Breaking
Thu. Nov 28th, 2024

(ஊடகப்பிரிவு)

ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்கு பற்றுதலுடன் இம்மாதம் 28 ஆம் திகதி ஒரே நாளில் நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை திறந்து வைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கூட்டுறவுத்துறைக்கான கொள்கையைத் தயாரிக்கும் வகையிலான இறுதிக்கட்ட மாநாடு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மாகாண கூட்டுறவு அமைச்சர்கள், மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் மேலதிகச் செயலாளர், கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.

அமைச்சர் ரிஷாட் இங்கு கூறியதாவது,

இந்த வருட இறுதிக்குள் 500 சதொச விற்பனை நிலையங்கள் திறந்து வைக்கும் அரசின் இலக்கு நிறைவு பெற்ற பின்னர் சதொச கிளைகள் திறந்து வைக்கப்படுவதை நிறுத்தி அங்கீகரிக்கும் முகவர்கள் ஊடாக சதொசவுடன் இணைந்து நாடு முழுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை ஒரே விலையிலும் மற்றும் சாதாரண விலையிலும் நுகர்வோருக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

சதொச நிறுவனத்தை இன்னும் 2 மாதங்களுக்குள் முழுமையாக கணிணி மயப்படுத்தி வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களையும் நிர்வாகத்தையும் இலகுபடுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நஷ்டத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கூட்டுறவுத்துறைக்கு புத்துயிரூட்டும் வகையிலேயே அதற்கான கொள்கையொன்றை உருவாக்கும் முயற்சிகள் தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்தாலும் மாகாண அமைச்சர்கள் மாகாண ஆணையாளர்கள் ஆகியோரின் கருத்துக்களுடன் நாடு முழுவதிலுமுள்ள கூட்டுறவு அங்கத்தவர்களின் நன்மைகளையும் கருத்தில் கேட்டு ஒரு தீர்க்கமான கொள்கையொன்றை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

அந்த வகையில் இந்தக் கொள்கையை முழுமைப்படுத்தி முறையான வடிவமாக கொண்டு வருவதற்கு உங்களுக்கு கால அவகாசம் வழங்குவதோடு தேவையேற்படின் இன்னுமொரு கலந்துரையாடலை மேற்கொண்டு இறுதி வடிவம் மேற்கொள்ளப்படும்.

கூட்டுறவுத்துறைக்கென ஒரு சிறந்த வரலாறு உண்டு. எனினும் கடந்த காலங்களில் இந்தத் துறையில் ஏற்பட்ட சீரழிவுகளினாலேயே சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இதற்கான கொள்கையொன்று வகுக்கும் திட்டம் ஆரம்பமானது.

நேர காலம், பண விரயம், மனித வளங்கள் பெருமளவில் செலவிடப்பட்டு மேற்கொண்ட இந்த முன்னெடுப்பை குப்பைத் தொட்டிக்குள் போடாது அதனை நிறைவு செய்வதற்காக 6 மாதங்களுக்கு முன்னர் நாம் எடுத்த முயற்சி இப்போது இறுதித்தருவாய்க்கு வந்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் ஒன்றியத்தின் அனுசரனையில் மேற்கொள்ளப்பட்டு வந்த புதிய கூட்டுறவுக்கொள்கை உருவாக்கம் தொடர்பில் எவருக்கும் சந்தேகம் வர வேண்டிய அவசியமில்லை.

மாகாண கூட்டுறவு அதிகாரங்களை மத்திய அரசின் வசம் கையகப்படுத்தும் எந்த உள்நோக்கமும் எமக்குக் கிடையாது. மத்திய அரசும் மாகாண அரசும் ஒன்றிணைந்து இந்தத் துறைக்குப் புத்துயிர் ஊட்ட புதிய கொள்கை வழி வகுக்கும். இதன் மூலம் கூட்டுறவுத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு நேரடி நன்மை கிடைக்கும்.

அத்துடன் அவர்களின் பிள்ளைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கிக் கொடுப்பதற்கும் நுகர்வோருக்கு நன்மை பெற்றுக் கொடுப்பதற்குமே இந்த புதிய கொள்கை உதவும் என்பதனாலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

அமைச்சர்கள் மாறும் போதும், அரசாங்கம் மாறும் போதும் கொள்கைகள் மாறுவதும் அதனை மாற்றுவதும் நமது நாட்டிலே ஒரு சாபக்கேடாக மாறிவருகின்றது.

ஒரு துறையைப் பொறுப்பேற்கும் அமைச்சர்கள் அந்த அமைச்சிலுள்ள தாம் விரும்பாத கொள்கைகளை தூக்கி வீசிவிட்டு அல்லது ஓரத்தில் போட்டுவிட்டு தமக்கு ஒரு மதிப்பை பெறுவதற்காக இன்னொரு கொள்கையை உருவாக்குவதன் மூலம் மக்களுக்கு எந்தப்பயனும் கிடைப்பதில்லையென்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *