முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம் பியான சட்டத்தரணி எம் எச் எம் சல்மானை அடுத்தப் பொதுத்தேர்தல் வரை தொடர்ந்தும் எம் பியாக வைத்திருக்க வேண்டுமென்று கண்டி மாவட்ட மக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்களின் மகஜரொன்று இன்று முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மாநாட்டில் அக்கட்சியின் தேசியத்தலைவரும் அமைச்சருமான மாண்புமிகு ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்படவுள்ளது.
பாலமுனை மாநாட்டில் கண்டியிலிருந்து கலந்து கொள்ளும் பெருமளவான மக்கள் சார்பில் கட்சியின் சில முக்கியஸ்தர்கள் இந்த மகஜரை கையளிக்கவுள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது. கண்டி மாவட்டத்தை பொறுத்த வரையில் தலைவர் ரவூப் ஹக்கீம் தங்கள் பிரதிநிதியாக இருக்கின்ற போதும் தேசிய ரீதியில் அவர் பணியாற்றுவதாலும் அமைச்சுப் பொறுப்புக்களினால் வேலைப்பழுக்கள் அதிகமாக இருப்பதாலும் சல்மான் தொடர்ந்தும் எம் பியாக இருப்பதே கண்டி மக்களுக்கு சிறந்ததென்றும் அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டத்தரணி சல்மான் முஸ்லிம் காங்கிரஸின் நீண்ட கால உறுப்பினர். கட்சியையோ கட்சித்தலைமையையோ எந்த சந்தர்ப்பத்திலும் காட்டிக் கொடுக்காதவர். முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் யாப்பைத் திருத்துவதில் ப மர்ஹூம் அஷ்ரப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.
எதிர்வரும் காலங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தம், தேர்தல் முறை மாற்றம் என்பவை தொடர்பான விடயங்கள் இருப்பதால் சட்டத்தில் தேர்ச்சி பெற்ற அவரைப்போன்ற எம்பிக்கள் பாராளுமன்றத்தில் இருப்பதே நமது சமூகத்திற்கு ஏற்புடையது எனவும் அந்த மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.