நூர் தகாவ்ரி டிவி செய்தியாளர். இருபத்திரண்டு வயதான லிபியா வம்சாவளியைச் சேர்ந்தவர். படித்தது வளர்ந்தது அமெரிக்காவில். ஹிஜாபுடன் அமெரிக்க டி.வி.யில் பேட்டி தரும் முதல் இஸ்லாமியப் பெண்மணி என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்ந்தவர்.
ரேடியோ ஜாக்கியாக, டிவி செய்தியாளராக மாறிய நூர், இஸ்லாமிய மரபுப்படி முகம் மட்டும் தெரியும்படி உடை உடுத்திவருகிறார்.
பல விஐபிகளுடன் நூர் இஸ்லாமிய உடையில் நடத்திய பேட்டி, சானல்களில் ஒளிபரப்பாகி, நூரும் பிரபலமாகவே.. இதர செய்தியாளர்கள் நூரைப் பேட்டி எடுத்தனர். “பிளேபாய்´ பத்திரிகையும் நூரை அணுகியது. பிளேபாய் பத்திரிகைக்கு முழுக்க முழுக்க உடல் மறைத்து பேட்டி தந்த முதல் பெண்மணி என்று நூர் பெயர் பெற்றிருக்கிறார். இந்தப் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.
பொதுவாக இஸ்லாமிய பெண்களின் மத்தியில் ஹிஜாப் அணிந்து கூந்தலை மறைப்பதும், புர்கா அல்லது புர்கினி (பெரிய கவுன் மாதிரியான உடை) தரித்து உடலை மூடுவதும் பெருகி வருகிறது. துபாய் நீங்கலாக வளைகுடா நாடுகளில் ஹிஜாப், புர்கினி அணிவது கட்டாயம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இந்த ஹிஜாப், புர்கா அணிதல் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது. பிரான்ஸ் நாட்டில் புர்கா, ஹிஜாப் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக்சில் எகிப்து நாட்டு இளம் பெண்கள் ஹிஜாப் அணிந்ததுடன் முகம் தவிர்த்து உடல் மறைக்கும் ஆடை அணிந்து பீச் வாலிபால் ஆடினர். அதே சமயம் எதிர் அணியில், டூ பீஸ் பிகினி அணிந்து இதர பெண்கள் அணியினர் விளையாடினார்கள். எகிப்தியப் பெண்களை அனைத்து செய்தி ஊடகங்களும் ஹைலைட் செய்திருந்தன.
ரஹப் காதிப். முப்பத்திரண்டு வயதாகும் இவர் ஓர் அமெரிக்க இஸ்லாமியர். மூன்று குழந்தைகளுக்குத் தாயானாலும் காதிப் ஆறு முறை ஓடியிருக்கும் மாரத்தான் வீராங்கனை. காதிப்பை அங்கீகரிக்கும் விதமாக ‛Womens Running’ என்ற பெண்களுக்கான பிரபல ஃபிட்னெஸ் பத்திரிகை, காதிப் படத்தை அட்டையில் பிரசுரித்து கெளரவித்துள்ளது.
சர்வதேச அளவில் ஆடைகள் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ‛H & M’ நிறுவனம், ஹிஜாப் உடையை பிரபலப்படுத்த முதல் தடவையாக இஸ்லாமிய பெண்ணான மரியா இட்ரிஸ்ஸியை மாடலாக்கி விளம்பரம் செய்தது.
பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான டொமினிகோ டோல்ஸ், ஸ்டெபானோ காபன்னா போன்றோர் ஹிஜாப், புர்கினி உடைகளை வடிவமைத்து விற்பனைக்கு விட ஆரம்பித்து விட்டனர். டாமி ஹில்பிஜெர், DKNY, மேங்கோ போன்ற ஆயத்த ஆடை நிறுவனங்களும் ஹிஜாப், புர்கினி விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர். ஒரு பக்கம் ஹிஜாப், புர்கினி குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், வர்த்தக ரீதியாக ஹிஜாப், புர்கினியை வடிவமைத்து விற்பனை செய்வதில் பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
நியூயார்க்கில் சென்ற மாதம் நடந்த அழகிகளின் அணிவகுப்பில், ஹிஜாப், புர்கினி அணிந்த பெண்கள் கலந்து கொண்டு அசத்தினர். தாம்சன் ராய்ட்டர் நிறுவனத்தின் கணக்கெடுப்பு, இஸ்லாமியர்கள் தங்கள் பாரம்பரிய உடைகள் மற்றும் காலணிக்காக ஓர் ஆண்டில் சுமார் 266 பில்லியன் டாலர்கள் (17,555 பில்லியன் ரூபாய்) செலவு செய்கிறார்களாம். அது 2019 -ஆம் ஆண்டில் 488 பில்லியனாக உயரும் என்று கணித்திருக்கிறார்கள். இந்த டிரென்டைப் பயன்படுத்தி ஹிஜாப், புர்கினி உடைகளை விற்று கல்லா கட்ட வணிக நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன.
வணிகர்கள் வியாபாரத்தில் மத உணர்வுகளை பார்ப்பதில்லை. வியாபாரம்… விற்பனையை அதிகரித்தல் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம். ஹிஜாப், புர்கினிக்கு ஆங்காங்கே எதிர்ப்பு, தடை விமர்சனங்கள் இருந்தாலும், பல நாடுகளில் வணிகம் காரணமாக ஹிஜாப் புர்கினிக்கு அங்கீகாரம் தருகிறார்களோ இல்லையோ ஹிஜாப் புர்கினி விற்பனைக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து விட்டார்கள்.