(ஏ. எச்.எம். பூமுதீன்)
முஸ்லீம் காங்கிரஸ் – குடும்ப ஆதிக்கத்துக்குள் சிக்குண்டுள்ளதாக கட்சியின் உயர்மட்ட பிரமுகர்களால் கடும் தொனியில் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஹஸனலி, பஷீர் போன்றோர் கட்சியில் இருந்து வெளியேட்டப்பட்டதன் பின்பு இந்த நிலை மோசமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஹக்கீம், அவரது சகோதரர்கள், அவரது நண்பர்கள், மச்சான் என அந்த குடும்ப ஆதிக்கம் விரிவடைவதாக கட்சி பிரமுகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கண்டியில் அண்மையில் இடம்பெட்ட கூட்டமும் கலந்தாலோசனை இன்றி திடீரென குடும்பத்தினரால் தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
‘இவ்வாறான கூட்டங்கள் முன்னர் நடைபெறுவது என்றால் , எம்பீக்கள், உயர்பீட உறுப்பினர்கள் என கலந்துரையாடப்படும். அந்த நிலை இப்போது இல்லை.
ஹஸனலி, பஷீர் போன்றோர் கட்சியில் இருந்தபோது அவர்கள் பிழைகளை தட்டி கேட்போர்களாக இருந்தனர். அவர்களுக்கு ஹக்கீம் பயப்பிடும் சூழலும் நிலவியது. இப்போது அவர்களும் இல்லை. தட்டி கேட்கவும் யாரும் இல்லை. இதனால் குடும்பத்தினரின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகின்றது. என உயர்பீட உறுப்பினர் ஒருவர் வேதனைபட்டுக்கொண்டார்.
முஸ்லீம் காங்கிரஸ் இப்போதெல்லாம் கண்டி காங்கிரசாகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறி வேதனைப்பட்டார்.
இந்த நிலைதான் கட்சிக்குள் தொடர்ச்சியாக நீடிக்கப் போகின்றது. அதற்கமைய நாங்கள் கட்சிக்குள்ளேயே இருப்போம். கட்சியின் செயற்பாடுகளில் கரிசனை காட்டும் செயற்பாடுகளில் நாங்கள் இறங்கப் போவதில்லை. மாறாக தத்தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்கின்ற அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான ஆதரவாளர்களை தம்பக்கம் மட்டும் இழுத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளில் தான் அக்கறை செலுத்தவுள்ளோம் என்றார்.
இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமன்றி ஒட்டுமொத்த வடக்கு கிழக்கைச் சார்ந்த உயர்பீட உறுப்பினர்கள் எம்பிக்களின் கருத்துமாகும்’ என்றார்.
முகா தலைவர் ஹக்கீமுக்கு சரிசமனான அதிகாரமிக்க பதவிதான் செயலாளர் நாயகம் பதவி என்பது. அந்தப் பதவி ஹஸன் அலி மூலம் கிழக்கையும் மர்ஹூம் அஸ்ரபையும் கௌரவப் படுத்தியிருந்தது.
ஆனால் இப்போது ஹஸன் அலியை தூக்கி எறிந்தது மட்டுமன்றி அவரது அதிகாரத்தையும் பறித்துக் கொண்டனர். அத்துடன் போராளிகளை ஏமாற்றுவதற்காக அதே செயலாளர் நாயகம் பதவியை கிழக்கைச் சேர்ந்த மற்றுமொருவருக்குத் தான் வழங்கியிருக்கின்றோம் என்ற போலிப் பிரச்சாரத்தையும் ஹக்கீம் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஏமாற்றுப் பேச்சில் கிழக்குப் போராளிகள் தெளிவாகவே உள்ளனர். அதுமட்டுமன்றி முகா தவிசாளர் பதவியிலிருந்து பஷீரை விலக்கிய ஹக்கீம், தவிசாளர் பதவிக்கு மற்றுமொருவரை நியமிக்காத சூழ்நிலையில் பிரதி தவிசாளராக கண்டியைச் சேர்ந்த தனது மச்சான் நயிமுள்ளாஹ்வை நியமித்து ஒட்டுமொத்தமாக போராளிகளை ஏமாற்றியுள்ளார்.
தேசியப்பட்டியலை தனது சொந்த சகோதரருக்கு கொடுத்த ஹக்கீம், மற்றைய தேசியப்பட்டியலை தனது நண்பருக்கு கொடுத்துள்ளார் என்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.
எனவே வடக்கு கிழக்கு முகா போராளிகள் முகா தலைமையை மாற்ற வேண்டும் என்ற கூக்குரலுக்கு முன்பதாக குடும்ப ஆதிக்கத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கும் கட்சியை மீட்டெடுக்க இன்றே போராட துணியவேண்டும். அந்தப் பேராட்டம் நிச்சயமாக தலைமை மாற்றத்திற்கும் விரைவான பதிலைக் கொடுக்கும்.