தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரத் தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுக்கும்படியும் இனவாதிகளின் அச்சுறுத்தலிலிருந்து தம்புள்ளை பள்ளிவாசலையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தம்புள்ளை புனித பூமியில் இருக்கும் பள்ளிவாசலுக்கு மாற்றீடாக அப்பள்ளி வாசலை வேறோர் இடத்தில் இடமாற்றிக் கொள்வதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஒதுக்கியுள்ள காணி வழங்கப்படக் கூடாது எனக் கோரியும் எதிர்வரும் 19 ஆம் திகதி தம்புள்ளையில் இனவாதிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாருக்கு உத்தரவு வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ஜனாதிபதியைக் கோரியுள்ளார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி பள்ளிவாசலுக்கும் பள்ளிவாசல் காணிக்கும் எதிராக மேற்கொள்ளப்படவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர் எஸ்.வை.எம். சலீம்தீன் இராஜாங்க அமைச்சர் பௌஸியிடம் முறையிட்டதையடுத்தே அவர் இவ்விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் தெலியாகொன்னையிலும் நிக்கவெரட்டியிலும் இடம்பெற்ற பள்ளிவாசல் தாக்குதல்களையும் அமைச்சர் பௌஸி ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதுடன் இவ்வாறான தாக்குதல் சம்பவத்துக்கான பின்னணியை கண்டறிய உளவுப் பிரிவினரைப் பயன்படுத்துமாறும் வேண்டியுள்ளார்.
தம்புள்ளை பள்ளிவாசல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி அப்பகுதி பௌத்த குருவின் தலைமையிலான குழுவினரால் தாக்குதலுக்குட்பட்டது. தாக்குதலுக்கு முன்னைய தினம் ஏப்ரல் 19 ஆம் திகதி இவ்வாறான தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை விடுத்தும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காமையினாலேயே அடுத்த தினம் பள்ளிவாசல் தாக்கப்பட்டமையையும் அமைச்சர் பௌஸி ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இதேவேளை தம்புள்ளை பள்ளி விவகாரத்தில் தீர்வொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காகவும் ஜனாதிபதிக்கு இதற்கான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காகவும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மேற்கொண்டுள்ளார்.