தமிழ்த் தேசிய கூட்டமைப்பைவிட்டு வெளியேறுவது தொடர்பில் நாம் சரியான நேரத்தில் சரியான காலத்தில் முடிவெடுப்போம். மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது இவ்வாறான பாதையிலேயே பயணிக்குமாயின் அக் கட்சியை சின்னாபின்னமாக்கியதன் மூல கர்த்தாவாக சம்பந்தனே காணப்படுவார் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து அதனை பிழையாக வழிநடத்துகின்றவர்கள் வெளியேற வேண்டுமா அல்லது அதில் அங்கம் வகிக்கக் கூடிய ஏனைய கட்சிகள் வெளியேற வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரனால் நேற்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்கள் பேரவை வைத்துள்ள குறிக்கோளுக்கு எதிராக செயற்படுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையை ஏற்று அதில் அங்கத்துவம் வகிக்கின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் கட்சிகள் வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்து பதிலளிக்கையில்,
தமிழ் மக்கள் பேரவையென்பது அரசியல் கட்சியல்ல என்றும் அது அழுத்தம் கொடுக்கின்ற ஓர் குழுவாகவே எப்போதும் செயற்படும் என்றும் அதன் இணைத் தலைவர்களால் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகின்றது. அத்துடன் இவ் அழுத்த குழுவினூடாக மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலன் சார்ந்து எவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இக் குழு அழுத்தத்தை மேற்கொண்டு வருகின்றது.
ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பென்பதுஇ ஓர் அரசியல் கட்சி. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்ட ஓர் கட்சி. எனினும் இக் கட்சியில் பல தவறுகள் உள்ளதென்பது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாகும். இத்தகைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ளே இருக்கின்ற தவறுகளை அல்லது அக் கட்சியின் தலைமையானது தொடர்ச்சியாக விட்டுவருகின்ற தவறுகள் தொடர்பாக நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியே வருகின்றோம்.
உதாரணமாக கேப்பாப்புலவிலே மக்கள் மேற்கொண்டு வருகின்ற நில மீட்பு போராட்டத்தின் மக்களை கொழும்புக்கு வாருங்கள் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளலாம் என மக்கள் பிரதிநிதிகள் கூறுவதை நாம் கண்டித்துள்ளோம். மக்கள் பிரதிநிதிகள், தமிழ் மக்களது வாக்குகளை பெற்ற தமிழ் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களை கொழும்புக்கு அழைத்து பேசுவதோ, அங்கே வைத்து அவர்களை குழப்புவதோ, அதனை நிறுத்துவதோ, தவறு என்று சுட்டிக்காட்டிவருகின்றோம். இ தமிழ் மக்களது பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்ற மக்களோடு அவர்களது பக்கமிருந்து போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி மக்களது கோரிக்கைகளை வெற்றிபெறச் செய்யவேண்டும். இவ்வாறான விடயங்களை நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே அவர்களுக்கு சுட்டிக்காட்டி வருகின்றோம்.
அது மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மத்தியில் ஓர் அபிப்பிராயம் உள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது. அந்த அபிப்பிராயத்தின் பிரகாரமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 2016 ஆண்டுக்குள் தீர்வினை பெற்றுத் தருவதாக கூறி அதற்கான கால அவகாசத்தை கோரியிருந்தார். நாமும் அதற்கு ஆதரவை வழங்கியிருந்தோம். ஆனால், இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாத்திரமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களுமே ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அத்துடன் இதுவரை காலமும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்கின்ற தமிழரசு கட்சியினர் தாம் இராஜதந்திர ரீதியில் செயற்படுகின்றோம் வெளிநாடுகளுடன் பேசுகின்றோம், அவ்வாறாக விடயங்களை கையாள்கின்றோம் எனக் கூறிய நிலையில் இன்று அவை எல்லாம் ஏமாற்றுப்பட்டு விட்டனவா அல்லது தோல்வியடைந்து விட்டனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பென்பதிலும் அதன் உருவாக்கம் என்பதிலும் ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது. இவ்வாறானதொரு நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டியவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பை பிழையாக வழிநடத்துகின்றவர்கள் வெளியே போக வேண்டுமா அல்லது அக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்ற எனையோர் வெளியேற வேண்டுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. எனவே தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது இவ்வாறான பாதையிலேயே பயணிக்குமாயின் அக் கட்சியை சின்னாபின்னமாக்கியதன் மூல கர்த்தாவாக சம்பந்தனே காணப்படுவார். மேலும் இக் கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக நாம் சரியான நேரத்தில் சரியான காலத்தில் அதற்கான முடிவை எடுப்போம் என்றார்