Breaking
Mon. Nov 25th, 2024

(சுஐப் எம் காசிம்)

இன மத அரசியல் பேதங்களுக்கு அப்பால் சந்தேகப் பார்வைகளைக் களைந்துவிட்டு எல்லோரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவில, அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று இடம்பெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அங்கு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது சின்னஞ்சிறிய அழகான இந்த நாட்டை அந்நியரிடமிருந்து மீட்டெடுப்பதற்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி தேசப்பற்றுள்ள நமது முன்னோர்கள் இணைந்து போராடிப்பெற்றுக் கொண்ட சுதந்திரம் இது. எத்தனையோ தலைவர்களின் வியர்வை சிந்தி பெற்றுக்கொண்ட இந்த சுதந்திரத்தை எந்தவிதமான பேதமுமின்றி இன்று முல்லைத்தீவு மண்ணில் கொண்டாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். 3 தசாப்தங்களுக்கு மேலாக நிம்மதி இழந்து பல்வேறு கஸ்டங்கள், போராட்டங்கள் நிம்மதியற்ற வாழ்வுக்கு மத்தியிலே வாழ்ந்து வந்தோம். முல்லைத்தீவு மக்களும்  இதனால் பட்ட துன்பங்கள் கொஞ்ஞ நஞ்சமல்ல. 2009 ம் ஆண்டு சமாதானக்காற்று வீசத்தொடங்கியதன் பின்னர் அழிந்து போன உருக்குலைந்தும் தகர்ந்தும் கிடந்த முல்லைத்தீவை கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு எம்மை வந்தடைந்தது மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக நான் இருந்ததனால் கடந்த அரசாங்கத்தில் கட்டிடங்களையும் குளங்களையும் கலாச்சார மண்டபங்களையும் தகர்ந்து போயிருந்த பாடசாலைகளையும் கட்டியெழுப்ப சந்தப்பம் கிடைத்தது.

பாதுகாப்புத் தரப்பினர, அரச அதிகாரிகள், பொது மக்களின் உதவிகள் தாராளமாகக் கிடைத்தது. எனினும் இன்னும் நிறைய தேவைகளையுடைவர்களாக நாம் வாழ்கின்றோம். நல்லாட்சி அரசாங்கத்தில் நமக்குரிய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அதே போன்று வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மாகாணசபை ஆட்சியும் பாராளுமன்ற பிரதிநிதிகளும் உள்ளுராட்சி மன்றங்களும் முடிந்தளவு உதவி வருகின்றன.

யுத்தத்தில் ஆர்வம் காட்டிய 12000 புலிகள் சமாதானத்தை நோக்கி வந்து சமூக வாழ்க்கையில் இணைந்து கொண்டனர். அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு இப்போது சுமுகமாக வாழ்கின்ற போதும் வாழ்வாதாரங்கள் இல்லாதவர்களாக வளங்கள் இல்லாதவர்களாக அத்தியாவசியமான விடயங்களை நிறைவேற்ற முடியாதவர்களாக இருக்கின்றனர். இவர்களின் வாழ்க்கைக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் மனிதாபிமான ரீதியில் இவர்களின் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் இனவாத சிந்தனையுள்ளவர்களின் செயற்பாடுகளினால் நமக்குள் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்து பாரிய அழிவை நாங்கள் சந்தித்து இருக்கின்றோம். இந்த நிகழ்விலே இடம்பெற்ற அழகான அணிவகுப்பை நான் பார்வையிட்ட அதே வேளை அணிவகுப்பு மேற்கொண்டவர்கள் சிலர்   கால்களால் சரியாக நடக்க முடியாதவர்களாக இருந்ததை அவதானித்தேன். யுத்தம் இவ்வாறுதான் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து  சமுதாயத்தை முன்னேற்ற வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

இந்த நல்லாட்சியில் பல கட்சிகளைச் சேர்ந்த நல்ல பண்புள்ள அரசியல் தலைவர்கள் பங்காளிகளாக இருக்கின்றனர். எனவே நாட்டடை கட்டியெழுப்புவதற்கு இதைவிட ஒரு நல்ல தருணம் கிடைக்காது. அத்துடன் சிறையிலே வாடும் அப்பாவி தமிழ் இளைஞர்கள் பலர் இருக்கின்றனர். இந்த மாவட்டத்தில் உங்களோடு வாழ்ந்து, உங்களுக்கு உதவி புரிந்து, உங்களைப்போல் அகதியாக வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணகரட்னம் ஐயாவின் புதல்வரும் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார். இவர்களை விடுதலை செய்வதற்காக கட்சி பேதங்களுக்கு அப்பால் நாம் இணைந்து உழைக்க வேண்டுமென இந்த சுதந்திர தினத்தில் அறைகூவல் விடுக்கின்றேன்.

மாணவச் செல்வங்களாகிய நீங்களும் அகதி முகாமிலே அல்லல் பட்ட அனுபவங்களை நிறையக்கொண்டுள்ளீர்கள் அதே போன்று குண்டுகளுக்கும் வெடிகளுக்கும் பயந்து ஓடி ஒளிந்திருப்பீர்கள். என்னதான் கஷ்டங்கள் வந்தாலும் அவைகளை பொருட்படுத்தாது கல்வியிலே கரிசனை காட்டுங்கள். உங்களுக்கு முன்னே பிரதம அதிதியாக வந்து பேசிக்கொண்டிருக்கும் நானும் உங்களைப் போன்று கஷ்டங்களின் மத்தியிலே படித்து உயர்தவனே இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *