இந்தோனேஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவுதி மன்னர் சல்மான், அந்த நாட்டு முன்னாள் அதிபர் மேகவதி சுவர்ணபுத்ரியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையங்களில் பரவி வருகிறது.
உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேஷியா. தென்கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 26 கோடி. பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமியர்கள். சவுதி அரேபியா போலவே இஸ்லாமிய சட்டதிட்டங்களை முறைப்படி பின்பற்றும் நாடு இந்தோனேஷியா. இந்த நாட்டுக்கு சவுதி மன்னர் சல்மான் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 46 ஆண்டுகளில் இந்தோனேஷிய நாட்டுக்கு சவுதி மன்னர் ஒருவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை.
சுற்றுப்பயணம்தானே என சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். மன்னருடன் 25 இளவரசிகள், 10 அமைச்சர்கள், 100 பாதுகாப்பு அதிகாரிகள் என மொத்தம்1,500 பரிவாரங்கள் இந்தோனேஷியாவுக்கு சென்றிருக்கின்றனர். குண்டு துளைக்காத ‘மெர்சிடஸ் பென்ஸ் எஸ் -600’ ரக கார்கள் இரண்டும் ஜகர்தாவுக்கு முன்னதாகவே கொண்டு செல்லப்பட்டது. மொத்தம் 506 டன் பொருள்கள் மன்னருடன் இந்தோனேஷியா வந்தடைந்தது. மன்னர் சல்மானின் பிரத்யேக ‘747 போயிங் ஜெட்’ உள்பட 3 விமானங்கள் ரியாத்தில் இருந்து ஜகர்தாவுக்கு வந்து சேர்ந்தன. அதில் இரு விமானங்கள் நிறைய பொருள்கள் இருந்தன. மன்னர் உணவு அருந்தும் ‘பிளேட்’ கூட அவர் அரண்மனையில் இருந்தே கொண்டு வரப்பட்டுள்ளது. சவுதி மன்னர் கொண்டு வந்த பொருள்களை இறக்கவே 572 ஊழியர்கள் தேவைப்பட்டுள்ளனர்.
இதற்குமுன் கடந்த 2015ம் ஆண்டு சல்மான் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வாஷிங்டன் ஜார்ஜ்டவுனில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் தங்கினார். அந்த ஹோட்டலில் இருந்த 222 அறைகளும் சல்மானுக்காக புக் செய்யப்பட்டிருந்தது. வாஷிங்டனில் உள்ள ஹோட்டல்களிலேயே ஃபோர் சீசனில்தான் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிக நபர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது சவுதி மன்னர்களும் அமெரிக்க அதிபர்களும் மட்டுமே. கடந்த 2013ம் ஆண்டு செனகல் மற்றும் தான்சேனியா நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா சுற்றுப்பயணம் சென்றார். அப்போது, 14 உயர் ரக வாகனங்கள் உள்பட மொத்தம் 56 வாகனங்கள் அந்த நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த 2014-ல் பெல்ஜியத்துக்கு ஒபாமா சென்ற போது அவருடன் 900 பேர் சென்றிருந்தனர். விலை உயர்ந்த வாகனங்கள் உள்பட 45 வாகனங்களும் அமெரிக்காவில் இருந்து பிரஸ்ஸல்சுக்கு முன்னதாகவே அனுப்பி வைக்கப்பட்டது. அதனை சவுதி மன்னர் முறியடித்துள்ளார்.
தற்போது 81 வயதான மன்னர் சல்மான், இந்தோனேஷிய முன்னாள் அதிபர் மேகவதி சுவர்ணபுத்ரி, அவரது மகளும் இந்தோனேஷிய அமைச்சருமான பூவான் மகாராணி ஆகியோருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதில் சுவர்ணபுத்ரி, சல்மான், இந்தோனேஷிய அதிபர் ஜேகோ விடோவா ஆகியோர் உள்ளனர். இந்த செல்ஃபி இணையத்தில் வைரல். லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதை share செய்துள்ளனர்.
ஜகர்தா அருகே பொகார் என்ற இடத்தில் உள்ள இந்தோனேஷிய அதிபரின் மாளிகையில் சவுதி மன்னருக்கு விருந்தளிக்கப்பட்டது. விருந்துக்கு முன்னதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டார் கிங் சல்மான். ‘‘இந்தோனேஷியாவில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதைப் பார்த்து பெருமிதப்படுகிறேன்” என்றார் சல்மான். அவர் தற்போது புகழ்பெற்ற பாலி தீவில் ஓய்வெடுத்து வருகிறார்.