(வை.எல்.எஸ்.ஹமீட் முகநுால்)
வட கிழக்கு இணைப்பிற்கு மு. கா எதிர்ப்பில்லை; என்று அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று கல்முனையில் தன்னைச் சந்தித்த சில தமிழ்ப்பிரதிநிகளிடம் தெரிவித்திருப்பதாக இன்றைய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது உண்மையாயின் ஏன் எதிர்ப்பில்லை, எந்த அடிப்படையில் எதிர்ப்பில்லை, அந்த நிலைப்பாட்டிற்கு முஸ்லிம்கள் எப்பொழுது ஆதரவு தெரிவித்திருந்தார்கள்; என்பவற்றை தெரிவிப்பாரா?
அதிகாரப் பகிர்வு முஸ்லிம்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கப் போகின்றது. இன்று ஒரு அதிகாரமிக்க அரசாங்கத்தால் ஆளப்படுகின்றவர்கள் நாளை பத்து அதிகாரமிக்க அரசாங்கங்களினால் ஆளப்படப் போகின்றார்கள். ஒரு அரசாங்கம் முஸ்லிம்களுக்கு விரோதமாக செயற்பட்டபோது ஒற்றுமைப்பட்டு அதனை அகற்றுவதில் வெற்றிகண்டோம். பத்து அரசாங்கங்கள் வந்தால் நிலைமை என்னவாகும். கிழக்கில் மாத்திரம் சிலவேளை சிறிய ஆறுதல் கிடைக்கலாம். அதற்கும் நிச்சயமான உத்தரவாதமில்லை. இந்நிலையில் வடகிழக்கு இணைக்கப்பட்டால் நாட்டின் மொத்த முஸ்லிம்களும் அடிமைகளே!
ஒரு அரசாங்கத்தால் ஆளப்படுவதையே விரும்பாமல் தங்களைத் தாங்களே ஆள அதிகாரம் கேட்கின்றது; ஒரு சமூகம். ஒரு அரசாங்கத்தால் ஆளப்பட்டால் போதாது; பல அரசாங்கங்களால் ஆளப்படுவதற்கான அடிமைச் சீட்டை இப்பொழுதே எழுதித் தருகின்றோம்; என்கின்றது இன்னுமொரு சமூகம்.
ஏதோ ஓரளவாவது ஆறுதல் காற்றை சிலவேளை சுவாசிக்கலாம்; என்று எதிர்பார்க்கக்கூடிய கிழக்கையும் தாரைவார்த்து அடிமைகளுக்கு சுதந்திரக்காற்று கிழக்கில் மட்டும் எதற்கு; என்று சொல்வதற்கும் ஆயத்தமாகிறதா? நம் சமூகம். இதற்காக, நடைமுறைச் சாத்தியமற்ற தனி அலகை-அது ஒரு கானலென்பதை மறைத்து நீரென்று நம்பவைக்கப்பட முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா? இதற்காக மறைந்த தலைவர் கேட்ட தனியலகு தாரக மந்திரமா?
எரிகின்ற வீட்டில் காப்பாற்ற முடிந்ததைக் காப்பாற்றுவது புத்திசாலித்தனம் ( மறைந்த தலைவர் கேட்ட தனியலகு). அதற்காக வீட்டையே எரியவைத்து எதையாவது பிடுங்க முற்படுவது புத்திசாலித்தனமாகுமா? ( இன்று இவர்கள் கேட்கும் தனியலகு).
அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஒரு தொடர் கட்டுரை எழுதினேன். சமுதாயத்தில் அது தொடர்பாக பெரிய அக்கறையை காணவில்லை. சமுகத்திற்கு அதற்கெங்கே நேரமிருக்கிறது. அதனால் ஏன் நமது நேரத்தை வீணாக்குவான் என்று பதினாலாம் பாகத்துடன் தற்காலிகமாக இடைநிறுத்தியிருக்கின்றேன்.
தன்னிலை அறியாத, தாம் எங்கே நிற்கின்றோம்; என்பது புரியாத ஒரு சமூகத்தை நினைக்கும்போது கவலையாகத்தான் இருக்கின்றது. என்றாவது ஒரு நாள் சமூகம் விழித்துக்கொள்ளும். ஆகக் குறைந்தது ஒன்பது அல்லது பத்து அரசாங்கங்களின் கீழ் ‘நிரந்தர அடிமை’ முத்திரை குத்தப்பட்ட பின்பாவது விழித்துக்கொள்ளத்தானே வேண்டும் .