பிரதான செய்திகள்

முசலி மக்களின் கோரிக்கை! வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுங்கள்

 

(சுஐப் எம் காசிம்)

வில்பத்து வன சரணாலயத்திற்கு வடக்கே அமைந்துள்ள வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான பிரதேசதங்களை உள்வாங்கி பாதுகாப்பட்ட வனம் என அந்தப் பிரதேசத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதனால் முசலிப் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சுமார் 10 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஜனாதிபதி தனது பிரகடனத்தை இரத்துச் செய்ய  வேண்டுமென முசலிப் பிரதேசத்த்ன் பல்வேறு அமைப்புக்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அவசரக்கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர்.

பள்ளி பரிபாலனசபைகள், விவசாய அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட இன்னும் பல்வேறு பொதுநல அமைப்புக்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும், அதன் பிரதி முசலிப் பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளதாகவும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் உட்பட மக்கள் சார்ந்த அமைப்புக்கள் கொழும்பில் சந்தித்து தற்போது ஏற்பட்டுள்ள நிலமைகளை தெரிவித்தனர்.

கடந்த 13.03.2017 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டு முசலிப் பிரதேச செயலகத்தினால் முசலிப் பிரதேசத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசலுக்கும் இவ்விடயம் குறித்து கடிதமொன்று ஒப்படைக்கப்பட்டதாகவும் அக்கடிதத்தின் படி அன்றைய தினத்திலிருந்து இரண்டு வாரங்களுக்குள் இவ்வாறு குறிப்பிட்ட பிரதேசங்கள் காடுகளுக்குச் சொந்தமாக்குவதில் உங்களுக்கு ஏதாவது எதிர்ப்புக்கள், ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்குமாறும் கூறப்பட்டிருந்தது.

அந்தக் குறிப்பிட்ட திகதியிலிருந்து 2 வாரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ஜனாதிபதி அக்கால அவகாசத்திற்கு முன்னரே இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம் இட்டுள்ளமை ஏனோ என்று தமக்கு விளங்கவில்லை எனவும் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

மாவில்லு, வெப்பல், மறிச்சுக்கட்டி, விலாத்திக்குளம், பெறிய முறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டே வனப்பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 3 ஆ பிரிவின் கீழ் மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார்.

முசலிப் பிரதேசத்தின் எல்லைக்குட்பட்ட 28 கிராமங்களில் 10 கிராமங்களுக்கு இந்த அறிவித்தல் மூலம் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ள இந்த பிரதேச மக்கள் தங்களுக்குச் சொந்தமான பரம்பரை குடியிருப்புக்காணிகளும் மேய்ச்சல் தரைகளும், விவசாய நிலங்களும் இந்தப் பிரகடனத்தின் மூலம் உள்வாங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

நல்லாட்சியை கொண்டு வருவதில் ஒட்டுமொத்த பங்களிப்புச் செய்த முசலி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து கவனயீர்ப்புப் போராட்டங்கள், எதிர்ப்புப் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் மறியல் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக நல அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

நாடளாவிய ரீதியில் தமது போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று நீதி கோருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் மக்கள் நலன் சார் அமைப்புக்கள், சர்வதேசத்தின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

”1990 ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாங்கள் சுமார் 25 வருட அகதி வாழ்வின் பின்னர் மீண்டும் சொந்தப் பிரதேசங்களுக்கு சென்று நிம்மதியாக வாழ முற்படும்போது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்று மீண்டும் தமக்கு அநியாயம் செய்யபடுவதாக வேதனைப் பட்டனர்”

அகதியாக வாழ்ந்த காலத்தில் தமது காணிகளில் அநேகம் இராணுவத்தினராலும் போராட்டக்குழுக்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு மாற்றார் குடியிருக்கின்றனர். விவசாய நிலங்களில் இராணுவம் நிலை கொண்டுள்ளது. அத்துடன் 2012 ஆம் ஆண்டு வன பரிபாலனத்திணைக்களம் எமக்குச் சொந்தமான காணிகளை கொழும்பில் இருந்துகொண்டு ஜி பி எஸ் முறையைப் பயன்படுத்தி தமக்கு உரித்தான காணிகளாக பிரகடனப்படுத்தியது. அத்துடன் எஞ்சியிருக்கும் எமது காணிகளில் நாங்கள் குடியேறுவதற்காக அதனைத் துப்பரவு செய்யும் வேளையில் காடுகளை வெட்டுவதாக இனவாதிகளும், இனவாத ஊடகங்களும் பொய்ப்பிரசாங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதிக்கும் தவறான தகவல்களை வழங்கி பிழையான வர்த்தமானி பிரகடனத்தை வெளியிடுவதற்கு உந்துகோலாக இருந்ததாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முசலி மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் இன்று (28) மாலை 3 மணிக்கு பத்திரிகையாளர் மாநாடொன்றையும் நடத்த உள்ளனர்.

புதிய வர்த்தமானிப் பிரகடனத்தினால் முசலிப் பிரதேசக் கிராமங்களான வேப்பங்குளம், பி பி பொற்கேணி, எஸ் பி பொற்கேணி, பிச்சைவாணிப நெடுங்குளம், அகத்திமுறிப்பு, தம்பட்ட முசலிக்கட்டு, கூழாங்குளம், மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குழி, கொண்டச்சி, அளக்கட்டு ஆகிய கிராமங்களின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சிக்குள்! பிரதமர் பதவி மோகம்

wpengine

தமிழர் மரபுரிமை நிகழ்வில் பிரதி அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள் குழப்பம்

wpengine

மனைவியை சுட்டுக் கொன்ற கணவன், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மரணம்.

Maash