(அமைச்சின் ஊடகப் பிரவு)
இராணுவத்தினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கபட்டு இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் செட்டிகுளப் பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு காணிகளையும், வயற் காணிகளையும் இராணுவம் அவசரமாக விடுவிக்க வேண்டுமெனவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுநடத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுப்பதெனவும் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இன்று (13.02.2017) ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
இணைத் தலைவர்களான அமைச்சர் றிஷாட் பதியுதீன், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மாகாண அமைச்சர் சத்தியலிங்கம், மஸ்தான் எம் பி ஆகியோரின் தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்தப் பிரச்சினையை சுட்டிக்காட்டி இதற்குப் பொருத்தமான தீர்வுகளை மேற்கொள்ளுமாறு விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
செட்டிகுளப்பிரதேசத்திலுள்ள பல்வேறு வளங்களை இனங்கண்டு அதிகாரிகளும், அமைப்புக்களும் இணைந்து முறையான திட்டமொன்றை தமக்கு வழங்கினால் பொருத்தமான சிறு கைத்மொழில் திட்டங்களை மேற்கொள்வதற்கு தனது அமைச்சு பல வழிகளிலும் உதவக்காத்திருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இங்கு தெரிவித்தார். இது தொடர்பில் ஒருமாத காலத்துக்குள் திட்டங்களைத் தயாரித்து வழங்கினால் அதனை ஆரம்பிப்பதற்கு வசதியாக இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.
செட்டிகுளப் பிரதேசத்தில் பழங்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதனால், அபரிமிதமான பழங்களை பாதுகாக்கும் வகையிலும், அவற்றை பழரசமாக்கி தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுத்தும் வகையிலும் இந்தப்பிரதேசத்தில் பழத்தொழிற்சாலை ஒன்றின் அவசியம் பற்றி கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. ஏற்கனவே கடந்த அரசில் அமைக்கப்பட்ட தொழிற்சாலை மூடிக்கிடப்பதனால் அதனை மீண்டும் இயங்கச் செய்வதற்கு தமது அமைச்சு நிதி உதவியை வழங்க முடியுமென அமைச்சர் றிஷாட் அங்கு குறிப்பிட்டு இந்த தொழிற்சாலை கூட்டுறவு சம்மேளனத்தின் நிருவாகத்தின் கீழ் இருப்பதனையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான திட்டங்களை மேற் கொள்ளும் போது மாகாண அமைச்சின் அதிகாரத்தின் கீழுள்ள சில நிறுவனங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் பிரச்சினைகள் எழுந்ததால் அதனை நிவர்த்தி செய்து திட்டங்களை இடையறாது மேற்கொள்ளும் நடைமுறைகளை அமுல்படுத்துமாறு அமைச்சரிடம் சில அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
பாடசாலைகளுக்கும், மத ஸ்தாபனங்களுக்கும் அருகிலான கள்ளுத் தவறணைகளையும், கொட்டில்களையும் உடன் அகற்ற வேண்டியதன் அவசியம் அங்கு வலியுறுத்தப்பட்ட போது இது தொடர்பில் பிரதேச செயலாளரும், பொலிசாரும், மதுவரித் திணைக்கலமும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அபிவிருத்திக் குழு சம்பந்தப்பட்டவர்களுக்கு பணிப்புரை விடுத்தது.
செட்டிகுளப் பிரதேசத்தில் தேவையான இடங்களில் மூன்று பஸ்தரிப்பு நிலையங்களை அமைப்பதற்காக தலா மூன்றரை இலட்சம் ரூபாயை தனது நிதியில் வழங்குவதாக அமைச்சர் றிஷாட் உறுதியளித்தார்.
மீளக்குடியேறிவோருக்கு வீடமைப்பதற்காக பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற ரூபா எட்டு இலட்சம் போதுமானதல்ல என்று அங்கு சுட்டிக் காட்டப்பட்ட போது அதனை பத்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க முடியுமா என்பது தொடர்பில் தான் உயர்மட்டத்தில் பேச்சு நடத்துவாக அமைச்சர் கூறினார். முன்னர் ஐந்து இலட்சம் ரூபாவாக இருந்த தொகையை எட்டு இலட்சமாக கடந்த மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் தாம் தலைவராக இருந்த போது முடிவெடுக்கப்பட்டதையும் அமைச்சர் நினையுபடுத்தினார்.