பிரதான செய்திகள்

வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கள் முற்றிலும் இனவாதமான கருத்தாகும்-கருணா

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறக் கூடாதென முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்று வழங்கிய செவ்வியிலேயே கருணா இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்ட அவர்,

தற்போதைய நிலையில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு காத்திரமான தலைமைத்துவம் இல்லை.

அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் கட்சியை முன்னெடுத்து செல்வதற்காக தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நடவடிக்கையை மாத்திரமே மேற்கொள்கின்றார்கள்.

பல காலமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் இன்னமும் ஏமாற்றப்படுவதனை தடுத்து அவர்களுக்கு உண்மையான தலைமைத்துவம் ஒன்று வழங்குவதற்கே எனது புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் அனைவரும் இனவாதத்திலேயே தீர்வு தேடுகின்றார்கள். இனவாதத்தை நிறுத்தி கலந்துரையாடல் மட்டத்தில் தீர்வு தேட வேண்டும்.

அத்துடன் நான் அரசாங்கத்துடன் இணைய தீர்மானிக்கவில்லை. அரசாங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்வதே எங்கள் நோக்கமாகும்.

வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கள் முற்றிலும் இனவாதமான கருத்தாகும். கிழக்கு மக்களின் காணி அனைத்தும் மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏன் அப்படி வழங்கப்பட்டதென்றால் நாங்கள் கலந்துரையாடல் மேற்கொண்டோம்.

இராணுவத்தினருக்கு தேவையான பாதுகாப்பு இடம் தொடர்பில் எங்களுக்கு நன்கு விழிப்புணர்வு உண்டு. எனினும் விக்னேஸ்வரனுக்கு அந்த விழிப்புணர்வு இல்லை. அவர் ஒவ்வொரு முறையும் பலவந்தமாக பெற்றுக் கொள்ளவே முயற்சிக்கின்றார். பாதுகாப்பு குறித்தும் சிந்திப்பதில்லை.

விக்னேஸ்வரனுக்கு பாதுகாப்பு குறித்து என்ன தெரியும்? அவர் யுத்தம் செய்தவரா? இது தான் தமிழர்களினதும் பிரச்சினை. சரியான விழிப்புணர்வுடனான தலைவர்கள் இல்லாமையே தமிழ் மக்களின் குறையாகும்.

தேசிய பாதுகாப்பிற்கு வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் செயற்பட வேண்டியது அவசியமாகியுள்ளது. தற்போது கிழக்கில் எந்தவொரு பிரச்சினையும் இல்லையே. ஆனால் வடக்கில் மாத்திரம் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கான காரணம் முழுமையான அரசியல் செயற்பாடாகும்.

மக்களின் விருப்பத்திற்கமைய அனைத்தும் மேற்கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்திருப்பதனை தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். எனினும் சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களும் அதனை விரும்ப வேண்டும். அப்படி இன்றி தீர்மானம் மேற்கொண்டால் அது மோதலை மாத்திரமே ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இனவாதிகளுக்கு விக்கினேஸ்வரனே களம் அமைத்து கொடுக்கின்றார்

wpengine

பிரபல அமைச்சர் ஒருவர் விரைவில் நீக்கம்

wpengine

தற்போதைய அரசு ஊடகங்களை அச்சுறுத்துகிறது.

wpengine