(பிறவ்ஸ் முஹம்மட்)
முஸ்லிம் அரசியலுக்கு முகவரி தேவை என்பதற்காக மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை 1981இல் ஸ்தாபித்தார். அவரது மரணத்தின் பின்னர் தலைமைத்துவ போட்டி காரணமாக பலர் கட்சியிலிருந்து பிரிந்துசென்று வேறு பல கட்சிகளை ஆரம்பித்து அதற்கு தலைமை தாங்கிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் மர்ஹ_ம் அஷ்ரப் விட்ட இடத்திலிருந்து தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அக்கட்சியை வழிநடாத்திக்கொண்டிருக்கிறார்.
முஸ்லிம் காங்கிரஸை மேலும் துண்டாடும் நோக்கிலான முயற்சிகளில் சிலர் திரைமறைவில் இருந்துகொண்டும் இன்னும் சிலர் நேரடியாகவும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். கட்சிக்குள் இருப்பவர்கள்தான் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பது வேதனையானதொரு விடயம். அதிலும் குறிப்பாக கட்சியின் தவிசாளராக இருந்து தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பஷீர் சேகுதாவூத் கட்சியை தூய்மைப்படுத்தப்போகிறேன் என்று கூறிக்கொண்டு கட்சியை பிளவுபடுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
பஷீர் தற்போது முன்வைத்துவரும் கோரிக்கைகளில் மிகவும் பிரதானமானது கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றவேண்டும் என்பதாகும். அஷ்ரபினால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வபா பாறுக், சேகு இஸ்ஸதீன் உள்ளிட்ட சிலர்தான் தலைமைத்துவ மாற்றம் குறித்து வெளியிலிருந்து பேசிவருகின்றனர். இந்நிலையில், தலைமைத்துவ மாற்றம் வேண்டுமென கட்சிக்குள் இருந்துகொண்டு குரல்லெழுப்பும் ஒருவரான பஷீர் சேகுதாவூதின் பின்னணி மற்றும் நிகழ்ச்சிநிரல் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
18ஆவது திருத்தம்
ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்துகின்ற 18ஆவது திருத்ததுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்ததன்மூலம் பலரிடமிருந்து எதிர்மறை விமர்சனங்களை சம்பாதித்துக்கொண்டது. அதேவேளை, பணத்துக்காக ஆதரவு வழங்கியதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பஷீர் சேகுதாவூத் என்பது பலருக்குத் தெரியாது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 18ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்காவிட்டால் தான் கட்சியிலுள்ள சிலரை பிரித்தெடுத்துக்கொண்டு மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கப்போவதாக மிரட்டி, 18ஆவது திருத்ததுக்கு ஆதரவளிக்க வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தநிலையில் அதில், 5 பேரை மஹிந்தவின் பக்கம் அழைத்துச் செல்லும் நோக்கிலேயே பஷீர் செயற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு செல்வதை தடுப்பதற்காக வேண்டா வெறுப்பாக 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை ரவூப் ஹக்கீம் எடுத்திருந்தார். அதன்பின்னர் மறுநாள் சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில், வேண்டுமென்றே குழியில் விழுந்துவிட்டதாக இதுகுறித்து ரவூப் ஹக்கம் இதன் தாக்கம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அத்துடன் திருத்ததுக்கு ஆதரவளித்தமைக்காக பல இடங்களில் வருத்தம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல்
2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது மஹிந்தவின் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்தே முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பதில் பஷீர் சேகுதாவூத் பிடிவாதமாக இருந்திருக்கிறார். ஆனால், கட்சியின் தலைமைத்துவம் அவரது கூற்றை புறந்தள்ளிவிட்டு தனித்துப் போட்டியிட்டிருக்கிறது.
மு.கா. மஹிந்தவுடன் இணைந்து போட்டியிடாத காரணத்தினால், கட்சிக்கு எதிராக 17 பொதுக்கூட்டங்களை நடாத்தி அதில் கட்சியின் அம்பலங்களை வெளியிடப்போவதாக பஷீர் சேகுதாவூத் தெரிவித்திருந்தார். இதன் முதற்கட்டமாக ஏறாவூரில் பிரமாண்ட முறையில் ஏற்பாடு செய்திருந்த முதலாவது கூட்டமே பிசுபிசுத்துப்போனது. கட்சியை தோல்வியடையச் செய்யும் நோக்கிலான இந்தக் கூட்டம் வெற்றியளிக்காது என்பதை புரிந்துகொண்ட பஷீர், அந்த முயற்சியை கைவிட்டார்.
ஆனால், பல்வேறு சதி முயற்சிகளையும் தாண்டி ரவூப் ஹக்கீம் வகுத்த வியூகத்தின் பிரகாரம் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைத் தீர்மானிக்கின்ற பேரம்பேசும் சக்தியாக வெற்றிபெற்றது. முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெறவேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைத்தது. அதன்பின்னர், அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரே தற்போது முதலமைச்சராகவும் இருக்கின்றார்.
வட மாகாணசபைத் தேர்தல்
இறுதியாக நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடவேண்டும் பஷீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்ததாக கட்சி மட்டத்தில் பேசப்படுகிறது. ஆனால், ரவூப் ஹக்கீம் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லையாம். இதனால், உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களை சிலரை அழைத்துக்கொண்டு தனது வீட்டில் பஷில் ராஜபக்ஷவுடன் ஒப்பந்தம் செய்து, அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியதாக கதைகள் அடிபடுகின்றன.
கட்சி தலைமைத்துவத்துக்கு எதிராக, கட்சி உறுப்பினர்களை கூறுபோட்டு பஷில் ராஜபக்ஷவிடம் ஒட்டுமொத்த வியாபாரம் செய்த இந்த செயற்பாடு, மஹிந்த ராஜபக்ஷ மீது அவர் வைத்துள்ள விசுவாசத்தை புடம்போட்டுக் காட்டுவதாகவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவ்வாறான சதி முயற்சிகளையும் தாண்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட மாகாணசபையில் தனித்துப் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.
ஜனாதிபதித் தேர்தல்
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 18ஆவது திருத்தத்தின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்லில் களமிறங்கினார். அவருடைய ஆட்சிக்காலத்தில் தலைவிரித்தாடிய முஸ்லிம் விரோத நடவடிக்கைகளினால், 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தாலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டையே ரவூப் ஹக்கீம் கொண்டிருந்தார். ஆளும்கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாகவே இருப்பதாக இதுகுறித்து பல இடங்களில் பேசியும் இருந்தார்.
இதனால், முஸ்லிம்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கே முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்தது. மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருந்தது. ஆனால், பஷீர் சேகுதாவூத் மட்டும் மஹிந்தவை விட்டு வருவதற்கு முட்டுக்கடையாக இருந்ததாக தெரியவருகிறது. மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே அவர் தொர்ந்தும் இருந்துவந்திருக்கிறார்.
மைத்திரியின் பக்கம் வரவேண்டும் அத்துடன் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படாதவாறும் இருக்கவேண்டும் என்ற இக்கட்டானதொரு சூழ்நிலைக்கு ரவூப் ஹக்கீம் தள்ளப்பட்டார். இதனால் பல இழுபறிகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் கடைசிநேரத்தில் வந்துசேர்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டது. இதன்போது, மைத்திரியுடன் மு.கா. சேர்வதற்காக ரவூப் ஹக்கீம் வகுத்த வியூகம் சாணக்கியமானது.
மக்கள் நலன்கருதி கட்சி எடுத்த தீர்மானத்துக்காக பஷீர் சேகுதாவூத் கட்சியுடன் முரண்பட்ட நிலையில் இருப்பது ஊடகங்கள் வாயிலாக புடம்போட்டுக் காட்டப்பட்டன. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து அவர் எழுதிய ~காதல் கடிதம்| ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டன. இதன்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய எந்தவொரு தேர்தல் பிரசாரங்களில் பஷீர் சேகுதாவூத் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மஹிந்த ராஜபக்ஷ மீது வைத்திருந்த விசுவாசத்துக்காக வாக்களிப்பில்கூட கலந்துகொள்ளவில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல்
மைத்திரி ஆட்சிக்கு வந்தபின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிட்டதால், தனக்கான ஆசனத்தைப் பெறுவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட தீர்மானித்தது. இதன்போது, வேட்பாளராக தன்னை நிறுத்துமாறு பஷீர் சேகுதாவூத் கட்சியிடம் கோரிக்கை விடுத்துவந்திருக்கிறார். ஆனால், அவருக்கு குறிப்பிடத்தக்களவு வாக்குவங்கி இல்லாத காரணத்தினால் அலிசாஹிர் மௌலானாவை கட்சி களமிறக்கியது.
இந்நிலையில், பஷீர் சேகுதாவூத் கட்சியுடன் கோபித்துக்கொண்டிருந்தார். தேர்தல் பிரசார காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ{க்கு எதிராகவே அவருடைய செயற்பாடுகள் அனைத்தும் காணப்பட்டன. தேர்தல் காலத்தில் புல்மோட்டையில் அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் இரவு நேரத்தில் இரகசிய பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி சார்பாக போட்டியிட்ட அலிசாஹிர் மௌலானை தோற்கடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் மேற்கொண்டது தெரியவந்தது. ஆனால், அவற்றையும் மீறி அலிசாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.
கடைசியாக தேசியப்பட்டியல் கேட்டுக்கொண்டு கட்சிக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். 3 தடவைகள் முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியலை அனுபவித்துக்கொண்டு கட்சிக்குள் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையிலும், பிளவை ஏற்படுத்தும் வகையிலும் அவரது செயற்பாடுகள் இருந்த காரணத்தினால் 4 தடவையாவும் தேசியப் பட்டியலை வழங்குவதற்கு கட்சி இணங்கவில்லை.
தனக்கு தேசியப்பட்டியல் கிடைக்காது என்பதை அறிந்துகொண்ட பின், பிரதிநிதித்துவ அரசியலில் ஒதுங்கியிருப்பதாக பஷீர் சேகுதாவூத் அறிக்கைவிட்டார். அதன்பின்னர் கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலியின் பதவி குறைக்கப்பட்டது குறித்து பேசிவந்தார். ஹஸன் அலிக்காக குரல்கொடுக்கும் தோரணையில், கட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தாக அறியமுடிகிறது. அத்துடன் தாருஸ்ஸலாம் குறித்த சர்சைகளையும் பேசிவந்தார்.
ஹஸன் அலி தற்போது கட்சியுடன் இணைந்து செயற்படுகின்ற காரணத்தினால் புதியதொரு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். கட்சி முக்கியஸ்தர்களின் அந்தரங்க ஆதாரங்களை வெளியிடப்போவதாக சமூக ஊடகங்கள் வாயிலாக தற்போது மிரட்டல் விடுத்து வருகிறார். இவை எல்லாவற்றின் பின்னாலும் இருப்பது அப்பட்டமான சுயநலம் என்பது வெள்ளிடைமலை.
இவ்வாறு கட்சிக்குள் இருந்துகொண்டே, அதுவும் தவிசாளர் எனும் முக்கிய பதவியில் இருந்துகொண்டு கட்சியை காட்டிக்கொடுக்கும், கூறுபோடும் முயற்சியிலேயே பஷீர் சேகுதாவூத் ஈடுபட்டு வந்திருக்கிறார். மஹிந்த விசுவாசியான இவர், கட்சிக்குள் இருந்துகொண்டே இன்னுமொரு நிகழ்ச்சிநிரலின் பிரகாரம் இயங்கிவந்ததுதான் வரலாறு. இப்படியான ஒருவர்தான் தற்போது கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகிறார்.
கட்சியின் நலனை கருத்திற்கொண்டு, பஷீருக்கு தலையாட்டாத தலைமையாக ரவூப் ஹக்கீம் இருந்துவருகிறார். இதன் ஒரு அங்கமாகத்தான் உயர்;பீட உறுப்பினர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க அவரை தவிசாளர் பதவியிலிருந்தும் இடைநிறுத்தம் செய்திருக்கிறார்.
இவ்வாறான சூழ்நிலையில், ரவூப் ஹக்கீம் தனது நிகழ்ச்சிநிரலின் கீழ் கட்சியை வழிநடாத்தமாட்டார் என்பதை புரிந்துகொண்டு, தனக்கு சாதகமான பிறிதொரு தலைமையை உருவாக்கவேண்டும் என்ற நோக்கிலேயே பஷீர் முன்வைத்துவரும் தலைமைத்துவ மாற்ற கோரிக்கை இருக்கலாம். மஹிந்தவுக்கு ஆதரவாக, சுயநலங்களுக்கு விலைபோகின்ற வகையில் கட்சியை வழிநடாத்தும் ஒருவரே கட்சித் தலைவராக இருக்கவேண்டும் என்பது பஷீரின் கனவாக இருக்கலாம்.
(நன்றி: நவமணி – 09.02.2017)