Breaking
Fri. Nov 22nd, 2024

(ஜெம்சித் (ஏ) றகுமான்)

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு 2020 ல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக களம் இறக்க முடிவு செய்திருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம அண்மையில் தெரிவித்தார்.சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேனவை முன்மொழிந்து 2020 ல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டி இடுவார் என ஊடகங்களில் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

நிறைவேற்று அதிகாரத்தை தக்க வைத்தல்

கூட்டாட்சியின் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்திருக்கும் நிலையில் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2020 ஐ பற்றி சிந்திக்க ஆரம்பித்திருப்பது நாட்டில் எதிர்வரும் காலத்தில் நடக்க இருக்கும் விளைவுகளுக்கான முன் ஆயத்தங்களாகவும் இருக்கமுடியும்.நான்கு ஆண்டு இடைவெளி இருக்கும் நிலையில் வேட்பாளர் தெரிவை மேற்கொண்டு வரும் சுதந்திரக் கட்சியின் நடவடிக்கையானது நிறைவேற்று அதிகாரத்தை தொடர்ச்சியாக தங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமாகும்.

தற்போதைய ஜனாதிபதியின் வாக்குறுதி

மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர் கொள்ள மாட்டேன் என தேர்தல்காலங்களில் ஒவ்வொரு பிரச்சார மேடைகளிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறி இருந்தார்.அவர் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து விட்டு ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போது “இதுவே எனது ஆரம்பமும் இறுதியுமான ஜனாதிபதி தேர்தல்” என தெரிவித்தார்.சிறிலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய முடிவுகளுக்கமைய இந்த வாக்குறுதியை எதிர்காலத்தில் மைத்திரிபால சிறிசேன காப்பாற்ற முடியுமா?என்ற கேள்வி எழுந்துள்ளது.2015 ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மிக முக்கிய வாக்குறுதியாக நிறைவேற்று அதிகாரம் நீக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன கூறி இருந்தாலும் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையிலும் அதனை செயற்படுத்த முடியாமல் இருப்பது மைத்திரிபால சிறிசேனவிற்கான சவாலாக அமைந்துள்ளது.

சந்திரிக்கா அம்மையின் நிலைப்பாடு

நல்லாட்சியின் பிரதான காரணகர்த்தாவாக திகழும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் கருத்தை முன் நிறுத்தி பார்க்கும் போது சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஒன்றினைந்து எடுத்திருக்கும் முடிவானது ஒட்டு மொத்த சுதந்திர கட்சியின் முடிவாகாது என சுட்டி நிற்கிறது.2020 ற்கான ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் சந்திரிக்கா குமாரதுங்கவிற்கும்,சுதந்திர கட்சி அமைச்சர்களிடையேயும் கருத்து வேறுபாடு உண்டாகும் சாத்தியக்கூறு அதிகம் காணப்படுகிறது.

தலை கீழாக மாறிய மைத்திரியின் எண்ணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஓர் ஜனாதிபதி தேர்தலை தான் எதிர் கொள்ள போவதில்லை என கூறி இருந்ததன் முக்கிய காரணம் நிறைவேற்று அதிகார ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் 2020 ல் ஜனாதிபதி தேர்தல் நடத்த தேவை இருக்காது என நினைத்ததாகும்.ஆனால் நிலமை தலைகீழாக நடக்கும் போது மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வரும் சாத்தியம் உண்டு என தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விளங்க ஆரம்பித்திருக்கிறது.

மகிந்தவின் காய் நகர்த்தல்

2020 ல் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை நோக்கிய நகர்வை மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருகிறார்.அவர் தலைமையிலான புதிய கூட்டணி ஒன்றை அமைத்து அதன் மூலம் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.மகிந்தவின் காய் நகர்த்தல்களும் நரித்தனமானது.அவரின் அசைவினை கூர்ந்து அவதானிக்க வேண்டிய தேவையும் உண்டு.புதிய கூட்டணியை உருவாக்கி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரன் கோத்தாபாயவை களம் இறக்குவதற்கான காய் நகர்த்தல் மேற்கொள்ளப்படுகிறது.கோத்தாபாய களம் இறக்கப்பட்டால் அவருக்கு சவாலான ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி களமிறக்க வேண்டும்.சவாலான வேட்பாளர்களை ஐக்கிய தேசிய கட்சிக்குள் தேடுவது இலகுவான காரியமல்ல அது கடலுக்குள் முத்தெடுப்பதை விட கடினமான விடயம்.

மீண்டும் பொதுவேட்பாளர் தெரிவு

ஐ.தே.க சவாலான ஜனாதிபதி வேட்பாளரை தேடி முடிவு கிட்டா விடத்து பழைய வழியை நாட வேண்டிய நிலையே ஏற்படும்.பழைய வழி என்பது பொது வேட்பாளர் தெரிவாகும்.பொது வேட்பாளரை தேடும் போது மீண்டும் கண்களுக்குள் தெரிவது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே.தெரிவு மைத்திரிபாலவாக இருந்து அதற்கு அவர் இணக்கம் தெரிவிப்பாரா அல்லது மறுப்பாரா என்பதை அவரின் மெளனம் கலையும் போதே தெரியவரும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *