Breaking
Mon. Nov 25th, 2024
அளுத்கம கலவரம்  இடம்பெற்று ஆயிரம் நாட்களைக் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை என நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கலவரத்தில் பலியானவர்களது குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்கள் மற்றும் பொருளாதாரத்தை இழந்தவர்கள் அனைவருக்கும் அரசு உடனடியான நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அதற்கான சூழல்கள் உருவாக்கப்பட வேண்டும். கட்சிகள், இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று சிந்திக்க வேண்டிய ஒருவிடயமாகவே நாட்டின் பொருளாதாரம் காணப்படுகின்றது. கட்சிகளுக்கிடையில் வெவ்வேறு கருத்துக்கள் காணப்பட்டாலும் பொருளாதாரம் என்று வரும்போது ஒருமித்த கருத்துடன் பயணித்தால் மட்டுமே வெளிநாட்டு முதலீடுகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பான பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

ஆனால், அந்நிலைமை நாட்டில் இல்லை. நாளுக்கு நாள் டொலரின் பொறுமதி அதிகரித்துச் செல்வதால் பொருட்களின் விலைகளும் அதிகரித்துவருகின்றன. இந்நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையை நாட்டில் அதிகரிக்க வேண்டும்.

அதேநேரம், இன்னும் நாம் தேயிலை, இறப்பர் மற்றும் ஆடைகள் தவிர்ந்து ஏனைய பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும் பின்தங்கியே காணப்படுகிறோம். இந்நிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி அந்நிய செலாவணியை அதிகரிக்க வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

அரசால் மட்டும் இப்பயணத்தை தொடர முடியாது. இதனை எதிர்த்தால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை உணர்ந்து ஒருங்கிணைந்த எதிரணியினரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இதேவேளை, அளுத்கம, பேருவளைக் கலவரம் இடம்பெற்று ஆயிரம் நாட்களைக் கடந்துள்ள போதிலும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்காமை தொடர்பிலும் இச்சபையின் கவனத்துக்கு நாம் கொண்டுவர வேண்டும்.

இதில், மூவர் பலியாகியும், 15 பேர் காயமடைந்தும், 280 குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் இதுதொடர்பில் அரசு எந்தவித சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

யாழ்ப்பாண சம்பவம், வெலிக்கடைச் சிறைச்சாலை சம்பவம், சாலாவ வெடி விபத்து போன்ற பல சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ள, வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும் அளுத்கம, பேருவளை கலவரங்களில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு மட்டும் இன்னும் நீதிக்கிடைக்காமை கவலைக்குரியதாகும்.

அளுத்கம, பேருவளை சம்பவங்களை முன்னிறுத்தி முஸ்லிம் வாக்குகளைப் பெற்ற இந்த அரசு, இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை.
எனவே, இப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் அரசு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம் –  என்றார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *