாத்த வேண்டும்? இவற்றைத் தட்டிக்கேட்க நமக்குத் திராணியில்லையா? தட்டிக்கேட்டதாக சொன்னார்கள் தமிழ் ஊடகங்களில். இவ்வாறு ‘ இல்லை, இல்லை’ என்றபட்டியல் ஒரு புறம்
மறிச்சுக்கட்டி, கரடிக்குளி
———————————-
மேற்படி பிரதேசங்கள் முஸ்லிம்கள் தொன்று தொட்டு வாழ்ந்த பிரதேசங்கள். நம் ரத்தங்களுக்கு பெரிய ஆறுதல். தாம் பரம்பரையாக வாழ்ந்த பூமியில் மீண்டும் வாழக்கிடைத்தது. பாவம், அவர்கள் வாழ்ந்த, மீண்டும் கனவுகளைச் சுமந்துகொண்டு வாழவந்த பூமி, வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தம் என்று திருட்டு வர்த்தமானி வெளியிட்டது; அவர்களுக்கு தெரியாது. அவர்கள் என்ன செய்வார்கள் அப்பாவிகள். ஆனால் அவர்கள் அளித்த வாக்குகளுக்கும் அதுதெரியவில்லை. ஆனால் அந்த வாக்குகள் போராடியதாம்.
போராடிய வாக்குகளுக்கு 2015ம் ஆண்டுதான் தெரியவந்ததாம் இந்த வர்த்தமானி தொடர்பாக. ஆனாலும் தொடர்ந்து போராடினார்களாம், எது வரையென்றால் அந்தக் காணிகளை ஒரேயடியாக கபளீகரம் செய்கின்ற உத்தரவை ஜனாதிபதி, விடுக்கும் வரை.
இந்தப் பிரச்சினையின் இன்றைய யதார்த்த நிலை என்ன?
—————————————————–
இந்த விடயத்தில் தயவு செய்து நடுநிலைக் கண்ணோட்டத்தைச் செலுத்துங்கள். குறித்த காணிகள் நம்மவர்களின் காணிகள்;? அதற்கான ஆதாரங்கள், ஆவணங்கள் நம்மவர்களிடம் இருக்கின்றன. அந்தக் காணிகளை கபளீகரம் செய்கின்ற ஜனாதிபதியின் உத்தரவை எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கெதிராக போராட வேண்டியது; நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் இருக்கின்றது; அதில் ஒரு பக்கம் மேற்சொன்னது. அதன் மறுபக்கம் என்ன?
ஜனாதிபதியைப் பொறுத்தவரை குறித்த காணிகள் வனபரிபாலன திணைக்களத்திற்குரியவை. அந்தக்காணியில் ஒரு பகுதியில்தான் முஸ்லிம்கள் குடியேறி இருக்கின்றார்கள். அதே நேரம் அந்தக் காணியில் பல நூறு ஏக்கர்கள் சுத்தம் செய்யப்பட்டு சில அரசியல்வாதிகளின் தேவைக்காக பெறப்பட்டிருக்கின்றது; என்ற குற்றச்சாட்டு பலதரப்பாலும் முன்வைக்கப்படுகின்றது.
இந்நிலையில் எஞ்சியிருக்கின்ற காணிகளையாவது பாதுகாக்கக் கூடாதா? என்ற ஜனாதிபதியின் சிந்தனையை எந்த வகையில் பிழை காண்பது?
இன்றுவரை குறித்த காணிகள் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் என்கின்ற விடயம் உரிய ஆவணங்களுடன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஏன் தெளிவுபடுத்தப் படவில்லை. போராடுகிறோம், போராடுகிறோம், என்று ஊடகஙரகளில் போராடத் தெரிந்தவர்களுக்கு ஏன் தீர்மானம் எடுக்கக் கூடிய நிலையில் உள்ள ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெளிவுபடுத்தப் படவில்லை. அவ்வாறு தெளிவு படுத்தியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையாயின் அதற்கெதிராக அல்லவா போராட வேண்டும்.
எதற்கும் அவர்கள் மசியாவிட்டால், சேட்டை களட்டி வீசுவதுபோல் பதவியைத் தூக்கி வீசலாம், ஜெனீவாவுக்குப் போகலாம், ஜனாதிபதி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்யலாம். இந்த போராட்டத்தையெல்லாம் ஊடகங்களில் தொடர்ந்து செய்துவருகின்றோம்; ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இது பொதுமக்களின் காணி என்று ஆதாரத்துடன் தெளிவுபடுத்தப் படவில்லை; எனவே இதற்குள் இருக்கும் அரசியல் இன்னும் புரியாமலா இருக்கின்றோம்.
எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு, என்பார்கள். அதுபோல் சிலருக்கு அரசியல், ஆனால் முசலி மக்களோ தங்களது எதிர்காலத்தையே பறிகொடுத்த நிலை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வில்பத்து விஸ்தரிப்புத் தொடர்பாக ஜனாதிபதி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அப்பொழுது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடப்போவதாகவும் ஜெனீவாவுக்குப் போகப்போவதாகவும் அறிக்கைவிடத் தெரிந்தவர்களுக்கு அதற்குப்பிறகாவது ஜனாதிபதிக்கு இந்த விடயத்தை தெளிவுபடுத்தியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? எனவே முசலி மக்களின் எதிர்காலத்தை வைத்து அரசியல் செய்யப்படுகின்றது என்பதை இன்னும் புரிந்துகொள்ள முடியாதவர்கள் இருக்கின்றார்களா?
இதற்குரிய தீர்வு என்ன?
————————–
இன்று 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த 22 பேருமோ அல்லது மனச்சாட்சியுள்ள ஒன்று சேரக்கூடியவர்கள் ஒன்று சேர்ந்து உரிய ஆவணங்களுடன் சென்று இது முஸ்லிம்கள் யுத்தத்திற்கு முதல் வாழ்ந்த காணி என்பதை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் நிறுவுங்கள். அவ்வாறு நிறுவினால் குறித்த வர்த்தமானியை வாபஸ் வாங்கியே ஆக வேண்டும். அவ்வாறு நிறுவியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை யாயின் அது துவேசத்தைத் தவிர வேறு இல்லை. எனவே அரசுக்கெதிரான மாற்று நடவடிக்கையைப் பற்றி யோசிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தை நடாத்துவதற்கு முஸ்லிம் பா உறுப்பினர்கள் தேவை என்பதை மறந்துவிட வேண்டாம்.
எனவே இது தீர்க்க முடியாத பிரச்சினையில்லை. இதை இந்த சந்தர்ப்பத்தில் உங்களல் தீர்க்க முடியாவிட்டால் நீங்கள் முஸ்லிம் அரசியலுக்கே பொருத்தமற்றவர்கள். நாளை உங்கள் அனைவருக்கும் மௌத்து இருக்கின்றது. ஏற்கனவே வஞ்சிக்கப்பட்ட வடபுல மக்கள் நீங்களும் அவர்களை வஞ்சித்து விடாதீர்கள்.