Breaking
Sun. Nov 24th, 2024

(அமைச்சின் ஊடகப் பிரிவு )
மன்னாரில் மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களுக்கு மீளச் சென்று குடியேறியுள்ள முஸ்லிம்களே வில்பத்து வனசரணாலயத்தை பாதுகாத்து வருகின்ற போதும் அவர்கள் வாழ்ந்த பூர்வீகக் காணிகள் வனவளத்திணைக்களத்தினால் 2012இல் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வனவளத்துக்குரியதாக பிரகடனப்படுத்தப்பட்டமை மிக மோசமான நடவடிக்கை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


வில்பத்துதொடர்பாக எங்கள் மீது அபாண்டங்கள் சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறை அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் கூறியதாவது.

வில்பத்து வனசரணலாயத்தின் இன்னுமொரு முகப்புப் பகுதியான புத்தளம், இலவங்குள பிரதேசத்தில் கொழும்பிலுள்ள குப்பை கூளங்களை கொட்ட எடுக்கும் முயற்சிகளைக் கைவிட்டு அந்தப் பிரதேசத்தை மேம்படுத்தி சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்குமாறு அவர் வேண்டுகொள் விடுத்தார். அத்துடன் வில்பத்து சரணாலயத்துக்கு செல்வதற்கு வசதியாக முசலிப்பிரதேசத்தை அண்டியுள்ள பகுதியில் புதிதான நுழைவாயில் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியுமெனவும் அமைச்சர் யோசனை வெளியிட்டார்.

சுற்றுலாத்துறையின் வருகை 2020 ஆம் ஆண்டில் 3 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த வருடம் 1 மில்லியனாக இருந்த சுற்றுலாத்துறை இன்னும் 4 வருடங்களில் மூன்று மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கின்றது. யுத்தத்தகாலத்தில் வடக்குக் கிழக்கில் சுற்றுலாப் பயணிகள் செல்லக் கூடிய வாய்ப்பு மிகவும் அரிதாகவே இருந்தது. அழிவுக்குள்ளான அந்தப் பிரதேசத்தின் மீளக் கட்டுமாணப் பணிகளை முன்னெடுப்பதன் மூலமே சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்த்துக் கொள்ள முடியும். அதே போன்று சுற்றுலாத் துறையில் அதிகமான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு நமக்கிருக்கின்றது.

கிழக்கிலே பாசிக்குடா, பொத்துவில் ஆகிய சுற்றுலாத் துறைக்கு புகழ் பெற்ற பிரதேசங்களும், வடக்கிலே மன்னாரில் மன்னார்த்தீவு, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சுற்றுலாத் துறைக்கு பெயர்பெற்ற இடங்களும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். வடக்கிலே சுற்றுலாத் துறையை மேம்படுத்த சுற்றுலாக் கல்விக் கல்லூரி ஒன்றை அமைத்துத் தருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். உலக வங்கியின் உதவியுடன் ஐ. எப். சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரச அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று சுற்றுலாத்துறை தொடர்பாக மன்னார்த்தீவில் மேற் கொண்ட ஆய்வுகளின் அறிக்கையை நாங்கள் இப்போது சமர்ப்பித்துள்ளோம்.

இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து முன்னேற்றகரமான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் வாக்குறுதியளித்துள்ளார்.

கொழும்பிலும் மற்றும் வடக்கு, கிழக்கிலும் சுற்றுலா கண்காட்சி நிலையங்களை அமைத்து அரிய பொருட்களை காட்சிப் படுத்துவன் மூலம் இவற்றை சந்தைப் படுத்துவதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அமைச்சர் ரிஷாட் குறிப்பிட்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *