Breaking
Fri. Nov 22nd, 2024

சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்கள் மறந்து ஒன்றுபட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. வில்பத்து, பொத்தானை போன்ற சம்பவங்கள் அதற்கு சிறந்த உதாரணங்களாகும். இவ்வாறான முஸ்லிம் விரோத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவற்றுக்கு அரசியல் ரீதியில் நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். நாடாளுமன்றத்தில் 21 முஸ்லிம் எம்.பிக்கள் இருந்த போதிலும் எம்மிடையே ஒற்றுமை இல்லை. அதனாலேயே இந்நிலை உருவாகியுள்ளது.  ஒவ்வொரு பிரச்சினையும் ஒவ்வொருவரும் தனித்தனியாக பேசுவதால் எந்த பலனும் – தீர்வும் கிடைக்கப்போவதில்லை.

இந்நிலை மாற வேண்டும். வில்பத்து, பொத்தானை மாத்திரமல்ல முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து பிரச்சினைகளையும் பொதுவான பிரச்சினையாக பார்த்து அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு நாங்கள் ஒன்றுபட்டால் மாத்திரமே எமக்கு எதிரான சவால்களை முறியடித்து நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்களை மறந்து ஒன்றினைவது சமூக நோக்கத்துக்காகவே. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக அல்ல. தேர்தல் வரும் போது அவர் அவர் தத்தமது கட்சிகளினூடாக அரசியல் மேற்கொள்ளட்டும். ஆனால், சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஒற்றுமையாக எதிர்கொள்வதே காலத்தின் தேவையாகவுள்ளது.

இது தொடர்பில் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஒற்றுமையை அது வலியுறுத்த வேண்டும். அதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். – என்றார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *