(இப்றாஹீம் மன்சூர்- கிண்ணியா)
அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்புவதொன்றும் புதிதல்ல, கிளம்பியவைகள் பல பிசு பிசுத்துப் போன வரலாறுகள் தான் அதிகமாகும்.அண்மையில் கூட கிழக்கின் எழுச்சி என்ற பிரதான கோசத்தில் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக போராட்டமொன்று வெடித்திருந்தது.காலப்போக்கில் அதன் வீரியம் குறைந்து விட்டது.இவர்களது வீரியம் குறைந்தமைக்கான பிரதான காரணமாக மக்கள் ஆதரவின்மையை குறிப்பிடலாம்.அவர்கள் நடாத்தும் கூட்டங்களுக்கு மக்கள் கவனமெடுத்து செல்லவில்லை.பார்வையாளர்கள் குறைந்தால் பேச்சாளர்களுக்கு உற்சாகம் குறைவது வழமை தானே!
அந்த நிலைமைகளை ஹசனலியின் எதிர்ப்பு கூட்டத்தில் அவதானிக்க முடியவில்லை.அங்கு கலந்து கொண்டவர்கள் உணர்ச்சி பூர்வமாக கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது.அங்கு சனத் திரள் அதிகமாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.அதில் கலந்து கொண்டவர்கள் மயிலின் ஆதரவாளர்கள் என்ற எதிர்வாதம் முன் வைக்கப்பட்டுவதை அவதானிக்க முடிகிறது.அவர்கள் மயிலின் ஆதரவாளர்களாக இருக்கலாம் அல்லது குதிரையின் ஆதரவாளர்களாக இருக்கலாம் யாராக இருந்தாலும் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக இத்தனை மக்களை ஒன்று கூட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல.அமைச்சர் ஹக்கீம் அழிவு கண் முன்னே தெரிகிறது.அதிலும் நிந்தவூரில் அமைச்சர் ஹக்கீமின் சார்பில் ஒரு பிரதி அமைச்சர்,மாகாண சபை உறுப்பினர் உள்ளார்.இந் நிலையில் இத்தகைய சனத் திரள் பாரிய தொகை தான்.
இச் சனத் திரள் ஹக்கீமின் தலையில் இடியை போட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.அல்லாது போனால் இவர்கள் கூட்டம் நடாத்திய மறு நாளே நிந்தவூருக்கு விழா நடாத்த ஓடி வருவாரா?
அதிகாரத்தை பயன்படுத்தி அக் கூட்டத்தை தடுக்க முனைவார்களா? இதற்கு அமைச்சர் ஹக்கீம் ஏன் அஞ்சுகிறார் என்ற விடயம் மிக முக்கியமானது.தற்போது அமைச்சர் ஹக்கீம் தவிர்ந்து முஸ்லிம் அரசியல் வாதிகள் பலர் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பை உருவாக்கவுள்ளதற்கான சாதக நிலை தோன்றியுள்ளது.இந் நேரத்தில் அதன் ஒரு பகுதியான இக் கூட்டத்திற்கே இத்தனை ஆதரவென்றால் அனைவரும் ஒன்றிணைந்தால் அமைச்சர் ஹக்கீம் ஆட்டம் கண்டுவிடுவார் என்பதை சாதாரணமாகவே அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு :எனது பெயரை பயன்படுத்தி நான் எழுதாத பல கட்டுரைகள் வெளியிடப்படுவதை அவதானிக்க முடிகிறது.இதனை நான் வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.