ஆட்டைக்கடித்து மாட்டைகடித்து இறுதியில் தாருஸ்ஸலாத்தைக்கடிக்க திட்டமிட்டுள்ளார் வாடகைத்தலைமை. தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்தின் வெளியீடு உறுத்துகிறதோ என்னவோ அவ்வாறான ஒரு முஸ்லிம்களின் வரலாற்று சின்னம், சதிகாரர் சரித்திரம் வாய்ந்த சாந்தி இல்லம் தேவையில்லை என முடிவெடுத்துவிட்டார். புதிய தாருஸ்ஸலாம் கட்டப் போறாராம். யாருக்குவேண்டும்?
மறைந்த மாமனிதனின் எட்டுமாடிக் கனவையும் இடித்து வீழ்த்துவதுபோல அமைந்துவிட்டது அவருடைய பேச்சு. வீடுவீடாகச் சென்று உண்டியல் கொண்டு காசு சேர்த்து கனவில்லமாக கச்சிதமாகக் கட்டிமுடிக்கப்பட்ட ஆறுமாடியும் கொத்தி அள்ளியெறியப்பட திடசங்கமாகிவிட்டது போல்படுகிறது. தாருஸ்ஸலாத்தை இன்றைய தலைவர் இடிக்க முற்படுவது மறைந்த மாமனிதனின் கட்சி ,கொள்கை ,கோட்பாடு அத்தனையையும் மீண்டுமொருமுறை தவிடுபொடியாக்குவதற்குச் சமனாகும்.
கட்சியை உருவாக்கக் கைகொடுத்து அழகுபார்த்து அணிசேர்த்த ஹசனலியை உயிருடன் உள்ள போதே வதம் செய்து விரட்டியடித்த தலைவனால் மறைந்த தலைவரின் இதயமான இல்லத்தை இடித்தொழிக்க நீண்ட நேரமெடுக்காது. கணப்பொழுதுக்குள் கிழக்கு மக்களினதும், ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களின் அடையாளமுமாக கட்சிஅரசியலில் பரிணமிக்கும் தாருஸ்ஸலாத்தை அழியப்போவதை உயர்பீடமும் போராளிகளும் வேடிக்கைபார்க்கத்தான் போகின்றார்கள்.
இனி தாருஸ்ஸலாம் அடையாளமின்றி அழிந்து சிதையப் போகிறது.அக்காலகட்டத்தில் கட்சி உருவாக்கிய ஹசனலியையும் தனது மகன் அமானை விடவுமா தாருஸ்ஸலாத்தின் நம்பிக்கைக்கு பொறுப்புதாரியாக ஹக்கீமும், ஹாபீஸும் ,சல்மானும் இருந்த்திருக்கப்போகிறார்கள்? கதை சொல்கிறார் தலைவர். காதிலே பூச்சூடிக்கொண்டவரெல்லாம் வாய்பிளந்து கேட்டு நிற்கின்றார்கள்.பாவமாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது தாருஸ்ஸலாத்தின் இன்றைய நிலைமை. வாயிருந்தால் ஆயிரம் உண்மை பேசியிருக்கும். அக்கிரமங்களை அனியாயங்களைத் துகில் உரித்திருக்கும். தலைவனே ! இடிக்க முடிவெடுத்தபின் இடிந்து அழுகிறது.